திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு வீடியோ ஒன்றை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு வரும் 27, 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுறுகிறது. வாக்குப் பதிவு நடைபெறும் 27, 30 தேதிகளில் பொது விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரி வீடியோ ஒன்றை நேற்று (டிசம்பர் 24) வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அதில், “தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் தற்போதுதான் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை இப்போது நடத்துவோம், அப்போது நடத்துவோம் எனக் கூறி, அதிமுக அரசு காலம் தாழ்த்தி வந்தது. தேர்தலைத் தள்ளி வைக்க எத்தனையோ கற்பனையான காரணங்களை நீதிமன்றத்தில் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், அதிமுக அரசு மக்களை நேரில் சந்திப்பதற்குப் பயம் என்பதுதான் உண்மையான காரணம்” என்று விமர்சித்தார்.
நகரங்களுக்கு எப்போது தேர்தல் நடத்துவார்கள் எனத் தெரியாது. ஏன் நடத்துவார்களா என்பதே தெரியாது என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், “கிராமங்களிலும் முறையாகத் தேர்தலை நடத்தவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு என எதையுமே இதுவரை செய்யவில்லை. குழப்பத்துக்கு மேல் குழப்பத்தையும், குளறுபடிகளையும் செய்துதான், ஊராட்சித் தேர்தலை நடத்துகிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் அதிமுக காலம் தாழ்த்தியதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. தேர்தல் நடந்தால் திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற பயம் முதல் காரணம். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வந்துவிட்டால் வழக்கம் போல கொள்ளை அடிக்க முடியாது என்பது இரண்டாவது காரணம் என்று குறிப்பிட்டதோடு, “எந்த மாநில முதல்வர் மீதும் பதவியில் இருக்கும்போதே கொலைப் புகார் வந்ததில்லை. கொள்ளைப் புகார் வந்ததில்லை. இங்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் எனப் பலர் மீதும் ஊழல் புகார்கள், விசாரணைகள், வழக்குகள் எனத் தமிழ்நாட்டு அமைச்சரவையே ஒரு கிரிமினல் கேபினட்டாக இருக்கிறது. இது இந்திய அளவிலான அவமானம் இல்லையா?” என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மேலும், “இப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாட்டை மீட்பதற்கான முன்னோட்டம்தான் இப்போது வந்துள்ள உள்ளாட்சித் தேர்தல். ஊழல் அவர்கள் செய்யும் வேலை. கொள்ளை அவர்களுடைய கொள்கை. அதனால், அவர்களிடம் இருந்து மக்களைக் காப்பதுதான் நமது கடமை. எனவே, இந்த ஊழலாட்சிக்கு முடிவுகட்ட உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.�,