உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 217 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா!

Published On:

| By Balaji

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் ஜூன் 18ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை புகுந்து விளையாடியதால் முதல் நாள் ஆட்டம் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் (ஜூன் 19) நடைபெற்றது. இதில், டாஸ் வென்று பந்து வீச்சை நியூசிலாந்து தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 64.4 ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (ஜூன் 20) தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அஸ்வினும் 22 ரன்களில் வெளியேறினார்.

நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், 200 ரன்களை எட்டவே இந்திய அணி கடும் பாடுபட்டது. 92.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 49 ரன்கள் அடித்தார்.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை பந்து வீச்சில் ஜேமிசன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் பேட் செய்ய தொடங்கியது.

ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

**-ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share