டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: செந்தில் பாலாஜி

politics

ஆன்லைனில் மதுவிற்பனை செய்யும் எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(செப்டம்பர் 7) செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பேசுகையில் “ மதுபானங்களை ஆன்லைனில் விற்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக செய்தித்தாளில் படித்தேன். தமிழ்நாடு அரசு மதுபானங்களை ஆன்லைனில் விற்க நேர்ந்தால் மது ஆர்டர் செய்யும் நபர் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டால், அப்போது அந்த வீட்டில் இருக்கும் பெண் அந்த மதுவை வாங்க நேரிடும். இதனால் அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள் ? எனவே அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர், ஆன்லைனில் மது விற்பனை செய்யும் திட்டம் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, அப்படி வெக்கப்பட்டுனாலும் வாங்காம இருக்கலாம்ல என்றார்.

தொடர்ந்து கோரிக்கை மீது பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ” மதுபானங்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டம் அரசுக்கு அறவே இல்லை. எந்த நிலையிலும் ஆன்லைனில் மதுவிற்பனை திட்டம் தமிழ்நாட்டில் வராது என்று திட்டவட்டமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்கப்படும்.

மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

2019 – 20 ஆம் ஆண்டில் மதுவிற்பனை மூலம் 33 ஆயிரத்து 133 கோடி ரூபாய் வருவாயும், 2020 -21 ஆம் ஆண்டில் 33 ஆயிரத்து 811 கோடி ரூபாய் வருவாயும் கிடைத்துள்ளது.

இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தால் அரசுக்கு 7 ஆயிரத்து 907 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6 ஆயிரத்து 761 மேற்பார்வையாளர்கள் 15090 விற்பனையாளர்கள் மற்றும் 3158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 25009 சில்லறை விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ரூ. 500 ஊதிய உயர்வு வழங்கப்படும். இது ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு கூடுதலாக 15 கோடி ரூபாய் செலவாகும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *