பொறியியல், மருத்துவத்தைத் தவிர வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன: முதல்வர்

politics

பொறியியல், மருத்துவத்தைத் தவிரப் பல துறைகளிலும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 25) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் பிரிவுவாரியான பட்டம் மற்றும் பட்டப்படிப்பு, கல்லூரிகளை தேர்வு செய்வது குறித்து வழிகாட்டுதல் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவில் ஹெச்சிஎல் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஹெச்சிஎல் நிறுவனம் 2500 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களைத் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், அப்பயிற்சிக்கான முழு செலவினையும் அரசே ஏற்கும் எனவும், அம்மாணவர்கள் பட்ட மேற்படிப்பினை பயில வாய்ப்பும் வழங்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடந்த 5, 6 நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி புத்துணர்ச்சி அளிக்கிறது. நான் இங்கு முதல்வராக மட்டும் வரவில்லை. உங்களை எல்லாம் சொந்த பிள்ளைகளாக நினைத்து வாழ்த்த வந்திருக்கிறேன்.

நம்மை விட இந்த காலத்துப் பிள்ளைகள் மிக மிக விவரமானவர்கள். எல்லோரது கையிலும் மொபைல் போன்கள் இருக்கின்றனர். மேல் படிப்புகள் என்னென்ன உள்ளது என இணையத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் சூழல் உள்ளது. இருந்தாலும் உங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் உயர் கல்வியைத் தேர்வு செய்வது., எதிர்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது ஆகியவற்றை எடுத்துக்கூறும் நிகழ்ச்சிதான் கல்லூரி கனவு.

முதல்வர், மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு துறைகளிலும் முதல்வராக வரவேண்டும் என்பதற்காகவே தான் நான் முதல்வன் திட்டம். அரசுப் பள்ளிகளில் படித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்திராயன் புகழ் மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவராக இருந்த சிவன், தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் எனப் பலரும் அரசுப் பள்ளிகளில் படித்துக் கோலோச்சினர்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், உயர்கல்வி, வேலைவாய்ப்புடன் கைநிறைய ஊதியம் பெறுவது மட்டுமல்ல, மாநிலத்தை உயர்த்த உங்களது ஆற்றல் பயன்பட வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் மிக அதிகளவு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக இருக்கிறது. கல்வி அறிவு விகிதம், கல்வித் தரம் என்பது தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது.

இனி நீங்கள் எல்லாம் காலேஜ் ஸ்டூடண்ட் என கெத்தாக வலம் வரப் போகிறீர்கள். பள்ளியில் இருப்பது போல் கல்லூரிகளில் கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும், உங்களுக்கு அங்கே கூடுதல் பொறுப்பு வந்துவிடும். கல்லூரி காலத்தில் கவனத்தைச் சிதற விடாமல் இருக்க வேண்டும்.

பொறியியல், மருத்துவம் என்பது மிகச் சிறந்த படிப்புகள் தான். இந்த இரு கனவுகளோடு மட்டும் நின்றுவிட வேண்டாம். ஒவ்வொரு துறையிலும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆகவே கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அந்தந்த துறைகளில் மிகச் சிறந்த வல்லுநர்களாக ஆக வேண்டும். அதற்கான வழிகாட்டி நிகழ்ச்சிதான் இது” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சாதி, மதம், பொருளாதாரம் என அனைத்தும் வேறுபடும். ஆனால் அறிவு மட்டுமே நிலையானது. என்று தெரிவித்த அவர், அறிவு காரணமாகத்தான் இங்குப் பிறந்த திருவள்ளுவர் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறார். ஜெர்மனியில் பிறந்த கார்ல் மார்க்ஸ் உலகம் முழுவதும் போற்றப்படுவதும் அறிவால்தான்” என்று குறிப்பிட்டார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் 29.06.2022, 30.06.2022, 1.07.2022, 2.07.2022 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *