போதிய ஆய்வும் விவாதங்களும் இல்லாமல் கல்வெட்டுகளின் பொருளை வெளியிடக் கூடாது!
**முனைவர் அர.பூங்குன்றன்**
தொல்லியல் மீதான ஆர்வத்தின் பரவலைத் தொடங்கி வைத்ததில் சமூக வலைதளங்களுக்கு முதன்மை பங்குண்டு. அதில் இயங்கக்கூடிய இளைஞர்கள், அறிஞர்கள் பலர் தொல்லியல் கல்வெட்டியல் துறைகளின் மீது ஆர்வம்கொண்டு எழுதியும் விவாதங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்காகத் தெரிந்தாலும் சில நேரங்களில் அவை சமூகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் போக்கிலும் திசைமாறி விடுகின்றன. குறிப்பாக கல்வெட்டுச் சொற்களை அதன் இயல்பின் புரிதலற்று, சூழலுக்குத் தகுந்தவாறு கையாளுவதில்தான் அந்தச் சிக்கல் தொடங்குகிறது. ஒரு நிலத்தின் வரலாற்றை அனைவரும் தெரிந்து தெளிந்து வைத்திருக்க வேண்டும். அந்தத் தெளிவு சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பயன்படக்கூடிய வகையில் ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும். தொல்குடிகள் வாழ்வியல் இயல்பு, வேளிர் – வேந்தர் அரசுருவாக்கம், பேரரசு காலத்தில் சமூக குழுக்களின் வளர்ச்சி அதிகார பரிணாமம் குறித்த தெளிவுகள் வேண்டும். தெளிவான வரலாற்று புரிதல் பெறும் நோக்கில், கல்வெட்டுகளில் பயின்றுவரும் சமூகம் சார்ந்த தகவல்களை எப்படி எச்சரிக்கையாக கையாளுவது, குடி பெயர், சாதி பெயர் சர்ச்சைகள் இவற்றையெல்லாம் இன்றைய பொது சமூகத்துக்கான அறிவுக்கேள்வியாக முன்வைத்து தொல்லியல் அறிஞர் முனைவர் அர.பூங்குன்றன் அவர்களிடம் யாக்கை தன்னார்வ அமைப்பு சார்பில் நேர்காணல் செய்யப்பட்டது.
முனைவர் அர.பூங்குன்றன் அவர்கள், தமிழகத் தொல்லியல் துறையில் 29 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தென்னிந்திய அளவில் தொல்குடிகளின் வாழ்வியலை, தொல்லியல் மானுடவியல் பார்வையில் ஆய்வு செய்தவர். இவரது முனைவர் பட்ட ஆய்வேடு “தொல்குடி வேளிர் வேந்தர்” என்னும் தலைப்பில் நூலாக்கம் பெற்றது. இது தமிழகத்தில் ஆர்வலர்கள் ஆய்வாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல். பல்வேறு ஆய்வு தளங்களுக்கு அடித்தளமாக விளங்கிய இந்நூல், தமிழக அரசின் சிறந்த வரலாற்று ஆய்வு நூலுக்கான விருதை கடந்த 2020 ஆண்டு பெற்றிருக்கிறது. தொல்குடி சமூகத்தின் அடித்தள இயல்பினை சரியாக வரையறை செய்யவேண்டுமெனில் தொல்லியல் சான்றுகளோடு மானுடவியல் கருத்தாக்கங்களைப் பொருத்திப் பார்த்து எச்சரிக்கையாக முடிவுகளை வழங்க வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாடு கொண்டிருப்பவர். வரலாற்று கருத்தாக்கங்களை வளமான தரவுகளின் வழியே பேசியும் எழுதியும் வருபவர்.
இராசராசனின் சகோதரி குந்தவை எடுப்பித்த ஜீனாலயம் உள்ள ஊரான திருமலையில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டம் பெற்றுள்ளார். தமிழகத் தொல்லியல் துறையின் தொல்லியல் இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் தொல்லியல் துறை அலுவலராகப் பணியில் சேர்ந்துள்ளார். கரூர், போளுவாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நேரடியாக அகழாய்வு பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். தொல்லியல் துறையில் இருபத்தி ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி இணை இயக்குநர் பொறுப்பில் இருந்தபோது ஓய்வு பெற்றுள்ளார். பணியில் இருந்த காலத்திலும் ஓய்வு பெற்ற பின்னரும் தமிழக வரலாற்று ஆய்வு பணிக்காகப் பல்வேறு பங்களிப்புகள் வழங்கியுள்ளார்.
**கேள்வி: போளுவாம்பட்டி அகழாய்வில் வழிபாட்டு மரபு சான்றுகள் எதுவும் கிடைத்தனவா? **
பதில்: பௌத்தம் மதச் சான்றுகள் அதிகம் கிடைத்தன. யக்க்ஷன், யக்க்ஷி உருவங்கள் கிடைத்தன. விதவிதமான சிகை அலங்காரங்கள் கொண்ட குழந்தை உருவங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்றில் ஒரு குழந்தையின் மார்பில் வனையப்பட்ட அணிகலனை ஒத்த வடிவம் கொண்ட தங்க இழை ஒன்றும் தனியாகக் கிடைத்தது. இது சுவாரஸ்யமாக இருந்தது. ராணி போன்ற பெண் உருவங்கள் உட்பட ஏராளமான சுடுமண் உருவங்கள் இங்கு கிடைத்தன. கலை சாயலில் சாதவாகனர் பகுதியிலிருந்து இங்கு வந்திருக்கலாம் என்று நாகசாமி கூறினார். இருந்தாலும் இது இந்தப் பகுதியிலேயே உருவான உள்ளூர் கலை மரபு என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். அருகிலுள்ள பேரூரிலும் சுடுமண் உருவங்கள் கிடைத்தன. சுடுமண் உருவங்கள் செய்யும் கலைஞர்கள் மிகுந்த நகரமாக போளுவாம்பட்டி, பேரூர் பகுதிகள் இருந்துள்ளன எனலாம்.
**கேள்வி: உங்களின் முழுக் கவனமும் சாமான்ய மக்களின் வரலாற்றை பதிவு செய்யும் நடுகற்களின் மீது திரும்பிய தருணம் குறித்து சொல்லுங்கள்?**
பதில்: தொல்லியல் துறை பணிக்காக தர்மபுரி செங்கம் பகுதியில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுக்க சென்றிருக்கிறேன். அப்போது கிடைக்கும் கல்வெட்டுகளை வாசித்து பார்க்கும்போது சங்க இலக்கியங்களில் வரக்கூடிய சொற்கள் கல்வெட்டுகளிலும் வரும். அதுவும் வன்புல காடு, மலைப்பிரதேசம் என சாமானியர்கள் வாழக்கூடிய பகுதிகளில் கிடைக்கும் அந்தக் கல்வெட்டுகளில் செவ்வியல் அர்த்தம் பொதிந்த சொற்களை காணும்போது வியப்பாக இருக்கும். உதாரணமாக ‘கடிகா’ என்ற சொல் நடுகல்லில் வருகிறது. அதே சொல் புறநானூறு 239 பாடலில் ‘கடிகாவிற் பூச்சூடினன்’ என்று வருகிறது. கடிகா என்பது காவல் மிகுந்த சோலை / இடத்தைக் குறிப்பது. அதேமாதிரி ஆட்பெயர் பனையமாரியார், ஆந்தை, ஈசை பெரும்பாண அரைசர் போன்ற பெயர்கள் எல்லாம் சங்க இலக்கியங்களோடு தொடர்புடையன. இரண்டாவது, நடுகல் கல்வெட்டுகள் தனித்துவமாக சமூகம் சார்ந்த தகவல்களைத் தரக்கூடியன. இயல்பாகவே வரலாற்றில் கிடைக்கும் சமூக சார்ந்த தகவல்களைத் தேடுவதில் நாட்டம் கொண்டிருந்த எனக்கு, தகுந்தாற்போல் நடுகல் கல்வெட்டுகள் அமைந்ததும் ஒரு காரணம்.
**கேள்வி: நடுகல் கல்வெட்டுகள் வாசிக்கப்படுவதில் உள்ள சிரமங்கள் என்னென்ன?**
பதில்: நடுகல் கல்வெட்டுகள் எழுதியவரிடம் உள்ள பெரிய குறை அவருக்கு மொழி அமைப்பு பற்றிய புரிதல் இல்லாதது. இரண்டாவது உள்ளூர் வழக்கு சொற்களை கல்வெட்டில் கொண்டு வருவது. பூலாங்குறிச்சி கல்வெட்டு எழுத்தியல் மரபு கறாராகப் பின்பற்றப்பட்டு எழுதப் பெற்றிருக்கிறது. தொண்ணூறு என எழுத வேண்டுமானால் தோ எழுதி மேலே புள்ளி இடுவதால் பொருள் மாறுவதில்லை. ஆனால் அனைத்து நடுகல் கல்வெட்டுகளில் அதுபோன்று எதிர்பார்க்க முடியாது. இரண்டாவது, அரைசர் என்பதை அரைசரு என பேச்சு வழக்கில் எழுதுவர். திரு.நாகசாமி, ‘ரு’ வருவதால் இருளப்பட்டி நடுகற்கள் கன்னட மொழி தாக்கம் எனக் கூறி விட்டார். ஆனால், அது தமிழ்தான். பேச்சு வழக்கு என்பதை அவர்கள் உணரவில்லை. வடிவ ஒழுங்கின்மை, பேச்சு வழக்கு ஆகியவற்றை பொறுமையாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்யப்பட வேண்டும். போதிய ஆய்வும் விவாதங்களும் இல்லாமல் உடனுக்குடன் கல்வெட்டுகளின் பொருளை வெளியிட முயற்சி செய்தால் இதுபோன்று பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
**கேள்வி: வேதகால ஆரியர்களிடையே மாடுபிடி சண்டை இருந்தது. இங்கும் அது நிகழ்ந்தது. அதனடிப்படையில் இங்குள்ள நடுகல் பண்பாட்டில் ஆரிய பண்பாட்டு கலப்பு இருப்பதாக சிலர் எழுதுகிறார்கள். உங்கள் கருத்து…**
பதில்: ஆரியருக்கு நிலையான வாழ்க்கை கிடையாது. இங்கிருக்கும் நடுகல் சமூகம் நிலையான இருப்பிடத்தில் வாழும் நிலைக்கு வந்த சமூகம். பிற்காலத்தில் பொருளாதார அடிப்படையில் இரண்டும் ஒன்றுபோல் தெரிந்தாலும் அடிப்படையில் அவை வேறு வேறு. இருவருக்கும் கால்நடைதான் முதன்மை செல்வம். அதனடிப்படையில் இரண்டு இடங்களிலும் கால்நடை கவர்தல், மீட்டல் நிகழ்ந்தது. இங்கு நடுகல் வீரர்களே கடவுளாக மக்களால் போற்றப்பட்டனர். மாடுபிடி சண்டைக்குப் போகும் முன்னர் கொற்றவை தாய் தெய்வத்தை வழிபட்டு சென்றனர். பந்திப்பூர் வனத்தில் கிடைத்த பிற்கால நடுகல்லில் உருவம் கிருஷ்ணன் போல எடுக்கப்பட்டிருக்கும். அது நடுகல் வீரனை கிருஷ்ணனோடு அம்மக்கள் பொருத்திப் பார்க்கும் நிலையாக மட்டுமே கருத முடியும். இங்கு “கல்லே பரவினல்லது நெல் உகுத்து பரவும் கடவுளுமிலவே” – இறந்த போன நடுகல் வீரர்கள் நேரடியாக கடவுள்.
**கேள்வி: ‘தொல்குடி வேளிர் வேந்தர்’ நூல் தொல்குடி மேய்ச்சல் சமூகத்தின் வாழ்வியல் இயல்பையும் அந்நிலத்தின் அரசியல் பொருளாதாரப் பின்னணியும் விவரிக்கிறது. நடுகல் கல்வெட்டுகள் பின்புலத்தில் அவ்வாறான ஆய்வு அதற்கு முன்பு வெளிவரவில்லை. இந்த ஆய்வின் கருத்தாக்கம் எப்படி ஏற்பட்டது?**
இந்தக் கேள்விக்கான பதில் நாளை காலை 7 மணி பதிப்பில்
நேர்காணல் செய்தவர்: குமரவேல் இராமசாமி (யாக்கை தன்னார்வ அமைப்பு)
.
�,”