உத்தரவை திரும்ப பெற்ற எஸ்பிஐ!

politics

மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் பணிக்கு சேர்க்கப்படமாட்டார்கள் என்ற உத்தரவை பாரத ஸ்டேட் வங்கி திரும்பப் பெற்றது.

புதிய பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கான மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகளை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அதில், ஒரு பெண் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணியாக இருந்தால் அவர் பணியில் சேர தற்காலிகமாக தகுதி இல்லை என்றும் அவர்கள் பிரசவம் முடிந்து நான்கு மாதங்கள் கழித்து பணியில் சேர தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதே விதி பதவி உயர்வுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் இந்த உத்தரவுக்கு டெல்லி மகளிர் ஆணையம் , வங்கி ஊழியர்கள் சங்கம், மாதர் சங்கம், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்தன.

அனைத்து பகுதியிலிருந்தும் எதிர்ப்பு வந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தனது உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டது.

இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி இன்று(ஜனவரி 29) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கர்ப்பிணிப் பெண் விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் உட்பட, வங்கியில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான பல்வேறு உடற்தகுதி தரநிலைகளை எஸ்பிஐ சமீபத்தில் மதிப்பாய்வு செய்தது.

பணியாளர்களின் சுகாதார அளவீடுகளில் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் விதிமுறைகள் திருத்தப்பட்டது. ஆனால், ஊடகங்களின் சில பிரிவுகளில், இந்த விதிமுறைகளில் கொண்டுவரப்பட்ட திருத்தம் பெண்களுக்கு எதிரான பாரபட்சமாக காட்டப்படுகிறது.

எஸ்பிஐ எப்போதுமே அதன் பெண் ஊழியர்களுக்கு அதிகாரமளிப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது மொத்த பணியாளர்களில் 25 சதவீதம் பெண்கள் உள்ளனர். கோவிட்-19 காலகட்டத்தில், அரசாங்க அறிவுறுத்தல்களின்படி, கர்ப்பிணிப் பெண் ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை நிறுத்தி வைக்கவும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள வழிமுறைகளைத் தொடரவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *