ஆட்டோக்களில் அதிக கட்டணம்: சென்னை போலீஸ் எச்சரிக்கை!

politics

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தையொட்டி, ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து, மத்திய மற்றும் மாநில அரசு தொழிற்சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இன்றும் நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இன்று( மார்ச் 28 ) தமிழகத்தில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. வெறும் 32 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் மக்கள் தொகை அதிகமுள்ள சென்னையில், அலுவலகத்துக்குச் செல்வோர், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதோடு இந்த சூழலை பயன்படுத்தி ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்களிடம் அதிகப் பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தது.

இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜூவால் உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சி. சராட்கர் மேற்பார்வையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சென்னையிலுள்ள, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள், கோயம்பேடு மற்றும் இதர பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளுக்கு நேரில் சென்று அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் வேலை நிறுத்தத்தையொட்டி போக்குவரத்து சேவைகள் குறைந்துள்ளதால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் மீறுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தினர்.

மேலும், அதிக கட்டணம் வசூலித்ததாகப் பொதுமக்கள் கொடுத்த புகார்களின் பேரில், சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்து பொதுமக்கள் காவல் அவசர எண்.100, போக்குவரத்து அவசர உதவி எண்.103, போக்குவரத்து காவல் வாட்சப் எண்.9003130103 மற்றும் சென்னை பெருநகர காவல், சமூக வலைதளங்களில் புகார்கள் கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *