நீட் குறித்து விவாதிக்க தயார்: ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால்!

politics

நேற்று ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “காங்கிரசும் திமுகவும் சேர்ந்துதான் நீட் தேர்வையே கொண்டு வந்தார்கள் என்று கூசாமல் பொய் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் வந்தது. இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க நான் தயார். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்தத் தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடந்ததென்று சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் திராணி உள்ளதா?” என்று சவால் விட்டிருந்தார்.

நீட் தேர்வு குறித்து விவாதிக்க நானும், ஓபிஎஸ்ஸூம் தயார் என்று எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் சவால் விட்டுள்ளார்.

இன்று(பிப்ரவரி 11) மதுரை மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “ அதிமுகவின் கோட்டையான மதுரையில் இன்று பிரச்சாரம் செய்கிறேன். அதிமுக ஆட்சியின் காலத்தில்தான் மதுரை மாநகராட்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. இந்த தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தால்தான், இருக்கின்ற திட்டங்களை செம்மைப்படுத்தி மேலும் வளப்படுத்த முடியும். திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், இருக்கின்ற அனைத்தையும் கொள்ளையடித்து சென்றுவிடுவார்கள். கடந்த 9 மாத கால ஆட்சியில் என்ன செய்தார்கள். அனைத்து துறைகளிலும் ஊழல்…ஊழல் இல்லாத துறையே இல்லை. திமுக கொள்ளையடிப்பதற்குதான் ஆட்சிக்கு வந்திருக்கிறது என்று மக்கள் பார்க்கின்றனர். மக்களுக்கு நன்மை செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலின் பல்வேறு சவால்களை விட்டு கொண்டிருக்கிறார்.

நேற்றுக் கூட காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர், நீட் தேர்வு யாருடைய காலத்தில் வந்தது என்பது குறித்து விவாதிக்க எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் தயாரா? என்று சவால் விட்டார். நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கே வர வேண்டும் என்று சொல்லுங்கள்? ஒரு பொது இடத்தில் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம். அங்கு நீட் தேர்வு குறித்து அலசி, ஆராய்ந்து நீங்களும் பேசுங்கள், நாங்களும் பேசுகிறோம், மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவார்கள். யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள். எதையாவது சொல்லி தப்பித்துவிடலாம் என்று பார்க்கிறார்கள்” என்று கூறினார்.

“2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது என்ன வாக்குறுதிகள் கொடுத்தீர்கள். தற்போதைய முதல்வர், அவரின் மகன் உதயநிதி மற்றும் தற்போதைய அமைச்சர்கள் என்னென்ன சொல்லி வாக்கு சேகரித்தார்கள் என்பதை பதிவு செய்து வைத்திருக்கிறோம். திமுக ஆட்சி அமைந்தவுடன், முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன, இன்னும் நீட் தேர்வை ரத்து செய்யமுடியவில்லை. எல்லாம் பச்சைப் பொய். ஏற்கனவே சொன்னதுபோல், பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமெனில், அது ஸ்டாலினுக்குதான் கொடுக்க வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருந்தார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து வலியுறுத்துவதுதான் அந்த ரகசியம் என்று பிரச்சாரக் கூட்டத்தில் சொல்கிறார். இதற்கு உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும். எப்படியெல்லாம் மாற்றி பேசுகிறார்கள். கவர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்ட பின்பு, பேசிய வார்த்தைகளை அப்படியே மாற்றுகின்றனர்.
ஆகவே, நீட் தேர்வு குறித்து பொது இடத்தில் வைத்து விவாதிக்க நானும், ஓபிஎஸ்ஸூம் தயாராக இருக்கிறோம். நீங்கள் தயாரா? சும்மா பேசிவிட்டு தப்பிக்கெல்லாம் முடியாது. சவால் விட்டால் சவால்தான் என்று” முதல்வருக்கு பதில் சவால் விட்டுள்ளார்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *