சிறப்புக் கட்டுரை: கலைஞர் பிறந்தநாளும் இரண்டு நூற்றாண்டு மலர் கண்காட்சியும்!

politics

>நிவேதிதா லூயிஸ்

“சென்னையின் முதல் மலர் காட்சி” கலைவாணர் அரங்கில் சற்றுமுன் தொடங்கிவைக்கப்பட்ட காட்சியை தொலைக்காட்சிப் பெட்டி காட்டிக்கொண்டிருக்கிறது. “தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை இந்தக் கண்காட்சி பிரதிபலிக்கிறது”, என செய்தியாளர் சொல்லிக்கொண்டே நகர்கிறார்.
காலம் எப்படிச் சுழல்கிறது? சென்னையில் மலர் காட்சி 19ம் நூற்றாண்டிலேயே ஏற்படுத்தப்பட்டுவிட்டது! நாம்தான் அதை மறந்துபோனோம். மதராஸ் வேளாண்மை – தோட்டக்கலை சங்கம் (Madras Agricultural Horticultural Society) நூற்றாண்டைத் தாண்டிய அமைப்பு. 1836ம் ஆண்டு இந்த அமைப்பை நிறுவ உறுதுணையாக நின்றவர் அன்றைய சென்னை மாகாண ஆளுநர் பிரதரிக் ஆதம் துரை.
இந்திய மண்ணின் வளமை, அது தரக்கூடிய செல்வத்தை ஆராய்ந்து அறிவதில் பெரும் ஆர்வம் ஐரோப்பியருக்கு உண்டு. தமிழகத்தின் முதல் ஐரோப்பிய தோட்டங்கள் அமைந்த இடங்களில் ஒன்றென தரங்கம்பாடியை தாராளமாகச் சுட்டலாம். ஆரஞ்சு, பம்ப்ளிமாஸ், திராட்சை என ஐரோப்பிய பழங்களை 18ம் நூற்றாண்டிலேயே விளைவித்துள்ளனர். கடலூரின் பம்ப்ளிமாஸ் சிறந்த சுவையுடையது என சங்கத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன!
மொராவியர்கள் தரங்கையில் உருவாக்கிய திராட்சைத் தோட்டங்கள் உலகப்பிரசித்தி பெற்றவை (இது குறித்து இன்னும் விரிவாக ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ நூல் பேசுகிறது). தரங்கம்பாடியின் தோட்டங்களைப் போல மதராஸிலிருந்து செங்கல்பட்டு வரையுள்ள பகுதியை பசுமையாக மரங்கள், செடி கொடிகளால் நிரப்பவேண்டும் என ஆசைகொண்டு அதுகுறித்துப் பேசிவந்தவர் சீகன்பால்கை அடியொற்றி 1800களில் தரங்கைக்கு வந்த மொராவிய மிஷனரியான கிறிஸ்டாஃப் சாமுவேல் ஜான் (Christoff Samuel John). ஜெரிக் (Gericke) என்ற மிஷனரியிடம், இவ்வாறு மரங்களையும் செடி கொடிகளையும் நட்டுவிட்டால், தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்கள், அவர்களது மாணவர்கள் கொண்டு அவர்களின் ஓய்வு நேரத்தில் தோட்டங்களைப் பராமரிக்கலாம் என்று கூறியுள்ளார்.
சென்னையும் அதற்கு சற்றும் சளைத்தது அல்ல. அங்கொன்றும் இங்கொன்றுமாக நகரின் தோட்டங்களைத் தோற்றுவித்த யூதர்கள், போர்ச்சுகீசியர்கள், ஆர்மீனியர்கள் உண்டு. ஆனால் ஆங்கிலேயரே ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்புக்குள் தோட்டக்கலையைக் கொண்டுவந்தவர்கள். இங்கிலாந்தில் ‘அரசு வேளாண் சங்கம்’ (Royal Agricultural Society) அமைக்கப்பட்ட ஆண்டு, 1839. அதனை அமைக்க அடிப்படையாக இந்தியாவின் ‘இந்திய வேளாண்மை தோட்டக்கலை சங்கம்’ இருந்தது என வரலாற்றாளர்கள் பதிவு செய்துள்ளனர்.


*வில்லியம் கேரி(William Carey), படம்: விக்கிபீடியா*
இந்திய வேளாண் தோட்டக்கலை சங்கத்தை நிறுவியவர் வில்லியம் கேரி (William Carey) என்ற மிஷனரி! கொல்கொத்தாவின் ‘செராம்பூர் மிஷன் ஹவுஸில்’ 15 ஏப்ரல் 1820 அன்று கேரி இவ்வமைப்பை நிறுவினார். பின்னாளில் மதராஸ், பம்பாய், சிலோன் ஆகிய மூன்று இடங்களிலும் அமைந்த வேளாண் தோட்டக்கலை சங்கங்களுக்கு தாய்ச் சங்கம் என இதைச் சொல்லலாம். ஜூன் 10, 1835 அன்று இந்திய வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் பொது அவைக் கூட்டத்தில், மதராஸ் ஆளுநர் பிரதரிக்கின் தனிச்செயலாளர் ஹாட்ஜஸ் எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டுள்ளது. அதில், ‘இந்திய சங்கம் கேட்டிருந்த அனைத்து உதவிகளையும் சம்பந்தப்பட்ட ஆட்சியர்களிடமிருந்து பெற்றுத்தர ஆவன செய்யப்படும்’, என எழுதப்பட்டிருந்தது.
அதே ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மதராஸில் வேளாண் தோட்டக்கலை சங்கம் புதிதாக ஏற்படுத்தப்பட்டு அதன் அமைப்பு, சட்டதிட்டங்கள் குறித்த தகவல்களை செயலாளருக்கு (பொறுப்பு) மதராஸிலிருந்து சி.ஒய்.பார்ன்ஸ் (C Y Barnes) அனுப்பியுள்ளதாகவும் அவ்வமைப்புக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைக்கொண்டு 1835ம் ஆண்டு மதராஸ் வேளாண்மை தோட்டக்கலை சங்கம் அமைக்கப்பட்டது தெரிகிறது. இந்த அமைப்பின் குறிக்கோள்களில் ஒன்றாக ‘ஆண்டு மலர் காட்சி’ ஏற்பாடு செய்வது என நிறுவனப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1839 முதல் நமக்குக் கிடைக்கும் முதல் தரவுகளின்படி அதற்கு முந்தைய ஆண்டு மலர் காட்சிக்காக 200 ரூபாய் ஒதுக்கப்பட்டது தெரிகிறது.
மலர்கள் மட்டுமே அல்லாமல், காய் கனிகள், தானியங்கள், கரும்பு, பருத்தி என நிலத்தில் விளைந்தவை அனைத்தும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டன. 1840 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் மலர் காட்சி மதராஸில் நடந்துள்ளது. திருவல்லிக்கேணி மயிலாப்பூர் தாலுகா மயிலாப்பூர் கிராமத்தில் கூவம் ஆற்றுக்குத் தெற்கே 22 ஏக்கர் நிலம் மதராஸ் வேளாண் தோட்டக்கலை சங்கத் தோட்டம் அமைக்க 1836ம் ஆண்டு பிரதரிக் ஆதம் முயற்சியில் அரசு வாங்கியது.


*1880களில் மதராஸ் வேளாண்மை தோட்டக்கலை சங்க தோட்டம்*

*மதராஸ் வேளாண்மை தோட்டக்கலை சங்க தோட்டத்தில் விக்டோரியா ரெஜியா (Victoria Regia) குளம், c.1880*


*தண்ணீரில் மிதக்கும் விக்டோரியா இலையின் மேல் அமர்ந்திருக்கும் சிறுவன், 1903*

இந்தத் தோட்டம் தென்னிந்தியாவில் பட்டு, பருத்தி, காபி, தேயிலை, புகையிலை, அவுரி (indigo), கரும்பு, மெரினோ ஆடுகள் (Merino), ஆப்பிள், ஆர்டிசோக் (artichoke), முட்டைகோஸ் என பல பயிர்கள் குறித்து ஆய்வு செய்யவும், விதைகளை உலகெங்குமிருந்து கொணர்ந்து சேர்த்துவைத்து ஐரோப்பிய துரைகள், இந்திய விவசாயிகளுக்கு வழங்கும் தலைமையகமானது. அடித்தளத்திலிருந்து இச்சங்கத்தைக் கட்டமைத்தவர் அதன் முதல் செயலாளரான டாக்டர் ராபர்ட் வைட் (Dr Robert Wight) என்ற ஆங்கிலேயர்.


*ராபர்ட் வைட், படம்: விக்கிபீடியா*

கிட்டத்தட்ட 30000 தாவர மாதிரிகள், 700க்கும் அதிகமான ஓவியங்கள் என மதராஸ் மாகாணத்தின் தாவரங்களைக் குறித்து தகவல்கள் சேகரித்தவர் வைட். கோவிந்தூ, ரங்கையா உள்ளிட்ட மதராஸ் மாகாண மண்ணின் மைந்தர்களுக்கு தாவரங்களை வரையும் பயிற்சிதந்து அட்டகாசமான ஓவியங்களை, ஓவியர்களை உருவாக்கியவர் வைட். இன்றும் பிரிட்டிஷ் நூலகம் உள்ளிட்ட உலகின் முக்கிய நூலகங்கள், அருங்காட்சியகங்களை இவர்களது ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.

*ரங்கையா ஓவியம், 1846, படம்: plantillustrations.org*

சேலத்திலிருந்து ஜி.எஃப். ஃபிஷர் (GF Fisher) என்ற ஐரோப்பியர் சங்கத்துக்கு எழுதிய டிசம்பர் 9, 1839 தேதியிட்ட கடிதத்தில், “மொரிஷியஸ் கரும்பு என் தோட்டத்தில் வளர்ந்துள்ளது; எகிப்திய பருத்தி, புகையிலை, அவுரி போன்றவையும் செழித்து வளர்ந்துள்ளன. அவற்றை காட்சிப்படுத்தவேண்டும். கண்காட்சி எப்போது? அது குறித்த தகவல்கள் மீண்டும் வெளியிடப்படவேண்டும்; பரிசுத்தொகை முன்னரே அறிவிக்கப்படவேண்டும்”, என்று வேண்டுகோள் வைக்கிறார்.
ஆண்டுதோறும் மயிலாப்பூரில் அமைந்த (இன்றைய ஜார்ஜ் கதீட்ரல் சாலை) மதராஸ் வேளாண் தோட்டக்கலை சங்கத் தோட்டத்தில் கண்காட்சி நடந்துள்ளது. 1840ம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று காலை 10 மணிக்கு கண்காட்சி தொடங்கியது. அவ்வாண்டு கண்காட்சியில் மதராஸில் விளைந்த உருளைக்கிழங்குகளை லிடல் (Lidel) என்பவர் காட்சிக்கு வைத்திருக்கிறார். அதே ஆண்டு ஓச்சர்லே (Outcherlay) என்பவர் மதராஸ் தோட்டத்தில் விளைவித்த காபிக் கொட்டைகளையும் பார்வைக்கு வைத்திருக்கிறார். எழும்பூர் ராமசாமி (பீட்ரூட்), சேத்துப்பட்டு வீராசாமி (லெட்யூஸ்), சிந்தாதிரிப்பேட்டை குஞ்சமுதலி (கேரட்), சிந்தாதிரிப்பேட்டை ஜம்பெருமாள் (கத்திரிக்காய்), நுங்கம்பாக்கம் நைனப்பன் (பரங்கி), சிந்தாதிரிப்பேட்டை ராமசாமி (பரங்கிக்காய், வெள்ளரிக்காய்), குழந்தை முதலி (கிழங்குகள்), சைதாப்பேட்டை உண்ணாமலை (புடலங்காய்) என மதராஸின் பல விவசாயிகள் பரிசுபெற்றுள்ளனர்.
1840ம் ஆண்டு மலர்க்காட்சியில் திருமதி கோல், திருமதி வானல், திருமதி பிர்ச், திருமதி வா, மிஸ் பிரந்தர்கஸ்த், திருமதி துல்லோச் ஆகியோரின் மலர்க்கொத்துகள் பரிசு வென்றன. மருந்துக்கும் இந்தியப் பெண்களின் பெயர்களைக் காணவில்லை!
1842ம் ஆண்டு 23 பிப்ரவரி அன்று சங்கத் தோட்டத்தில் நடைபெற்றது. இதமான முன் வசந்த கால சென்னைக் காலநிலை நிலவிய பிப்ரவரி மாதத்தை ஆங்கிலேயர்கள் தெளிவாகவே தேர்ந்துள்ளனர். 1842ம் ஆண்டு காய்கனிகளைத் தீர்ப்பிட்டவர்கள் டேவிஸ் (Davis), ஸ்வின்டன் (Swinton) மற்றும் குழந்தை முதலி. அவ்வாண்டு சங்கத்தில் வளர்க்கப்பட்ட எந்த மலரும் காயும் கனியும் காட்சிக்கு வைக்கப்படவில்லை. ‘தனிப்பட்ட போட்டியாளர்களுடன் அமைப்பு போட்டியிடுவது சரியாகாது’ என 1839ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவு இவ்வாண்டும் பின்பற்றப்பட்டது!
ஹென்றி சேமியர் (Henry Chamier) துரை அறிவித்த இரண்டு பரிசுகள் சிறந்த கேரட்டுக்கும் பீட்ரூட்டுக்கும் வழங்கப்பட்டன. அவற்றை கந்தப்பன், முத்தாளு நாயகர் இருவரும் முறையே பெற்றனர். முட்டைகோசுகள் அவ்வாண்டு போட்டிக்கு அதிகம் வரவில்லை. ஆனால் கேரட், டர்னிப் (turnip), நூல்கோல் (knole cole), செலரி (celery), யெருசலேம் ஆர்டிசோக் (Jerusalem artichoke), டஃபின் பீன்ஸ் (Duffin beans), பீட்ரூட் ஆகியவை நிறைய காட்சிக்குக் கொண்டுவரப்பட்டன. காய் கனிக் கண்காட்சியில் முதல் மூன்று (பொது) பரிசுகளையும் ப்ரெந்தர்கஸ்த் (Prendregast), கேப்டன் ஜார்ஜ் க்ரெய்க் மக்கன்சி (George Greig Mackenzie), பூ (Pugh) ஆகிய ஆங்கிலேயரே தட்டிச்சென்றனர். ஆனாலும் சிறந்த பீன்ஸ், பீட்ரூட் – இரண்டாம் பரிசு (ராகவ செட்டி), டிரம்பீட் கோஸ் (drumbeat cabbage) (நவாபு தோட்டம்) என ஒன்றிரண்டு காய்கறிகளில் மதராஸ்வாசிகள் பெயர் காணக்கிடைக்கிறது.
மதராஸில் ஆப்பிள்கள் விளைந்தன என்றுகூடத் தெரிகிறது! 1842ம் ஆண்டு கண்காட்சியில் ஹோம்ஸ் (Homes) என்ற ஆங்கிலேயர் மதராஸில் விளைவித்த இரண்டு ஆப்பிள்களுக்காகப் பரிசு பெற்றார். ஆப்பிள்கள் அளவில் சிறியதாக இருந்தன என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1840ம் ஆண்டு போல இவ்வாண்டும் கண்காட்சியில் ஆச்சரியமூட்டும் மற்றொரு பிரிவிலும் பரிசுகள் வழங்கப்பட்டன. ‘சந்தைத் தோட்டக்காரர்கள்’ பிரிவில் கந்தப்பன், குஞ்சப்பிள்ளை, முத்தாளு நாயகர், தாண்டவக்கோன், ராமசாமி, அருணாச்சலம் போன்றோர் பரிசு வென்றுள்ளனர். அவர்கள் வளர்த்து காட்சிக்கு வைத்த காய்கள் – கேரட் மற்றும் பீட்ரூட். இவை தவிர ‘இந்தியக் காய்களான’ பாகற்காய், புடலங்காய் போன்றவையும் கண்காட்சியில் வைக்கப்பட்டன. “மண்ணின் மக்கள் (சந்தைத் தோட்டக்காரர்கள்) காட்சிக்குக் கொண்டுவந்த பொருள்கள் கமிட்டிக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தன, அவர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பல பரிசுகளும் அவர்களுக்குத் தரப்பட்டன”, என சங்கம் பதிவு செய்துள்ளது.
மலர்க் காட்சி முழுக்க முழுக்க ஐரோப்பியப் பெண்களின் களமாக இருந்துள்ளது! திருமதி போர்ட்டர் (Porter), அலெக்சாந்தர் (Alexander), அரதூன் (Arathoon) ஆகியோர் மலர்க்கொத்துகளை ஆராய்ந்து தீர்ப்பளித்தனர். இதில் திருமதி அரதூன் ஆர்மீனியர், மற்றவர்கள் ஆங்கிலேயப் பெண்கள். திருமதி ஸ்பிரிங் (Spring), மக்கன்சி (Mackenzie), ஹீலியோட்ரோப் (heliotrope) மலர்களைக்கொண்டு பூங்கொத்து செய்திருந்த திருமதி சுவின்டன் ஆகியோர் அவ்வாண்டு பரிசுபெற்றனர். இது தவிர கேப்டன் மக்கன்சி (இவர் காலின் மக்கன்சி அல்ல, ஜார்ஜ் க்ரெய்க் மக்கன்சி, உதகையில் இறந்து அடக்கம் செய்யப்பட்டுள்ளார்) உயிர்ச்செடிகள் சிலவற்றை பார்வைக்கு வைத்திருந்தார்.
அவை பெரும்பாலும் மண்ணின் மலர்களே. ஆனாலும் அலங்காரப் பூக்களான டாஃபோடில் (Daffodil), ஹயசிந்த் (Hyacinth), நார்சிசஸ் (Narcissus), ஜெரெனியம் (Geranium), லாவண்டர் (Lavender), ஸ்னாப் டிராகன் (Snap dragom), குளோவ் பிங்க் (Clove pink), கார்னேஷன் (Carnation), ஃபுஷியா (Fuschia) போன்றவையும் கண்காட்சியில் வைக்கப்பட்டன.

*திருமதி மஞ்சுளா ராவுக்கு மெட்ராஸ் ரிஃபைனரீஸ் 1937ம் ஆண்டு அனுப்பிய பாராட்டுக்கடிதம்*

1970கள் வரை மலர்க்கண்காட்சி நடந்ததாக சொல்லப்பட்டாலும், நமக்குக் கிடைத்துள்ள 1937ம் ஆண்டு தேதியிட்ட மதராஸ் ரிஃபைனரீஸ் லிமிட்டட் நிறுவனத்தின் பாராட்டுக்கடிதம் ஒன்றில், ‘மதராஸ் வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் 1(?)6வது ஆண்டு மலர்காட்சி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றாளர் எஸ். முத்தையா தன் கட்டுரை ஒன்றில் மதராஸ் சென்ட்ரலை ஒட்டிய ‘மை லேடிஸ் கார்டன்’ பூங்காவில் சுமார் ஓர் நூற்றாண்டுகாலம் மலர்க்காட்சி நடைபெற்றது எனவும், அதைத் தொடங்கிவைப்பது மதராஸின் மேயர் எனவும் பதிவு செய்துள்ளார். 1948ம் ஆண்டு டாக்டர் யு. கிருஷ்ண ராவால் திறந்துவைக்கப்பட்ட அசோக தூபி மலரலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது என்றும், மலர்க்காட்சியின் மையமாக அந்த தூபியே அமைந்தது எனவும் எழுதியுள்ளார். ஈராண்டுக்கு முன்பு நிகழ்வு ஒன்றுக்காக மை லேடிஸ் கார்டன் செல்ல நேர்ந்தது. ஆளரவமற்ற பூங்காவில் பலர் நடைபயின்று கொண்டிருந்தனர். வாழ்ந்துகெட்ட பெண்ணைப் போல பொலிவிழந்து நிற்கிறது பூங்கா. நல்லவேளை தூபி பாதுகாப்பாகவே இருக்கிறது.


*மை லேடிஸ் கார்டன் அசோக தூபி மலர் அலங்காரத்துடன்மலர் காட்சியின்போது, ஓவியம்: எஸ்.முத்தையா, தி இந்து*

இன்றிலிருந்து சுமார் 190 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியப் பெண்கள் அமைத்த பூங்கொத்துகளை இன்றைய கலைவாணர் அரங்க மலரலங்காரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். தமிழ்ப் பண்பாடு என காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கிரிசாந்திமம் (Chrysanthemum), அந்தூரியம் (Anthurium) உள்ளிட்ட மலர்களைக் கருத இயலவில்லை. ஆனால் இது ஒரு சிறந்த முன்னெடுப்பு. முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை ஒட்டி, நூற்றாண்டு கடந்த பாரம்பரியம் ஒன்று மீட்டெடுக்கப்படுவது என்னளவில் பெரும் உவகை கொள்ளச் செய்கிறது. முதல்வருக்கு மனம் கனிந்த பாராட்டும் வாழ்த்தும்.
இனி தடையின்றி இந்தக் கண்காட்சி ஆண்டுக்கு ஒருமுறை கலைஞரின் பிறந்தநாளன்று நடைபெறும் என நம்புகிறேன். வெறும் மலர்க்காட்சியாக அல்லாமல், முன்பு போல காய், கனி, தானியம் என உழவர்களின் படைப்புகளைக் காட்சிக்கு வைத்தால், உழவை ஊக்குவிக்கும் பெரும் பணி முன்னெடுக்கப்படும். கண்காட்சியை சென்னை மாநகரக் கட்டுப்பாட்டிலிருக்கும் அதே மை லேடிஸ் கார்டன் தோட்டத்திலோ, கதீட்ரல் சாலை மதராஸ் வேளாண்மை தோட்டக்கலை சங்கத் தோட்டத்திலோ அமைப்பது, அவ்விடத்திலிருந்து மறைந்துபோன வரலாறை அங்கேயே மீட்டுருவாக்கம் செய்யும் அரும்பணியாக அமையும். வரும் தலைமுறைக்கு திராவிடம் செய்திட்ட அரும்பெரும் பணிகளில் இதுவும் ஒன்றாக நின்று காலம் தாண்டிப் பேசும்.

**கட்டுரையாளர் குறிப்பு:**

**நிவேதிதா லூயிஸ்**

சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த “முதல் பெண்கள்” என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *