மாஜி அமைச்சர் மீதான வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!

politics

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தொடரப்பட்ட வழக்கில் விரைவாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். 2001 ஆம் ஆண்டு முதல் தர்மபுரி மாவட்டம் பாலகோடு தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதன்படி, கே.பி.அன்பழகன் உட்பட அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி என ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கே.பி.அன்பழகன் தேர்தலில் கணக்கு காண்பித்த சொத்துக்களின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விரைவாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் கே.பி.அன்பழகனுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *