sஎல்.முருகன்: தமிழக பாஜகவுக்கு தலித் தலைவர்!

Published On:

| By Balaji

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகவே இருந்துவந்தது. தலைவர் பதவிக்கான பொறுப்புகளை அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் கவனித்துவந்தார். பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் தலைவர் பதவிக்கு கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக, தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக பொதுச் செயலாளரும், தலைமை அலுவலக பொறுப்பாளருமான அருண் சிங் இன்று (மார்ச் 11) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை நியமித்து, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும், சென்னை பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பும் முடித்துள்ளார். 15 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவந்தார்.

கடலூரைச் சேர்ந்த டாக்டர் கிருபாநிதி 2000ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். அதன்பிறகு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

இதுதொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள முருகன், “என்னை பாஜக தலைவராக நியமித்ததற்காக பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து பதவி கொடுத்துள்ளனர். அதற்கேற்றவாறு செயல்படுவேன்” என்று குறிப்பிட்டார்.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share