நாட்டை விட்டு வெளியேறமாட்டேன்: உக்ரைன் அதிபர்!

politics

ரஷ்ய தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்ரைனுக்கு உடனடி நிதியுதவி அளிக்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

மூன்றாவது நாளாக உக்ரைன்-ரஷ்ய போர் நீடித்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தங்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போது யாரும் உதவமுன்வரவில்லை. நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். எங்களுக்கு உதவ யாரும் இல்லை என்று உக்ரைன் அதிபர் உருக்கமாக பேசியிருந்தார்.

இதற்கிடையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் புறக்கணித்தது.

பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களில், 11 பேர் ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இருப்பினும், ரஷ்யா தன்னுடைய வீட்டோ அதிகாரம் மூலமாக இந்த தீர்மானத்தை முறியடித்தது.

இது உக்ரைனுக்கு மேலும் கவலை அளித்த நிலையில், ஸ்வீடன் நாடு உதவி செய்ய முன்வந்தது. ராணுவம், தொழில்நுட்பம் மற்றும் மனிதாபிமான உதவிகளை கொடுக்க ஸ்வீடன் நாடு சம்மதித்திருக்கிறது என்று உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உக்ரைனின் ஒட்டுமொத்த உடனடி தேவைக்காக 250 மில்லியன் டாலரும், பாதுகாப்பு ,கல்விக்காக 350 மில்லியன் டாலரும் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் தலைநகர் கீவ்-வில்தான் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தங்கியுள்ளார். மேலும், தன் உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியது. இதை ஏற்க மறுத்த உக்ரைன் அதிபர் எக்காரணத்தைக் கொண்டும் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன். எனக்கு தேவை ஆயுதங்கள்தான், பயணம் அல்ல என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, இன்று காலையில் உக்ரைன் அதிபர் வெளியிட்ட வீடியோவில், “நான் உக்ரைன் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக சில வதந்திகள் கிளப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் எங்கள் ஆயுதங்களை கீழே போட போவதில்லை. எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க போவதில்லை. இது எங்கள் நாடு, அனைவரையும் பாதுகாப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் தலைநகருக்கு வடக்கே உள்ள கீவ் நீர்மின் நிலையத்தை ரஷ்ய படைகள் கையகப்படுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை 3,500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 200 பேர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதுவரை ரஷ்யாவுக்கு சொந்தமான 14விமானங்கள் 8ஹெலிகாப்டர்கள் மற்றும் 102 டாங்கிகளை அழித்துள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *