இலங்கையில் அமைதி திரும்ப போப் வேண்டுகோள்!

politics

லங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை ஒட்டி நடந்த வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவை மீறி ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கொழும்பு வீதிகளில் ராணுவ பீரங்கி வண்டிகள் அணிவகுப்பு நடத்தி மக்களை பீதிக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
இந்த நிலையில் இலங்கை அமைதியின் பக்கம் திரும்ப வேண்டுமென உலக கிறிஸ்தவர்களின் தலைவரான போப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“சமூக அமைதியின்மைக்கு மத்தியில் நான் இலங்கையர்களை அகிம்சை வழிக்கு அழைக்கிறேன். போராட்டங்கள் வன்முறையாக மாறி பலரைக் கொன்று குவித்துள்ள நிலையில், இலங்கை மக்கள் அமைதியான வழியில் தங்கள் குரல்களை வெளிப்படுத்த வேண்டும். அரசியல் தலைவர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும்” என்றும் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று மே 11ஆம் தேதி புதன்கிழமை வாட்டிகன் நகரில் பொது சந்திப்பு கூட்டத்தில் பேசிய போப், “சமீபத்திய காலங்களில் இலங்கை நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொண்டு தங்கள் குரல்களை ஒலிக்கும் இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரம் வன்முறைக்கு அடிபணியாமல், அமைதியான அணுகுமுறையைப் பேணுமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துவதில் நான் மத குருமார்களுடன் இணைந்துகொள்கிறேன்.
எதிர்ப்பாளர்களின் குரல்களுக்கு இலங்கையின் ஆளும் அரசியல் தலைவர்களும் செவி சாய்க்க வேண்டும். மக்களின் அபிலாஷைகளுக்கு செவி சாய்க்கவும், மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு முழு மரியாதையை உறுதிப்படுத்தவும் பொறுப்புகள் உள்ள அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று போப் பேசியிருக்கிறார்.
**- வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.