�சிறப்புக் கட்டுரை: ரஜினிகாந்த்: காட்சி அரசியலிலிருந்து கட்சி அரசியலுக்கு!

Published On:

| By Balaji

-ரவிக்குமார்

கட்சி தொடங்கப் போகிறேன் என்று ரஜினிகாந்த் மீண்டும் அறிவித்த நாளிலிருந்து அவர் கட்சி தொடங்குவதால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்ற விவாதத்தை ஊடகங்களில் முன்னிலைப்படுத்துவதற்கு பாஜக பெரும்பாடுபட்டு வருகிறது. திமுக வெற்றி பெறும் ,ஆட்சி அமைக்கும் என்ற எண்ணத்தை ஆட்டங்காண வைப்பதுதான் அவர்களுடைய இப்போதைய உத்தி. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதால் திமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகள் சிதறும் அதனால் அது ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைப் பெறுவது கடினமாகிவிடும் என்ற கருத்தைத் தொடர்ந்து ஊடகங்களில் அவர்கள் விதைத்து வருகிறார்கள். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் போட்டியிட்டால் எவ்வளவு சதவீத வாக்குகளைப் பெறுவார் என்ற புள்ளிவிவரங்களும் கூட இப்போது அவர்களின் ஆதரவாளர்களால் பரப்பப்படுகின்றன.

12 சதவீதத்துக்கு மேல் பெறுவார் 15 சதவீதத்துக்கு மேல் பெறுவார் என்றெல்லாம் யூகங்களை அவர்கள் பரப்பி வருகிறார்கள். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதால் யாருக்கு பாதிப்பு என்பதை ஆராய்வதற்குமுன் அவருடைய சமூகக் கூட்டாளிகள் யார் அரசியல் கூட்டாளிகள் யார் என்பதைப் பார்ப்பது அவசியம்.

**சமூகக் கூட்டாளிகள் யார்?**

எம்ஜிஆருக்கு இருந்ததைப்போல ரஜினிகாந்தின் சமூகக் கூட்டாளிகளாக ஏழை,எளிய கிராமப்புற மக்கள் இருப்பார்கள் என பாஜகவினர் கூறுகிறார்கள். எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீண்ட நாட்கள் பொறுப்பு வகித்தார். அது வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கு உழைத்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளைத் தனது திரைப்படங்கள் மூலமாகப் பிரச்சாரம் செய்தார். இவையெல்லாவற்றையும் தாண்டி தான் ஏழை மக்களின் நண்பன் , இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் வள்ளல் என்ற நம்பிக்கைகளை பொதுப்புத்தியில் பதியச்செய்தார். தனியாகக் கட்சி ஆரம்பிக்கும் போது இவைதான் அவருக்கு பக்கபலமாக இருந்தன. அவருடைய சமூக கூட்டாளிகளாக சமூகத்தின் கடைநிலை மக்கள், ஏழை எளியவர்கள், பெண்கள் அதிலும் குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் மாறுவதற்கு பொதுப்புத்தியில் பதிந்திருந்த அந்த நம்பிக்கையே அடித்தளமிட்டது.இந்த சமூகக் கூட்டாளிகள் இருந்ததால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வலிமையான கட்டமைப்பு கொண்ட ஒரு இயக்கத்தை அவரால் தோற்கடிக்க முடிந்தது.

ரஜினிகாந்த்துக்கு இத்தகைய சமூக கூட்டாளிகள் இருக்கிறார்களா என்று நாம் பார்க்க வேண்டும். அவர் எம்ஜிஆரைப் போல நீண்ட நெடிய அரசியல் பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை. தனது திரைப்படங்களிலும் கூட எந்தவொரு கருத்தையும் அவர் முதன்மைப்படுத்திப் பிரச்சாரம் செய்யவில்லை. ஏழைகளின் நண்பனாகவோ பெண்களின் பாதுகாவலனாகவோ அவர் ஒருபோதும் தமிழ்ச் சமூகத்தில் கருதப்படவில்லை. தான் நடித்த திரைப்படங்களில் தலைமுடியை ஒதுக்குவது, கண்ணாடியை சுழற்றி மாட்டுவது என்பனபோன்ற ’அபாரமான’ சாதனைகளைச் செய்து ‘ஸ்டைல் மன்னன்’ என்று பெயரெடுத்திருக்கிறாரே தவிர அவர் ஒரு திறமையான நடிகர் என்றுகூட தமிழ்ச் சமூகம் அவரை ஏற்றுக்கொண்டதில்லை.

எனவே எம்ஜிஆரைப்போல ஏழை எளிய மக்கள் அவரைத் தமது நண்பனாகப் பார்ப்பதற்கு எந்தவொரு நியாயமும் இல்லை. பெண்கள் ரஜினிகாந்தை தமது பாதுகாவலராகப் பார்ப்பார்களா என்றால் அதற்கான நியாயமும் அவரிடத்தில் இல்லை. ஆன்மீக அரசியல் என்று பேசி, தன்னை ஒரு இந்துத்துவ சார்பாளராக ரஜினிகாந்த் காட்டிக் கொள்வதால் சிறுபான்மை சமூகத்தினரான கிறித்தவர்களும் முஸ்லிம்களும் அவரை சமூகக் கூட்டாளிகளாக ஏற்க வாய்ப்பே இல்லை. திராவிட கருத்தியலை எதிர்க்கிறார் என்ற காரணத்தினால் அவரை பிராமணர்களில் சிலர் தமது நண்பனாகப் பார்க்கலாம். அவர்களும்கூட கமல்ஹாசனா ரஜினிகாந்த்தா எனக் கேட்டால் கமல்ஹாசனைத்தான் ஆதரிப்பார்கள்.

**அரசியல் கூட்டாளிகள் யார்?**

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகச் சொன்னார். அப்படி தனியாக போட்டியிட்டால் அவருக்கு அரசியல் கூட்டாளிகள் என எவரும் தேவைப்பட மாட்டார்கள். ஆனால் ஒரு கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று முடிவு செய்தால் அவருக்கு யார் இப்போது அரசியல் கூட்டாளிகளாக இருப்பார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். அவர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்னபோது அவருக்கு ஒருங்கிணைப்பாளராக வேலைசெய்வதற்காகத் தனது கட்சிப் பொறுப்பிலிருந்து ஒருவரை பாஜக அனுப்பி வைத்தது அன்றைய தினம் சமூக ஊடகங்களில் ரஜினிகாந்தை ஆதரித்து கருத்துக்களைத் தெரிவித்தவர்கள் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான். அவர்களைத் தவிர ஓ. பன்னீர்செல்வம் வரவேற்று கருத்தைத் தெரிவித்தார். ஆனால் அடுத்த நாளே அதை அமைச்சர் ஜெயக்குமாரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் மறுத்துவிட்டார்கள். அது பன்னீர்செல்வத்தின் தனிப்பட்ட கருத்து என்று சொல்லிவிட்டார்கள். அதுவே அவருக்கு ஒரு பின்னடைவுதான்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதை திமுக தலைமையிலான கட்சிகள் வரவேற்க வாய்ப்பில்லை. அதிமுக- பாஜக கூட்டணியிலுள்ள பாமகவோ தேமுதிகவோ அதை வரவேற்கவில்லை. எந்தக் கூட்டணியிலும் இல்லாத நாம் தமிழர் கட்சியோ அல்லது வேறு எந்த ஒரு கட்சியுமோ ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதை வரவேற்று ஒரு கருத்தையும் கூறவில்லை. மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு ஏதாவது தென்பட்டதா என்றால் அதுவும் தென்படவில்லை. அவர் கட்சி ஆரம்பிக்கும் செய்தி மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டது. வெள்ளைப் பகுதிகளைப் பார்வையிட வந்த மத்திய குழுவைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் இடம் பிடித்த அளவுக்குக் கூட ரஜினிகாந்த் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அரசியல் ரீதியாக அவருக்கு இங்கே பாஜகவைத் தவிர வேறு எந்தவொரு அரசியல் கூட்டாளியும் இருப்பதாகத் தெரியவில்லை.

**விஜயகாந்த் வகித்த இடம் ரஜினிகாந்த்துக்குக் கிடைக்குமா?**

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதை விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்ததோடு சிலர் ஒப்பிடுகின்றனர். தமிழக அரசியலில் மிகப்பெரும் செல்வாக்குமிக்க தலைவர்களாகத் திகழ்ந்த கலைஞரும், செல்வி ஜெயலலிதாவும் அரசியலில் உடல் ஆரோக்கியத்தோடு செயல்பட்டுக்கொண்டிருந்த நேரத்திலேயே துணிச்சலாக அரசியல் கட்சியை ஆரம்பித்தவர் விஜயகாந்த். தமிழ் உணர்வாளராகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். தன்னைக் கடுமையாக எதிர்த்த பாமகவின் கோட்டையாகக் கருதப்பட்ட விருத்தாசலத்தில் போட்டியிட்டு வென்று காட்டியவர். திமுக, அதிமுகவை விரும்பாதவர்கள் மட்டுமின்றி ஈழப் போராட்டத்தின் காரணமாக வலுப்பெற்றிருந்த தமிழ் உணர்வுகொண்ட இளைஞர்களும் கணிசமாக அவரை ஆதரித்தனர். அவர் வாங்கிய வாக்குகளின் காரணமாகவே 2011 தேர்தலில் செல்வி ஜெயலலிதா அவரை நாடிச்சென்று கூட்டணி அமைத்தார். அந்த கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி ஜெயலலிதாவை முதல்வராகவும், அவரை எதிர்க் கட்சித் தலைவராகவும் ஆக்கியது.

எம்ஜிஆருக்குப் பிறகான தமிழக அரசியலில் அதுவொரு சாதனையென்றே கூறலாம். விஜயகாந்த்தைப் போன்ற தமிழ் உணர்வோ, அரசியல் துணிவோ ரஜினிகாந்த்திடம் இல்லை. எனவே அவரோடு எவ்விதத்திலும் ரஜினிகாந்த்தை ஒப்பிடமுடியாது. விஜயகாந்த் தனியே போட்டியிட்டு வாங்கிய வாக்குகளைக்கூட ரஜினிகாந்த்தால் வாங்கமுடியுமா என்பது சந்தேகமே.

**யாருக்கு பாதிப்பு?**

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதால் யாருக்குமே பாதிப்பு ஏற்படாதா என்றால் சில கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். அப்படி பாதிக்கப்படும் கட்சிகளாக இருப்பவை பாஜகவும், அதிமுகவும்தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தொடர்ந்து தன்னை பாஜகவின் நெருங்கிய நண்பனாகவே வெளிப்படுத்தி வருகிறார். எதையெல்லாம் பாஜக ஆதரிக்கிறதோ அதை மட்டும்தான் அவர் ஆதரிக்கிறார். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பதின்மூன்று பேர் போலீஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் ஸ்டெர்லைட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாகவே அவர் கருத்து தெரிவித்தார்.

எட்டு வழி சாலை திட்டத்தை விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்தபோது, தங்கள் நிலங்களைப் பறிகொடுத்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வோம் என்று போராடிய நேரத்தில் ரஜினிகாந்த் எட்டு வழி சாலை திட்டத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டார்.

திராவிட இயக்க கருத்தியலை விமர்சிக்கும் விதமாக சங்கப் பரிவாரத்தினர் பேசியபோது அவரும் அதை வழிமொழிந்தார். கந்தசஷ்டிகவசம் பிரச்சினையை இந்துத்துவ அமைப்புகள் எழுப்பிய போது அவர்களுக்கு ஆதரவாக ’கந்தனுக்கு அரோகரா’ என்று ட்வீட் செய்தார். இவ்வாறு தொடர்ந்து பாஜக ஆதரவாளராகவே அவர் தன்னை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.

இப்பொழுது அவர் தேர்தலில் தனியே வேட்பாளர்களை நிறுத்தினால் அவருக்கு வரப்போகிறவை திமுக ஆதரவு வாக்குகள் அல்ல, பாஜக,அதிமுக ஆதரவு வாக்குகள்தான். பாஜகவில் எந்வொரு ஈர்ப்புமிக்கத் தலைவரும் இல்லாத நிலையில் ரஜினிகாந்த் என்ற ஒரு நட்சத்திர அந்தஸ்து கொண்டவரை ஆதரிப்பது மேல் என்று அதன் ஆதரவாளர்கள் நினைக்கக்கூடும். அவ்வாறு முடிவெடுத்தால் அது பாஜகவுக்கு தான் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும்.

ரஜினிகாந்த் கடந்த இரண்டு ஆண்டு காலமாக இங்கு நடைபெற்று வரும் அதிமுக அரசை விமர்சித்து ஒரு கருத்தையும் சொன்னதில்லை. மாறாக அவர்களைப் பாராட்டி கருத்துக்களை சொல்லி வருகிறார். இந்தநிலையில் அதிமுகவில் செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பிறகு ஒரு சினிமா நட்சத்திரம் இல்லையே என்ற ஏக்கத்தில் இருக்கக்கூடிய ரசிக மனம் கொண்டவர்கள் ரஜினிகாந்தை ஆதரித்து வாக்களிக்கக்கூடும்.தொகுத்துக் கூறினால் ரஜினிகாந்த் வாங்கக்கூடிய வாக்குகள் தற்போது பாஜக, அதிமுக அணியிலிருந்து தான் வரப்போகின்றன. எனவே அவரால் பாதிக்கப்படப்போவது அதிமுக-பாஜக அணியாகவே இருக்கும்.

**அரசியல் களம் எப்படியிருக்கும்?**

ரஜினிகாந்த்தின் வருகை திமுகவை எவ்விதத்திலும் பாதிக்காது என்பது மட்டுமின்றி பாஜக அதிமுக வாக்குகள் பிரிவதால் திமுகவின் வெற்றியை எளிதாக்கும்.தமது அணியின் வாக்குகளைப் பிரித்துவிடாமல் தடுக்கவேண்டுமென்றால் பாஜக-அதிமுக அணியில் பலவந்தமாக அவர் சேர்க்கப்படவேண்டும். அப்படி நடந்தால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் ஏற்கும் நிலை உருவாகும். இந்த இரண்டு சாத்தியக்கூறுகள் மட்டுமின்றி இன்னுமொன்றும் நடக்கலாம்- அதிமுக இரண்டாக உடைக்கப்பட்டு பாஜக- ரஜினி-அதிமுகவின் ஒரு பிரிவு என்ற விதத்திலும் ஒரு கூட்டணி அமைக்கப்படலாம். இவற்றில் எது நடந்தாலும் இங்கே பெரிய தாக்கம் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

தான் போட்டியிட்டால் உறுதியாக வெற்றிபெறுவேன் என சொல்லக்கூடிய ஒரு தொகுதியையும் ரஜினிகாந்த்தால் தமிழ்நாட்டில் அடையாளம் காட்டமுடியாது. அதனால்தான் அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று அவரது ஆதரவு ஊடகங்கள் கூறிவருகின்றன. தேர்தலில் அவரது கட்சி தனித்துப் போட்டியிட்டால் தேர்தல் முடிந்ததற்குப் பிறகு அவரது செல்வாக்கு என்னவென்று தெரிந்துவிடும். அவர் கூட்டணியில் இடம் பெற்றால் அவருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை தேர்தலுக்கு முன்பாகவே அவரது செல்வாக்கை அம்பலப்படுத்திவிடும்.

ரஜினிகாந்த் தனது திரைப்படங்கள் வசூலில் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இதுவரை அரசியலைப் பயன்படுத்தி வந்தார். இப்போதோ தனது அரசியல் வெற்றிக்காகத் திரைப்படங்களில் ஈட்டிய புகழைப் பயன்படுத்தப்பார்க்கிறார். காட்சி அரசியலில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட முடிவை கதாநாயகன் அறிந்திருப்பார். கட்சி அரசியலிலோ முடிவு எப்படியிருக்கும் என்பது அவருக்குத் தெரியாது.காட்சி அரசியலிலிருந்து கட்சி அரசியலை நோக்கி நகரும் இந்தப் பயணத்தின் முடிவில் பாஜகவின் அதிகார வெறிக்கு பலியாக்கப்பட்ட ஒருவர் என்றே வரலாறு அவரை பதிவுசெய்யப் போகிறதோ என்ற ஐயம்தான் எழுகிறது.

**கட்டுரையாளர் குறிப்பு**

ரவிக்குமார் – கவிஞர், மொழிபெயர்ப்பாளர், அரசியல், இலக்கிய விமர்சகர். ‘மணற்கேணி’ ஆய்விதழின் ஆசிரியர், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

�,”