அதிக மணல் லோடு: மோதிக் கொள்ளும் லாரி உரிமையாளர்கள்!

politics

ஓவர் லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்களில் ஒரு தரப்பினரும், அதே சமயத்தில் அபராதம் விதிக்கக் கூடாது என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ், கிரஷர் குவாரிகள் அதிகம் உள்ள விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் மற்றும் விக்கிரவாண்டி காவல் நிலையங்களில் சில தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “இந்த பகுதியில் ஓடும் மணல் லாரிகளில் சட்டத்திற்குப் புறம்பாக ஓவர் லோடு ஏற்றிச் செல்கிறார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அதுபோன்று, ஆர்டிஓ மற்றும் சுங்கச்சாவடி திட்ட அதிகாரியிடமும் புகார் கொடுத்தார்.

இந்த புகார் பற்றி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள லாரி முதலாளி ஒருவரிடம் கேட்டோம்.
அவர் கூறுகையில், “10 வீல்கள் கொண்ட டிப்பரில் 16 டன் ஏற்ற வேண்டும். ஆனால் 32 முதல் 33 டன் வரையில் மணல் ஏற்றுவார்கள். அதுபோன்று, 12 வீல், 14 வீல் 16 வீல்கள் கொண்ட டிப்பரில் டபுள் மடங்கு ஏற்றிச் செல்கிறார்கள்.

இன்று டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்கிற நிலையில், வருவாய் வருவதில்லை. அதோடு, லாரி 30 ஆயிரம் கிலோமீட்டர் ஓடியதும் ரூ. 2.50 லட்சத்துக்கு டயர் மாற்றியாக வேண்டும். லட்சக்கணக்கில் இன்சூரன்ஸ் கட்டவேண்டும். புதிய லாரியாக இருந்தால் 90 ஆயிரம் தவணை செலுத்த வேண்டும், பழைய லாரி வாங்கினால் குறைந்தது 30 ஆயிரம் தவணை செலுத்த வேண்டும். இதுதவிர ஓட்டுநர் படி, கிளினருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். கூடுதலாக பராமரிப்பு செலவுகள் வேற இருக்கிறது. தொடர்ந்து வேலையும் இருக்காது.

இதுபோன்ற நிலையில், ஓவர் லோடு ஏற்றினால்தான் கொஞ்சம் சம்பாதிக்க முடியும். ஓவர் லோடுக்கு அபராதம் போட்டால் லாரி உரிமையாளர்கள் அழிந்துதான் போகவேண்டும். இப்போதே, பல லாரி உரிமையாளர்கள் நஷ்டத்தில் தவிக்கிறார்கள். இப்படி ஓவர் லோடு அபராதம் போடச் சொல்லி லாரி உரிமையாளரே போராடுவது வேதனையாக உள்ளது” என்று புலம்பினார்.

இதுகுறித்து ஆர்டிஓ வட்டாரத்தில் விசாரித்தபோது, ”முன்புபோன்ற சட்டம் தற்போது இல்லை. ஓவர் லோடுக்கு அபராதம் ரூ. 20 ஆயிரம், அதோடு ஒரு டன்னுக்கு ரூ.2,000, இப்படி அபராதம் போட்டால் லாரி உரிமையாளர்கள் கொந்தளித்து விடுவார்கள். அரசே தவறுதான் செய்கிறது. அதாவது அரசு பேருந்துகளில் 40 இருக்கைகள் உட்காரவும், 45 பேர் நின்று செல்லவும் அனுமதி உள்ளது. ஆனால் பேருந்துகளில் 100 பயணிகளுக்கும் மேல் ஏற்றி செல்கிறார்கள்” என்றனர்.

வருவாய் துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். அவர் கூறுகையில், “குவாரிகளில் எம் சாண்ட் ஒரு யூனிட்டுக்கு அரசு குறிப்பிட்டுள்ள தொகை சில நூறு ரூபாய்தான். ஆனால் குவாரிகாரர்கள் ஒரு யூனிட் மூவாயிரம் என வசூலிப்பார்கள். கொள்ளையோ கொள்ளை அடிக்கிறார்கள். கிராம அதிகாரி முதல் சென்னை வரையில் கனமாகக் கொடுக்கிறார்கள். சுங்கச்சாவடிகளுக்கும் கப்பம் கட்டுகிறார்கள்” என்றார்.

அவரிடம் சுங்கச்சாவடிகளுக்கு ஏன் கப்பம் கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பினோம். “சுங்கச்சாவடி அருகில் எடை மேடை இருக்கும் ஓவர் லோடு போகும் லாரிகளை அனுமதிக்கக்கூடாது. அப்படி போகும் லாரிகளை எடை போட்டு ஓவர் லோடுக்கு அபராதம் வசூலிக்க வேண்டும். அப்படி வசூலிக்காமல் இருக்கத்தான் சுங்கச்சாவடி பொறுப்பாளர் மற்றும் திட்ட அதிகாரிகளுக்குக் கணிசமான தொகையை குவாரி உரிமையாளர்கள் கப்பம் கட்டுகிறார்கள்” என்றார்.

**-வணங்காமுடி**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *