{இனி மின் தடை இருக்காது : செந்தில் பாலாஜி உறுதி!

Published On:

| By Balaji

தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால், இனி மின் தடை இருக்காது என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகளவில் மின் தடை ஏற்படுவதாக புகார் வந்தது. கடந்த ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. அதனால், மரங்கள், செடிகள் வளர்ந்து மின்கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் போன்ற உயிரினங்கள் மின்சாரக் கம்பியில் தாவி செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின் தடை ஏற்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இது விவாத பொருளாக மாறியது மட்டுமில்லாமல், அமைச்சர் மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.

இந்நிலையில், இனிமேல் தமிழகத்தில் மின் தடை இருக்காது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று(ஜூன் 29) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “கடந்த காலங்களில் நடந்த தவறான நிர்வாகத்தினால் மிக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மின் வாரியத்தை மீட்டெடுக்க தேவையான பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் முதல்வர் வழங்கியிருக்கிறார். அதன் அடிப்படையில் மின் வாரியத்தை மேம்படுத்தும் பணிகளை தொடங்கியிருக்கிறோம். மின்வாரியம் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையில் ரூ. 2,000 கோடியை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

2006-11 ஆண்டுகளில் கலைஞரால் கொண்டுவரப்பட்ட பல மின் திட்டங்கள் கடந்த பத்தாண்டுகளாக செயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. அந்தத் திட்டங்களையெல்லாம் உடனடியாக செயல்படுத்த வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளர்.

கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்து புதிய வடிவில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு மின் தேவை அதிகரித்துள்ளது, என்பதை கணக்கிட்டு வருங்காலங்களில் எவ்வளவு அதிகரிக்கக்கூடும் என்பதை கணித்து அதற்கு ஏற்ப மின் உற்பத்தியை செய்ய இருக்கிறோம். நம்முடைய தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொண்டால்தான் அது மின் மிகை மாநிலம். தமிழகத்தில் 4,23,000 மின் இணைப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்ற நிலையில், தமிழகத்தை எப்படி மின்மிகை மாநிலம் என்று கூற முடியும்?

திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 2,04,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 2,08,000 விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.எந்த காலத்தில் மின் வாரியம் சிறப்பாக செயல்பட்டது என்பதை நீங்களாகவே தெரிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சிஏஜி அறிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன. நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன். கடந்த காலங்களில் நடந்த குளறுபடிகள், மின்வாரியத்திற்கு ஏற்பட்ட அதிகமான செவிலனங்கள், அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ததால் ஏற்பட்ட இழப்புகள் இதுதான் சிஏஜியின் அறிக்கையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஆட்சியில் எந்தவொரு புதிய மின் திட்டங்களும் உருவாக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மின் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன. இனி மாதாந்திர பரமாரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும். இதற்காக அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இனி தமிழகத்தில் மின் தடை இருக்காது.

தமிழக அரசின் மீது குறிப்பாக மின் துறை மீது பூதக்கண்ணாடி அணிந்து, என்ன குறை கூறலாம் என்று தேடுகின்றனர். சமூக வலைதளங்களில் பொத்தம் பொதுவாக மின் தடை என்று சொல்லாமல், எந்த இடங்களில் மின் தடை என குறிப்பிட்டு சொன்னால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த கால ஆட்சியில் மின் வாரியத்தில் ஏற்பட்ட தவறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்ற வரி ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் துறை செயல்படும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share