‘கொங்குமண்டத்தில் ஒரு திருப்புமுனை’ : திமுகவில் இணைந்த வ.து.நடராஜன்

Published On:

| By Balaji

கொங்கு மண்டலம் முதல்வரின் கோட்டையாக மாறும் என்று திமுகவில் இணைந்த வ.து.நடராஜன் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் உள்ளிட்டோர் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்து வரும் நிலையில், இன்று மேலும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கன்னியாகுமரி,தஞ்சாவூர், ராமநாதபுரம், நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.

இதில், அதிமுக முன்னாள் எம்.பி. கோவிந்தராஜன், 2001- 2006ஆம் ஆண்டு காலகட்டத்தில், அதிமுக ஆட்சியின் போது தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த வ.து.நடராஜனும், அவருடன் அவரது மகனும் அமமுக ராமநாதபுர மாவட்ட செயலாளருமான ஆனந்தனும் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

திமுகவில் இணைந்தது குறித்துவ.து.நடராஜன் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்திலிருந்து அதிமுக, பாமக, அமமுக, பாஜகவிலிருந்து விலகி 2250 பேர் திமுகவில் தங்களை உறுப்பினராகச் சேர்த்து, உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு அதனை இன்று முதல்வரிடம் அளித்துள்ளோம். இது கொங்கு மண்டலத்திற்கு ஒரு திருப்புமுனை. இது முதல்கட்டம் தான், இது தொடரும். இனி கொங்கு மண்டலம் முதல்வரின் கோட்டையாகும்” என்றார்.

அதிமுகவின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு, அது முடிந்துபோன கதை, கேள்வி குறியாகத்தான் இருக்கிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக தனது தனித்தன்மையை இழந்துவிட்டது” என்று கூறினார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share