pஎரிபொருள் விலை உயர்வு: இரு அவையிலும் அமளி!

politics

எரிபொருள் விலை உயர்வு குறித்து இரண்டாவது நாளாக இன்றும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 137 நாட்களாக எந்தவித விலை மாற்றமுமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை நேற்று உயர்ந்தது. பெட்ரோல் விலை 70 காசுகள் அதிகரித்து 102.16 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.19 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து 102.91 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 70 காசுகள் உயர்ந்து 92.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோன்று வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையும் நேற்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.

ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்தவுடன் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை பத்து மணியளவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“எரிபொருள் விலை உயர்வு என்பது 10,000 கோடி ரூபாய் கொள்ளையடிக்கும் சதி. அதனால்தான் போராட்டம் நடத்துகிறோம். இந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கொண்டு வருவதே எங்கள் முயற்சி” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் கூறினர்.


தொடர்ந்து காலை 11 மணியளவில் மாநிலங்களவை தொடங்கியதும், பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

இதுகுறித்து விவாதிக்க அனுமதி வழங்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்தார். இதையடுத்து காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கையை மதியம் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

நேற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து, அவை நடவடிக்கை மதியம் 12மணிவரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதுபோன்று மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சபாநாயகர் இருக்கைக்கு முன்பு பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். உறுப்பினர்களை தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு வலியுறுத்திய சபாநாயகர், இந்த விவகாரத்தில் விவாதத்திற்கு நேரம் ஒதுக்குவதாக உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார். மேலும் அவையை ஒத்திவைக்கும் முயற்சியை உறுப்பினர்கள் கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *