>என்.டி.ஆர் நினைவு தினம்!

entertainment

ஆந்திர மண்ணின் நடிகரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமா ராவ் நினைவு தினம் இன்று. தன்னுடைய துடிப்பான நடிப்பாலும், வசீகர தோற்றத்தாலும் ஆந்திராவின் மிகப்பெரிய தவிர்க்க முடியாத நடிகராக விளங்கியவர். 28 மே 1923ல் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த என்டிஆர், அவருடைய சித்தப்பாவிற்கு தத்துக்கொடுக்கப்பட்டார். பின்னாளில் படித்து பட்டம் பெற்ற பிறகு குண்டூர் மாவட்டத்தின் சார் பதிவாளர் பணியில் 1947ல் சேர்ந்தார். ஆனால் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் மூன்றே வாரங்களில் வேலையை ராஜினாமா செய்து விட்டு நடிப்பு துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.

1949ல் இயக்குநர் L.V. பிரசாத் இயக்கிய “மனதேசம்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதன் பின்னர் பலேடூரி பிள்ளா என்ற திரைப்படத்தில் நாகேஷ்வர ராவுடன்(நாகர்ஜுனா தந்தை) முதல் முறையாக இணைந்து நடித்தார். பின்னாட்களில் இவ்விருவரும் ஆந்திர சினிமாவின் இரு பெரும் துருவங்களாக ஜொலித்தனர்; நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

1957ல் வெளியான மாயாபஜார் கிருஷ்ணனாக நடித்தார். ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடித் தள்ளினர். அது மட்டுமல்லாது என்டிஆரை கிருஷ்ணனாகவே பாவிக்கத் துவங்கினர். அதன் பின்னர் சுமார் 17 திரைப்படங்களில் கிருஷ்ணனாக நடித்தார். அவருடைய பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. சிவாஜி கணேசன் நடித்த “கர்ணன்” படத்தில் கிருஷ்ணனாக என்டிஆர் நடித்து இருந்தார். மேலும் சில படங்களில் ராமராகவும், சில படங்களில் ராவணனாகவும் நடித்து இருக்கிறார்.

மூன்று தேசிய விருதும், இரண்டு ராஷ்ட்ரபதி விருதும், மாநில அரசின் நந்தி விருது ஒருமுறையும், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். 29 மார்ச் 1982 அன்று தெலுங்கு தேசம் என்ற தனிக்கட்சியை துவங்கி, காங்கிரஸுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தன்னுடைய ஏழரை வருட ஆட்சியில் பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் நிறைய சந்தித்தார். 1993ல் லக்ஷ்மி பார்வதி என்ற எழுத்தாளரை திருமணம் செய்துகொண்டார், இச்சம்பவம் ஆந்திர அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை கிளறியது.

1984ல் தமிழக முதலவராக விளங்கிய எம்ஜிஆர் உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலின் பிரச்சாரத்துக்கு, நட்பின் பேரில் என்டிஆர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். தன்னுடைய 72ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக ஜனவரி 18, 1996ல் இறந்து போனார்.

கடந்த வருடம் அவருடைய மகன் பாலகிருஷ்ணா நடிப்பில் ராமா ராவின் வாழ்க்கை வரலாறு இயக்குநர் க்ரிஷ் இயக்கத்தில் கதநாயக்குடு, மகாநாயக்குடு என்ற பெயரில் இரண்டு பாகமாக வெளியாகி படுதோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *