மயிலாடுதுறை மாவட்டம்: அதிமுகவுக்குள் அதிகாரப் போட்டி!

politics

ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை புதிதாக மார்ச் 24ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார். கொரோனா வைரஸ் பதற்றத்துக்கு இடையிலும் இந்த அறிவிப்பை கேட்டு மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி தொகுதி மக்கள் ஆனந்தத்தில் இருக்கிறார்கள்.

**மாயூர யுத்தம்**

மயிலாடுதுறை மாவட்டத்துக்கான அவசியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தி பல போராட்டங்கள் இயக்கங்கள் நடத்திய எழுத்தாளரும் பத்திரிகையாளரும் மாயூரம் யுத்தம் இயக்கத்தின் தலைவருமான கோமல் அன்பரசனிடம் பேசினோம்.

மயிலாடுதுறை மாவட்டம் அறிவித்த தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். சாதாரண நிலையில் இருந்தால் மூன்று மாதத்தில் புதிய மாவட்டம் நடைமுறைக்கு வந்துவிடும். ஆனால் இந்த கொரோனா சூழலில் இன்னும் சில மாதங்கள் ஆகலாம். நிர்வாக ரீதியாக இந்த கொரோனா தாக்கம் முடிந்த பிறகுதான் மாவட்ட வேலைகள் தீவிரம் பெறும் என்று கருதுகிறேன்.

அதேநேரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு சாதகமான விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று…. நாகை மாவட்டத்தின் அந்தப் பகுதியை இங்கே சேர்க்க வேண்டும் இந்தப் பகுதியை அங்கே சேர்க்க வேண்டும் என்ற பிரச்சினையே இங்கு இல்லை. ஏனெனில் ஏற்கனவே மாவட்டம் புவியியல் ரீதியாகவே இரண்டு துண்டாகத்தான் இருக்கிறது. அதாவது இதுவரையிலான நிலைமையில்… மயிலாடுதுறையில் இருந்து மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினம் செல்ல வேண்டுமென்றால் இன்னொரு மாநிலத்தின் பகுதியான காரைக்கால் வழியாக சென்று டோல் கேட் கட்டணம் கட்டி செல்ல வேண்டும். இல்லையென்றால் திருவாரூர் மாவட்டத்தின் வழியாக செல்ல வேண்டும். அதனால் மயிலாடுதுறை, பூம்புகார் சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் இயல்பாகவே மயிலாடுதுறை மாவட்டமாக மலர்ந்துவிடுகிறது.

அடுத்து கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட புதிய மாவட்டத்துக்கான அலுவலகங்கள் அண்மையில் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் எல்லாம் ஒரு பிரச்சினையாக கருதப்படுகிறது. ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அந்த பிரச்சினையே இல்லை. ஏனென்றால் தர்மபுரம் ஆதீனம் தங்களது இடத்தை மாவட்ட அலுவலகத்துக்காக தருவதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் இரு இடங்களை அரசிடம் சொல்லியிருக்கிறார்கள். எந்த இடம் என்பதை அரசுதான் தீர்மானிக்கும். இது எங்கள் கால் நூற்றாண்டு கால கனவு. விரைவில் நனவாகிறது” என்றார் கோமல் அன்பரசன்.

**அதிகார யுத்தம்**

மயிலாடுதுறை புதிய மாவட்டம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதிமுகவில் பொதுவாக பல மாவட்டங்கள் இரண்டு பிரிவுகளாக இருக்கின்றன. ஆனால் நாகை மாவட்டம் இதுவரை ஒருங்கிணைந்த ஒரே மாவட்டம் ஆகவே அதிமுக கட்சி அளவில் இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்ட அதிமுகவுக்கு ஒற்றைச் செயலாளராகவும், அமைச்சராகவும் அதிகாரம் மிக்கவராக இருக்கிறார் ஓ.எஸ் மணியன். இப்போது வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓ.எஸ். மணியன் மாவட்ட பிரிவினைக்குப் பிறகு நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு மட்டுமே செயலாளராக இருக்க முடியும். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட அதிமுகவுக்கு புதிய செயலாளர் தான் வரவேண்டும். எனவே மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிமுகவில் யார் மாவட்டச் செயலர் என்ற போட்டி தொடங்கி விட்டது.

இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் பேசினோம்.

“இவ்வளவு நாள் மயிலாடுதுறை மாவட்டம் உதயமாவதை தடுத்து நிறுத்தி வந்ததில் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஓ எஸ் மணியனுக்கும் பங்கு உண்டு. தன்னுடைய ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் என்ற அதிகாரம் குறைவது ஒரு பக்கம் என்றால் கொள்ளிடம் மணல் குவாரி மூலம் கிடைக்கும் அபரிமிதமான வருமானம் கைவிட்டுப் போகும் என்பது தான் இதற்கு காரணம்.

மயிலாடுதுறை மாவட்டத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட பல போராட்டங்களில் ‘உங்கள் மணல் வருமானத்துக்காக எங்கள் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடாதீர்கள்’ என்று ஓ எஸ் மணியன் பெயரை குறிப்பிட்டே பேசியிருக்கிறார்கள்.

அதேநேரம் அண்மையில் துவக்கப்பட்ட நாகை மாவட்ட மருத்துவக்கல்லூரி மயிலாடுதுறை பகுதிக்கு வரவில்லை என்பதால் இப்பகுதி மக்கள் அரசின் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக உளவுத்துறையினர் வலிமையான குறிப்புகளை அனுப்பினார்கள்.

அரசியல் ரீதியாக ஓஎஸ் மணியனுக்கு எதிர் நிலையில் அரசியல் செய்து வரும் வன்னியர் சமூக அதிமுக புள்ளிகள் முதல்வரிடம் தனி மாவட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். எல்லாம் சேர்ந்துதான் மயிலாடுதுறை மாவட்டம் இப்போது உருவாக்கப்பட்டிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தின் அதிமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ், மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் ஆகியோர் காய் நகர்த்தி வருகிறார்கள்” என்று முடித்தனர் அதிமுகவினர்.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கான மாயூர யுத்தம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்து, அதிமுகவுக்குள் அதிகார யுத்தம் தொடங்கியிருக்கிறது.

**ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *