Kஜெயக்குமார் விடுதலை தாமதம்!

politics

அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில்… இன்று அவரது மூன்றாவது வழக்கிலும் ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து புழல் சிறையில் இருந்து அவர் இன்று விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடுதலை தாமதமாகிறது.

கடந்த பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது சென்னை ராயபுரத்தில் திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி கும்பல் வன்முறை செய்ததாக ஜெயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி இருபத்தி ஒன்றாம் தேதி இரவு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது அவர் கொலை முயற்சியில் ஈடுபட்டார் என புதிய வழக்கை சேர்த்து அவரது ஜாமீன் மனுவை காவல்துறை எதிர்த்தது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இன்னொரு வழக்கிலும் ஜெயகுமார் கைது செய்யப்பட்டார்.

இந்த 2 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் மூன்றாவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜெயக்குமார் மீது புதிய வழக்கை பதிவு செய்தனர். தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது மருமகனின் சகோதரரை மிரட்டி தொழிற்சாலையை அபகரித்ததாக ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது ‌‌‌‌.

இந்த வழக்கிலும் இன்று மார்ச் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் அளித்தது. திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டார். திங்கள்தோறும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை அடுத்து ஜெயக்குமார் விடுதலை செய்யப்படுவார் என்ற நிலையில் இன்று மாலை முதலே புழல் மத்திய சிறை வாசலில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் கூடியிருந்தார்கள்.

ஆனால் சிறை நிர்வாகம், குறிப்பிட்ட வழக்கில் ஜாமின் அளித்து நீதிபதி அளித்த உத்தரவு நகல் மாலை 6 மணிக்குள் சிறை நிர்வாகத்துக்கு கிடைக்கப் பெற்றால் தான் அவர் விடுதலை செய்யப்படுவார். அதன்படி இன்று மாலை 6 மணிக்குள் நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கப்பெறவில்லை. எனவே ஜெயகுமார் இன்று விடுதலை செய்யப்பட மாட்டார். நாளை விடுதலை செய்யப்படுவார்” என்று தெரிவிக்கிறார்கள்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *