oதமிழகத்தில் சமூகப் பரவலா? முதல்வர் பதில்!

health

தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறிவிட்டதா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 750 படுக்கை வசதி கொண்ட கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 7) திறந்துவைத்தார். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் 60 படுக்கைகள், அல்ட்ரா சவுண்ட், 6 நடமாடும் எக்ஸ்ரே கருவிகள், 28 வெண்டிலேட்டர்களுடன் இந்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக 80 மருத்துவர்களும், 100 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு இணையான வசதிகளுடன் கிண்டியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள யோகா பயிற்சிக் கூடம் உள்ளது. வைஃபை சேவை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 314 கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

சென்னையில் கொரோனா பரவல் தொடர்பான கேள்விக்கு, “கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தியதன் பலன் படிப்படியாகத்தான் கிடைக்கும். உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா பற்றி யாருக்குமே முழுமையாகத் தெரியாது. அரசு அறிவிக்கும் வழிமுறைகளை மக்கள் பின்பற்றினால் கொரோனா குறையும்” என்று பதிலளித்தார்.

தமிழகத்தில் சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டதா என செய்தியாளர் கேள்வி எழுப்ப, “அனைத்து இடங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால்தான் அது சமூகப் பரவல். தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சோதனை செய்து வருகிறோம். சென்னையில் காய்ச்சல் முகாம்கள் மூலம் நடந்த பரிசோதனையில் 10,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்” என்று சமூகப் பரவலாக மாறவில்லை என விவரித்தார்.

மேலும், “கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய அதேவேளையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும். அரசின் நிதி நிலைக்கு ஏற்ப மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்” என்றும் தனது பேச்சில் முதல்வர் கூறினார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *