xஅரசியல்: ரஜினியை மிஞ்சும் ரஜினி மன்றத்தினர்!

Published On:

| By Balaji

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் கூட ஜெயலலிதா பாணியில் மக்கள் மன்றத்தில் களையெடுப்பு துவங்கி இருப்பதுதான் பலரது புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.

’நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார் நடிகர் ரஜினி. அதற்கு பிறகு அவரது ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டது. மக்கள் மன்றத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கவே உறுப்பினர் சேர்க்கை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மன்றத்தில் இப்போதைக்கு யாரும் நீக்கப்படவோ, சேர்க்கப்படவோ மாட்டார்கள் என அறிவித்தார் மன்ற தலைமை நிர்வாகி சுதாகர்.

ஆனால் அதே சுதாகர்தான் இப்போது சிலரை கட்டம் கட்டுவதற்கான வேலைகளில் மறைமுகமாக இறங்கி இருக்கிறார் என்பதுதான் ரசிகர்களின் குரலாக இருக்கிறது.

இதுபற்றி வடசென்னை ரஜினிமக்கள் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

“வடசென்னை மாவட்ட தலைவர் சந்தானம் மன்ற நிர்வாகி சுதாகருக்கு மிக நெருக்கம். இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் சந்தானம், தனக்கு எதிரானவர்களை மன்றத்தில் இருந்து நீக்கும்படி லிஸ்ட் போட்டு சமீபத்தில் சுதாகரிடம் கொடுத்திருக்கிறார். சந்தானத்துக்கு தலைவரின் நீண்டகால விசுவாசிகளை பிடிக்கவில்லை. தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை மன்றத்தில் இருந்து தூக்கிவிட வேண்டும் என நினைக்கிறார். குறிப்பாக ‘கொரோனா’ ஆரம்பித்து அரசால் ‘லாக்டவுன்’ அறிவிக்கப்பட்ட பிறகு இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் எதுவும் வழங்குவதில் சந்தானம் ஆர்வம் காட்டவில்லை. வீட்டிலேயே முடங்கிக்கொண்டார். அதேசமயத்தில் மன்ற நிர்வாகிகள் வழங்கிய நலத்திட்ட உதவிகளை தனது ஆலோசனையின் பேரில் வழங்கியதாக சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு விளம்பரம் தேடிக்கொண்டார். இதுதான் புகைச்சலையும், உரசலையும் ஏற்படுத்தியது.

இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்டவர்களை மன்றத்தில் இருந்து நீக்குவதற்காக வட சென்னைக்குட்பட்ட 8 பகுதி செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். பிறகு மாவட்ட செயற்குழுவையும் கூட்டி பேசியிருக்கிறார் சந்தானம். அவர்களிடம் லோக்கலில் நடக்கும் பிரச்னைகளை கூறிய சந்தானம் ’மாஜி மாவட்ட துணை செயலாளர் சேத்துப்பட்டு ரவி, மாவட்ட துணை செயலாளர்கள் எழிலரசு, ஷாஜி செயற்குழு உறுப்பி னர் ஜோதி உட்பட சிலரை மன்றத்தில் இருந்து நீக்க முடிவு செய்திருக்கிறேன். இதற்கு ஆதரவு தெரிவித்து நீங்கள் கடிதம் கொடுங்கள். இதை சுதாகரிடம் கொடுத்து அவர் வழியாகவே முறையான அறிவிப்பை வெளியிடப்போகிறேன். யாருக்கும் நீங்கள் பயப்பட வேண்டாம்’ என சொல்லி அவர்களிடம் தனக்கு எதிரானவர்களை பற்றி புகார் எழுதி அதை வாங்கி வைத்திருக்கிறார்.

இதுகுறித்து சுதாகரிடம் பேச நாங்கள் பலமுறை முயற்சி செய்தோம். ஆனால் அவர் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார். எனவே தலைவரை (ரஜினிகாந்த்) சந்தித்து லோக்கலில் நடக்கும் பிரச்னைகளை மனுவாக கொடுக்க இருக்கிறோம். உரிய விசாரணை நடத்திய பிறகே தலைமை எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை” என்கிறார்கள் வேதனையாக.

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று யார் சொன்னது? அவரது மக்கள் மன்றத்தினர் என்றைக்கோ அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்!

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share