இலவச வாக்குறுதிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? உச்ச நீதிமன்றம்!

politics

தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதிகள் அறிவிப்பது என்பது தீவிரமான பிரச்சினை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. இதில் பல்வேறு இலவசங்களும் இடம்பெற்றுள்ளன.

இலவச பொருட்கள் வழங்கப்படுவதை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், ஷிரோமனி அகாலி தல் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு பெண்ணுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளன.

காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு பெண்ணுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்ற இலவச வாக்குறுதி மட்டுமின்றி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு எட்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். கல்லூரி செல்லும் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.15000 . எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.10,000 , ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் 5000 ரூபாய் என இலவசங்களை அறிவித்து உள்ளது.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

சமாஜ்வாதி கட்சி 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பகுத்தறிவு இல்லாமல் இதுபோன்று அறிவிக்கப்படும் தன்னிச்சையான வாக்குறுதிகள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான விதிமுறைகளை மீறுவதாகும்.

பொது நோக்கங்களுக்காக இல்லாத தனியார் பொருட்களை பொது நிதியிலிருந்து வினியோகிப்பது அரசியலமைப்பின் 162, 266(3), மற்றும் 282 ஆகிய விதிகளை மீறுவதாகும்.

எனவே இதுபோன்ற வாக்குறுதிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அல்லது பொது நிதியிலிருந்து இதுபோன்று இலவசங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கும் கட்சிகளின் பதிவை அல்லது சின்னத்தை நீக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் போபண்ணா, ஹீமா ஹோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இதுபோன்ற அறிவிப்புகளை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை அறிய விரும்புகிறோம். இது ஒரு தீவிரமான பிரச்சினை என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. இவ்விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்டவர்கள் விதிமுறைகள் வகுப்பது சரியானதுதான். இதுகுறித்து தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *