eகேசிஆர் முயற்சி: ஸ்டாலின் சிக்குவாரா?

politics

தெலங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் பிப்ரவரி 20ஆம் தேதி சிவசேனா கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
மேலும் மகாராஷ்டிரா மாநில ஆளும் கூட்டணியின் முக்கிய தலைவரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரையும் சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசியுள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பாஜக அல்லாத மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஏற்கனவே சந்திரசேகரராவ் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

உத்தவ் தாக்கரே உடன் மதிய உணவு உண்டு சுமார் 2 மணிநேரம் பேசிய சந்திரசேகர் ராவ் அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது… “நாங்கள் இந்த நாட்டின் முக்கியமான அரசியல் பொருளாதார பிரச்சனைகளை பற்றி விவாதித்தோம். இப்போதைய நிலையில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான வழிவகைகள் பற்றி ஆலோசித்தோம். பெரும்பாலான விஷயங்களில் நாங்கள் ஒரே புள்ளியில் தான் இருக்கிறோம்.
நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராக வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒரே எண்ணம் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து ஹைதராபாத் அல்லது வேறு ஏதேனும் ஒரு நகரத்தில் சிறப்பு சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்திருக்கிறார் சந்திரசேகர ராவ்.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உடனான சந்திப்பு முடிந்த பிறகு, தேசியவாத கட்சி தலைவர் சரத்பவாரையும் சந்திரசேகரராவ் சந்தித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் மும்பை சென்ற மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அப்போது உத்தவ் தாக்கரே உடல் நலம் சரியில்லாததால் ஆதித்ய தாக்கரேவையும் சரத்பவாரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி எங்கே இருக்கிறது என்ற கேள்வியை மம்தா எழுப்பினார். அதற்கு காங்கிரஸ் கட்சி மம்தாவை கடுமையாக விமர்சித்து பதில் அளித்தது.
அதன் பிறகு சென்னை வந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கட்சியின் விருது வழங்கும் விழாவில்…”காங்கிரஸ் பாஜக இல்லாத கூட்டணி என்று சிலர் எடுக்கும் முயற்சிகள் பாரதிய ஜனதாவிற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இதில் திமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”என்று ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே பேசினார்.
அதற்கு ஸ்டாலினும், “திருமாவளவன் அவர்களின் அன்புக்கும் பேச்சுக்கும் நான் கட்டுப்பட்டவன்” என்று ஒரு பதிலைக் கூறினார்.

இதற்குப் பிறகு சமீப நாட்களாக திமுகவில் இருக்கும் முக்கியஸ்தர்கள் பலரும், “இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமராக வருவதற்கும் தகுதி படைத்தவர்” என்று நேற்றுவரை பேசுகிறார்கள்.

இந்த நிலையில் சந்திரசேகரராவ் ஏற்பாடு செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் கலந்து கொள்வாரா.,. தேசிய அரசியலில் திமுகவின் பங்கு காங்கிரஸ் உடனான கூட்டணியிலா அல்லது பாஜக காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணியிலா என்ற கேள்வி நீடித்துக் கொண்டே இருக்கிறது.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *