மநீம வேட்பாளர்களும் வெற்றியாளர்கள்தான்: கமல்

politics

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மநீம ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிவு தொடர்பாகக் கமல் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இன்று (பிப்ரவரி 23) அவர் வெளியிட்ட அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள் தான். உங்களை வெற்றி பெற செய்யாததை நினைத்து வருந்தும் அளவிற்குச் சேவையாற்றுங்கள். நாம் அரசியலுக்கு வந்தது மக்கள் பணி செய்வதற்காகத்தான்” என்று தனது வேட்பாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

மேலும் அவர் , வெள்ளிக்கொலுசு, ஹாட் பாக்ஸ், அண்டா, பட்டுப்புடவை, 2000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்ட போதும், தன் ஆன்மாவை அடகு வைக்காமல் நேர்மைக்கு வாக்களித்த வாக்காளர்களின் நெஞ்சுரம் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோல்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று பர்மனென்ட் ஃபெயிலியர். அதாவது திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லாதவை. மற்றொன்று மைக்ரோ ஃபெயிலியர். திருத்திக் கொண்டு வெற்றியை நோக்கி முன் நகரும் வாய்ப்பு உள்ளவை. நாம் சந்தித்திருக்கும் பின்னடைவு இரண்டாம் வகை.

பல இடங்களில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி இருக்கிறார்கள். கழகங்கள் போட்ட கள்ள ஓட்டுகளைக் கழித்தால் இன்னமும்கூட குறைவான சதவிகித மக்கள்தான் இந்த தேர்தலில் பங்கேற்று இருக்கிறார்கள்.

தமிழகத்தில் நிகழும் ஆபாச அரசியலை பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை. நாம் பேச வேண்டியது அவர்களிடம் தான்.

இந்தச் சூழலை மாற்றவே முடியாது என சோர்ந்து போனவர்களும் அரசியல் நமக்கு சொந்தமானது இல்லை என ஒதுங்கிக் கொள்ளும் இளைஞர்களும் மனம் மாறி தங்களது ஜனநாயக பங்களிப்பைச் செய்கையில் சூழல் மாறும்.

மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம் என்பது ஒரு சம்பிரதாயமான வார்த்தை. அதை நான் சொல்ல விரும்பவில்லை. மக்களும் பல சமயங்களில் கூட்டாக சேர்ந்து தவறான முடிவுகளை எடுப்பார்கள். வரலாறு நெடுக அதற்கு உதாரணங்கள் உண்டு. எங்களைப் போன்ற நேர்மையாளர்களை, அரசியலைப் பணம் குவிக்கும் தொழில் வாய்ப்பாகக் கருதாதவர்களை, வாக்குறுதி தந்து விட்டு ஏமாற்றாதவர்களை, ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க நினைப்பவர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை.

நீங்கள் யாரை எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உங்களின் அடுத்த தலைமுறை கவனித்துக் கொண்டிருக்கிறது. எங்களை போன்ற மாற்றுச் சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. கடமையில் தவறியவர்கள் உரிமையை இழப்பார்கள் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தும் துரதிர்ஷ்டவசமான உண்மை.

இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல” என்று தெரிவித்துள்ளார்

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *