உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர் மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ஒ.செ

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டு, சேர்மன், துணை சேர்மன் தேர்தல்களும் முடிந்துவிட்டன. திமுக மீது எதிர்க்கட்சிகள் புகார் சொல்வது ஒரு பக்கம் என்றால், திமுகவினரே திமுக நிர்வாகிகள் மீது அடுக்கும் புகார்கள் இன்னொரு பக்கம் அதிகரித்து வருகின்றன.

அப்படித்தான், ‘ஒன்றிய சேர்மன் பதவியை எங்கள் மாவட்டச் செயலாளரான அமைச்சர் விலைபேசி விற்றுவிட்டார். ஆனால் தட்டிக் கேட்ட பாவத்துக்கு என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள்”என்று புகார்க் குரல் எழுப்பியிருக்கிறார் ஒன்றியச் செயலாளர் ஒருவர். விழுப்புரம் மாவட்டத்தில்தான் இந்த வில்லங்கம்.

சேர்மன் தேர்தலுக்குப் பின் மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரைகளின் பேரில் நீக்கப்பட்டியல் முரசொலியில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் நல்லூர் கண்ணன் மற்றும் முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாரத்குமார் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று தலைமைக் கழகம் அறிவித்தது.

மேலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பாக, “கழக கட்டுப்பாட்டை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து உள்ளாட்சியில் கழகத்திற்கு துரோகம் செய்த மரக்காணம் மத்திய ஒன்றிய செயலாளர் திரு நல்லூர் எஸ். கண்ணன் , முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாரத்குமார் அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே கழகத்தினர் யாரும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என மாவட்ட கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்டுகிறது” என்று தனியாக ஓர் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

மரக்காணத்தில் என்ன நடந்தது?

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் 26 கவுன்சிலர்களில் திமுக 17, அதிமுக 3, பாமக 2, விசிக 1, சுயேச்சை 3 என்ற வகையில் வெற்றிபெற்றனர். வெற்றி பெற்ற அனைத்து கவுன்சிலர்களும் அக்டோபர் 20ஆம் தேதி மரக்காணம் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்களாக பதவியேற்றுக்கொண்டார்கள். 22ஆம் தேதி கவுன்சிலர்கள் வாக்களித்து ஒன்றிய சேர்மனைத் தேர்வு செய்யவேண்டும். ஆனால், திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் பலர் உள்ளேபோய் வாக்களிக்காத அளவுக்கு போலீஸால் விரட்டி அடிக்கப்பட்டுத் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று 23ஆம் தேதி ஒன்றிய செயலாளர் கண்ணனையும், முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாரத்குமாரையும் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

நீக்கப்பட்ட திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன் மின்னம்பலத்திடம் பேசினார்.

“நான் 50 வருடமாக திமுக கட்சியில் இருக்கிறேன். 20 வருடங்கள் ஒன்றிய செயலாளராக இருக்கிறேன். ஒரு வருடம் முன்புதான் என் ஒன்றியத்தை கிழக்கு, மேற்கு, மத்திய ஒன்றியம் என மூன்றாகப் பிரித்து, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராகப் பழனி (எஸ்சி) மத்திய ஒன்றிய பொறுப்பாளர் கண்ணன் (வன்னியர்) மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தயாளன், என பகிர்ந்து கொடுத்தார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் எனக்குத்தான் சேர்மன் பதவி கொடுப்பதாக சொல்லிவந்தார் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான கே.மஸ்தான். ஆனால் இப்போது பணத்தை வாங்கிட்டு தயாளனுக்குக் கொடுத்துவிட்டார். கவுன்சிலர்கள் எல்லாம் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனக்கு 16 கவுன்சிலர்கள் ஆதரவாக இருக்கிறார்கள், அந்த வயிற்றெரிச்சலில்தான், எங்கள் ஆதரவாளர்கள் உள்ளேபோக முடியாமல் போலீஸை வைத்து விரட்டி அடித்தார்கள். அதனால் சேர்மன் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தயாளனிடம் அமைச்சர் இரண்டு கோடி வரை வாங்கியிருப்பார். என்னிடமும் அமைச்சர், ‘நீ எவ்வளவு செலவு செய்வே?’ என்று கேட்டார். நான், ‘ கவுன்சிலரா ஜெயிக்கட்டும். அப்புறம் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டேன். நான் கவுன்சிலர் பதவிக்கு 20 லட்சம் செலவு செய்தேன்.

மஸ்தானே தலைமையிடம் சொல்லி, உள்ளூர் நிலவரம் உண்மை தெரியாமல், சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால் இங்கே சேர்மன் தேர்தல் நடக்காமல் நின்றுவிட்டது. அதனால் உண்மைக்கு மாறாகத் தலைமையிடம் சொல்லி உண்மையான கட்சிக்காரனான என்னை நீக்கிவிட்டார்கள்.

நான் கட்சிக்குத் துரோகம் செய்யமாட்டேன், நான் எப்போதும் திமுக கட்சிக்காரர்தான், கடந்த பத்துவருடமாக எதிர்க்கட்சியாக இருந்தபோது கஷ்டப்பட்டவன். மற்றவர்களைப்போல் கட்சி மாறிவந்தவன் அல்ல.

திமுக தலைமையையும் தலைவர் குடும்பத்தையும் கேவலமாக பேசிட்டு வெளியில் போனவர்கள், தேர்தல் நேரத்தில் காக்கா பிடித்து சீட் வாங்கிட்டு வந்துட்டார்கள் சார். நான் அப்படியில்லை. அதனால்தான் என் வயிறு எரிகிறது சார்” என்றார் குமுறலோடு.

இதுகுறித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தானை தொடர்புகொள்ள பல முறை முயன்றோம். ஆனால் அவர் தொடர்பில் கிடைக்கவில்லை.

அவருக்கு நெருக்கமான சிலர் நம்மிடம், “அமைச்சர் உண்மையான திமுக காரனை கைவிட்டதாக சரித்திரம் இல்லை. அந்த ஒன்றிய செயலாளருக்கு சேர்மன் வாய்ப்பு இல்லை என்பதால், அதிமுகவினரோடு சேர்ந்து திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க திட்டமிட்டார். அதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவரது புகார்களில் உண்மை இல்லை” என்று கூறினார்கள்.

**-வணங்காமுடி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share