பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம்!

politics

பாஜக ஆளும் மாநிலங்களான கோவா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 10ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஆனால் இம்முறை 200க்கும் அதிகமான இடங்களைத்தான் பாஜகவால் பெற முடியும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதுபோன்று பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியைக் கொடுக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன

இந்த சூழலில் இன்று உத்தரப் பிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11.00 மணி நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் 23.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதுபோன்று கடலோர மாநிலமான கோவாவில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் எனக் கோவாவில் நான்கு முனைப் போட்டி நிலவி வரும் நிலையில், 22க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றி வெற்றி பெறும் என்று கோவா முதல்வர் பிரம்மோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11 மணி நிலவரப்படி கோவாவில் 26.63 வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதுபோன்று இமயமலை மாநிலமான உத்தர காண்டில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது தாயுடன் கட்டிமாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்கு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் , இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று கூறினார்.

உத்தரகாண்டில் காலை 11 மணி நிலவரப்படி 18.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *