டிஜிட்டல் திண்ணை: உட்கட்சித் தேர்தல்: உதயநிதி ரோல்- மாசெக்கள் ஷாக்!

politics

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் ஆன்லைனில் வந்தது.
‘திமுக உட்கட்சித் தேர்தல்கள் பேரூர் நகர்புற மாநகரப் பகுதிகளில் நடைபெற இருக்கின்றன. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே திமுகவில் கட்சிப் பதவிகளுக்கு பலத்த போட்டி இருக்கும். இப்போது ஆளும் கட்சியாக இருப்பதால் கேட்கவே வேண்டாம். கட்சிக்குள் இதுதான் இப்போது விவாதமாக இருக்கிறது’ என்ற குறிப்பை கொடுக்க, அதைப் பின்தொடர்ந்து ஃபாலோ அப் செய்திகளை டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ்அப்.

“திமுகவின் 15ஆவது உட்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒன்றிய செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான கிளை செயலாளர்கள் தேர்தல் முடிந்துவிட்டது. இப்போது பேரூர், நகரம், மாநகர பகுதிகளில் வட்டக் கழக செயலாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் வட்டச் செயலாளர்கள் தான் மாநகரங்களில் பகுதிச் செயலாளர்களை தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள். அந்தப் பகுதி செயலாளர்கள் தான் மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள்.

இதேபோல பேரூர், நகரப்பகுதிகளில் இந்தத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வட்டச் செயலாளர்கள் தான் பேரூர் செயலாளர்களையும் நகர செயலாளர்களையும் தேர்ந்தெடுப்பார்கள். ஒன்றிய, செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நகர செயலாளர்கள் இணைந்துதான் மாவட்டச் செயலாளர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

எனவே இப்போது திமுகவில் நடைபெற இருக்கிற தேர்தல் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் யார் யார் வாக்களிக்க வேண்டும் என்பவர்களை முடிவு செய்யும் தேர்தல்.

தங்களுக்கு வேண்டிய நபர்களை வட்டச் செயலாளராக வெற்றி பெற வைத்து அவர்கள் மூலம் தங்களுக்கு வேண்டிய பகுதி அல்லது ஒன்றிய செயலாளர்களை தேர்ந்தெடுக்க வைத்து அவர்கள் மூலம் தங்களையே மாவட்ட செயலாளராக தக்க வைத்துக் கொள்வது என்பதுதான் மாவட்ட செயலாளர்கள் திட்டம்.

ஆளும் கட்சி என்பதால் ஒவ்வொரு வட்டச் செயலாளர் பதவிக்கும் குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களில் வட்டச் செயலாளர் பதவிக்கு பலத்த போட்டி நிலவுகிறது.

தேர்தல் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் உள்ளுக்குள் தலைமைக்கழகம் சொல்லும் கட்டளைகள் கறாராக பின்பற்றப்படும் என்பது கட்சியினர் அறிந்ததுதான். அந்த வகையில் நடக்க இருக்கக்கூடிய பேரூர், நகரம், மாநகர வட்டச் செயலாளர்களுக்கான தேர்தலில் திமுக தலைமை வாய்மொழியாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இப்போது பெரும்பாலான பேரூராட்சி தலைவர்கள், நகராட்சி தலைவர்கள் பேரூர் செயலாளர்களாகவும் நகரச் செயலாளர்களாகவும் இருப்பவர்கள்தான். இவர்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் முழு ஒத்துழைப்போடு மாத்திரம்தான் உள்ளாட்சி தேர்தலில் இந்த பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள்.

இவர்களே மீண்டும் உட்கட்சித் தேர்தலில் பேரூராட்சி செயலாளர் மற்றும் நகர செயலாளர் பதவிக்கு வந்தால் கட்சியில் பதவியை எதிர்பார்த்து இருக்கும் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மற்றவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். இன்னொருபுறம் இப்போது இருக்கும் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரப் பிடிமானம் அந்தந்த மாவட்டங்களில் மேலும் அதிகமாகும்.

இந்தப் பின்னணியில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சித் தலைவர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளை வென்றவர்கள் நடக்கவிருக்கும் உட்கட்சித் தேர்தலில் பேரூராட்சி செயலாளராகவும் நகராட்சி செயலாளராகவும் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என தலைமை முடிவெடுத்துள்ளது.

இதன்மூலம் புதிய பேரூர் செயலாளர்கள், நகர செயலாளர்கள் வரவேண்டும் என தலைமை விரும்புகிறது. அதேநேரம் இப்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் இதன் மூலம் ஒரு கடிவாளம் போட்டது போல ஆகும்.

எனவே பேரூர், நகர, மாநகர வார்டு செயலாளர்கள் தேர்தலில் இப்போதைய பேரூர், நகர, பகுதிச் செயலாளர்களின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வெகுவாகக் குறையும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

இதன் இன்னொரு பரிமாணம் என்னவென்றால் பேரூர், நகர, பகுதி செயலாளர்கள் பதவிக்கு இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் வரவேண்டும் என்பது உதயநிதியின் திட்டம். இந்தப் பதவிக்கு இளைஞரணி நிர்வாகிகள் வந்துவிட்டால், தொடர்ந்து நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் தேர்தலிலும் இளைஞரணிக்கு கணிசமான இடங்கள் உறுதியாகும்.

அண்மையில் அன்பகத்தில் நடைபெற்ற இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில், ‘சட்டமன்றத்தில் இருந்து எல்லா இடத்திலும் உங்களை (உதயநிதியை) போற்றிப் புகழும் மாவட்டச் செயலாளர்களான அமைச்சர்கள் உண்மையில் இளைஞர் அணியினரை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்கே உங்களைப் புகழ்கிறார்களே தவிர, இளைஞர் அணியினருக்கு எந்த முக்கியத்துவமும் மரியாதையும் தருவதில்லை’ என்று குமுறியிருந்தனர்.

அதன் அடிப்படையிலேயே அடுத்தடுத்து நடக்கும் உட்கட்சித் தேர்தல்களில் இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களாக வருவதற்கான விதைகளை இந்த வட்டச் செயலாளர்கள் தேர்தலிலேயே தூவிக் கொண்டிருக்கிறார் உதயநிதி. தற்போதைய சீனியர் மாவட்டச் செயலாளர்கள் பலருக்கும் இது கடிவாளமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் உட்கட்சி தேர்தலில் உள் விஷயங்களை அறிந்த தலைமை கழக திமுகவினர்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *