மருந்தை விட மக்கள்தான் எனக்கு உற்சாகம்: முதல்வர்!

politics

திருப்பத்தூரில் ரூ. 109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 29) திறந்து வைத்தார். 6,820 பயனாளிகளுக்கு ரூ. 103.42 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடந்த 25ஆம் நாளன்று இந்த விழா நடந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த வாரம், லேசான காய்ச்சல் எனக்கு ஏற்பட்டு, அது முழுமையாகக் குணமாகாத காரணத்தால், மருத்துவர்கள் “ஒரு சில நாட்கள் ஓய்வெடுப்பது நல்லது” என்று எனக்கு உத்தரவிட்டதால், அந்த குறிப்பிட்ட தேதியில் என்னால் வர முடியவில்லை.

ஆனால், இன்றைய நாள் புதிய உற்சாகத்தோடு உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். மருந்து, மாத்திரைகளைவிட மக்கள் முகங்களைப் பார்க்கும்போதுதான், எனக்கு உற்சாகமும் மலர்ச்சியும் ஏற்படுகிறது.

வரும் வழியில் சில தாய்மார்கள், சில இளைஞர்கள் என்னை நிறுத்தி, என் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டார்கள், “உடம்பு எப்படி இருக்கிறது, முதலில் அதைச் சொல்” என்று சொன்னார்கள். அதுதான் என்னுடைய மெய் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது. நான் சொன்னேன், நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? இந்த ஆட்சி எப்படி நடக்கிறது? ஏதாவது குறை இருக்கிறதா? குற்றம் இருக்கிறதா? என்று சொல்லுங்கள் என்று கேட்டபோது, எந்தக் குற்றமும் கிடையாது, குறையும் கிடையாது, முதலில் நீங்கள் ஓய்வு எடுங்கள் என்று தான் சொன்னார்கள். அவர்களுடைய சிரிப்பைப் பார்த்தேன்” என்றார்.

கடந்த ஓராண்டுக் காலத்தில் திருப்பத்தூரில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், “இந்த திராவிட மாடல் ஆட்சி என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளது. எப்போதுமே இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாகத் தமிழ்நாடுதான் இருந்திருக்கிறது. இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, விடுதலை முழக்கத்தை முதன்முதலாக ஒலித்த மண் இந்தத் தமிழ்நாட்டு மண். அதுவும் உங்கள் மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் வேலூரில் தான் முதன் முதலில் புரட்சியே தொடங்கியது.

இன்றைக்கு இந்தியா முழுக்க சமூகநீதியின் குரல் ஒலிக்கிறது. பல்வேறு மாநிலங்களில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சமூகநீதித் தத்துவத்தை முதன்முதலாக 1920-ஆம் ஆண்டே அமல்படுத்தியது தமிழ்நாடுதான்.

இன்றைக்கு இந்தியா முழுக்க மாநில சுயாட்சிக் குரல் ஒலிக்கிறது. பா.ஜ.கட்சி நீங்கலாக அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுப்பவர்களாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மாநில சுயாட்சிக்காக, 1974-ஆம் ஆண்டே தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் கலைஞர். இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, 27 விழுக்காடு இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

திமுக அரசு பேரறிஞர் அண்ணா தலைமையில் முதன்முதலில் 1967ஆம் ஆண்டு அமைந்தது. அண்ணா மூன்று முத்தான திட்டங்களை நமக்குக் கொடுத்தார். ஆனால் காலம் அவரை நம்மிடம் இருந்து பிரித்தது. இரண்டே ஆண்டுகளுக்குள் நம்மிடமிருந்து அவரை பிரித்தது.

அதன் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய திட்டங்களால் உருவானதுதான் இந்த நவீன தமிழ்நாடு!. இன்றைக்கு நாம் பார்க்கிறோமே இந்த தமிழ்நாடு, நவீன தமிழ்நாடாக பார்க்கிறோமே, இது தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு!

அப்போது, வெளிமாநிலத்திலிருந்து வந்த பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் இதனை ஆய்வு செய்து விட்டு சொன்னார்கள், ‘திராவிட முன்னேற்றக் கழகம் தனது எல்லையை தமிழ்நாட்டுடன் சுருக்கிக் கொண்டாலும், அவை முன்னெடுக்கும் தத்துவங்கள் இந்தியா முழுமைக்கும் ஏற்றவாறு அமைந்திருக்கிறது என்று எழுதிக் காட்டினார்கள். அந்த அடிப்படையில்தான், நாம் தமிழ்நாட்டை ஆண்டாலும், நாம் முன்னெடுக்கும் திட்டங்கள், அமல்படுத்தி வரும் திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் அவசியமான, முக்கியமானவையாக அமைந்திருக்கின்றன.

இப்படித் தொடர்ந்து மாவட்டத்துக்கான திட்டங்களை நான் அறிவிக்க இருக்கிறேன். இப்படி அனைத்து மாவட்டங்களையும் வளர்த்தெடுப்பதை முக்கியமாக நான் நினைக்கிறேன்.

மாவட்டங்களுக்கான பொதுவான திட்டங்களை அறிவித்தால் போதுமா? அதோடு கடமை முடிந்துவிடுகிறதா? இல்லை! ஒவ்வொரு தனிமனிதருடைய தேவையையும் நிறைவேற்றியாக வேண்டும். அந்த வகையில்தான் அனைத்து மக்களிடமும் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றையும் நான் நிறைவேற்றிக் கொண்டு வந்திருக்கிறேன்.

இதுதான் நாம் இன்றைக்கு பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறோமே, திராவிட மாடல் ஆட்சி இது தான்! இது தான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம்!

இந்த இலக்கணத்திலிருந்து இம்மியளவும் மாறாமல் இந்த ஆட்சி தொடர்ந்து பீடுநடை போடும். அப்படி நடந்தால், ஐந்தாண்டுக் காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தைத் தமிழ்நாடு நிச்சயம் பெறும். உங்கள் ஒவ்வொருவருடைய குடும்பமும் வளம் பெற வேண்டும்; நல்வாழ்வு பெற வேண்டும்; அதற்கு என்ன செய்ய வேண்டும்? நன்றாகக் கவனியுங்கள், உங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்! படித்த பின்னர் அவர்கள் வேலை தேடித் தவிப்பதைத் தடுக்கத்தான், சமீபத்தில், மாணவர்களுக்கான கல்வி வேலைவாய்ப்பிற்கான சிறப்புத் திட்டமான “நான் முதல்வன்” என்ற திட்டத்தை நான் துவக்கியிருக்கின்றேன்.

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு அது பெரிதும் உதவும். வாழ்க்கை வழிகாட்டி திட்டமாக, இளைஞர்களிடையே இந்தத் திட்டம் வரவேற்பை இன்றைக்குப் பெற்று வருகிறது. இப்படி, ஒவ்வொரு திட்டத்தையும், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் நலன் கருதியே, இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

உங்களின் வாழ்வு உயர, தமிழ்நாடும் உயரும். அத்தகைய பொற்காலத்தை உருவாக்குவதற்காகத்தான் எனது உடல் சோர்வைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், நான் உழைத்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் சொல்லட்டுமா, எனது சக்தியை மீறி உழைத்துக்கொண்டு இருக்கிறேன். நான் மட்டுமல்ல, அனைத்து அமைச்சர்களும் அப்படித்தான் செயல்பட்டு வருகிறார்கள். அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருமே அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

திருப்பத்தூர் மாவட்டத்திற்கான திட்டங்களை அறிவித்ததைத் தொடர்ந்து மாலையில் வேலூரில் ரூ. 53.13 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நாளை ராணிப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *