2021ஆம் ஆண்டுக்கான ‘பெரியார் விருது பட்டியலை பெரியார் திடல் இன்று (ஜனவரி 12) வெளியிட்டுள்ளது.
இதன்படி இயக்குனர் கரு. பழனியப்பனுக்கும், போஸ்வெங்கட்டுக்கும் இந்த ஆண்டுக்கான பெரியார் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பெரியார் திடல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 26 ஆண்டுகளாக இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு பாடுபட்டுவரும் தமிழர்களை தெரிந்தெடுத்து தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி ‘பெரியார்’ பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மேற்கண்டுள்ளபடி பல்துறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்கு ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் தொடங்கி சமூகத் துறையிலும் பொதுத் தளத்திலும் முற்போக்குச் சிந்தனைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் செயல்படும் பெருமக்களான இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர் – நடிகர் போஸ் வெங்கட் ஆகியோர்க்கு ‘பெரியார் விருது’ வழங்கப்படவுள்ளது.
2021 ஜனவரி 16 அன்று மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திருநாள் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விருதாளர்களுக்கு பெரியார் விருது வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இயக்குனர் கரு. பழனியப்பன் தனது சினிமாக்களின் மூலம் பெரியாரைக் கொண்டு சென்றதை விட, தற்போது தொலைக்காட்சி விவாதத் தொடரான ‘தமிழா தமிழா’ மூலம் பல்வேறு பெரியாரியக் கருத்துகளை ஒவ்வொரு வீடுகளுக்குக் கொண்டு போய் சேர்த்து வருகிறார்.
அதேபோல நடிகராக பல வருட அனுபவம் மிக்க போஸ் வெங்கட், கடந்த ஆண்டு இயக்கிய கன்னிமாடம் திரைப்படம் சாதி வெறி, ஆணவக் கொலைகள் பற்றிய புதிய பார்வையை தமிழ் சினிமாவில் கொண்டு வந்தது.
**-வேந்தன்**
�,