முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் அமீரக அமைச்சர்கள்!

politics

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்பதற்காகவும் தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கான முதலீடுகளை திரட்டும் நோக்கிலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.

நேற்று மார்ச் 24 மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு துபாய் சென்றடைந்த தமிழக முதல்வருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அரசு அளித்த சொகுசு காரில் முதல்வர் ஸ்டாலின் தங்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார்.
இன்று மார்ச் 25ஆம் தேதி முதல்கட்டமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களை சந்தித்துப் பேசுகிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை கேபினட் அமைச்சர் அப்துல்லா பின், வெளிநாட்டு வர்த்தக இணை அமைச்சர் டாக்டர் தானி பின் அஹமது அல் ஜியாவுதி ஆகியோரை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் சாத்தியக்கூறுகளையும் இரு தரப்பினரும் ஆராய்கிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தையை அடுத்து துபாய் எக்ஸ்போ எனப்படும் 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் இந்தியன் பெவிலியனில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதை ஒட்டி பல்வேறு தொழிலதிபர்களையும் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி களையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் அமீரக அமைச்சர்கள் சந்திப்பு துபாய் இன்டர்நேஷனல் பைனான்சியல் சென்டர் பகுதியில் நடைபெறுகிறது.

கடந்த மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் துபாய் சென்று கேரள அரங்கை துபாய் எக்ஸ்போவில் திறந்து வைத்து தொழில் முதலீடுகளை ஈர்க்க பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *