tபோலீஸார் துன்புறுத்தல்: மன உளைச்சலில் கமல்

entertainment

இந்தியன் 2 விபத்து தொடர்பான விசாரணையில் போலீசார் தன்னை துன்புறுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். கமல்ஹாசனின் கோரிக்கையைக் கேட்ட நீதிமன்றம் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் திரையுலகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியன் 2 படத்தின் இயக்குநர் ஷங்கரிடம் பிப்ரவரி 27ஆம் தேதியும், படத்தின் கதாநாயகன் கமல்ஹாசனிடம் மார்ச் 3ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “காவல்துறைக்கு விபத்தில் நடந்த சம்பவங்களை எடுத்துக் கூறியதுடன், இனி இதுபோன்று விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கு அவர்கள் பரிந்துரைக்கும் கருத்துக்களைத் தெரிந்துகொள்கிறோம் என்பதையும் அவர்களிடம் கூறிவிட்டு வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

ஆனால், அன்றைய இரண்டு மணி நேர விசாரணையில் நடந்ததே வேறு. மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தவற்றை நடித்துக்காட்டச் சொல்லி கமலை துன்புறுத்திய தகவலை முதன்முதலாக மின்னம்பலம் மொபைல் தினசரியில் [விசாரணையில் நடித்துக் காட்டச் சொன்னார்களா? கமல் கோபம்!](https://minnambalam.com/public/2020/03/06/35/shooting-spot-accident-kamal-angry-with-admik-govt) என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

கமலிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது? எப்படி விபத்து ஏற்பட்டது? கிரேன் எப்படி விழுந்தது எனப் பல கேள்விகளைக் கேட்டதுடன் நாளை(மார்ச் 18) காலை ஈவிபி ஃபிலிம் ஃபிட்டிக்கு விசாரணைக்காக நேரில் வரவேண்டும் என்றும் கூறியுள்ளனர். உடன் வேலை பார்த்த மூன்று நபர்களை இழந்து பெரும் துயரில் இருந்த கமலிடம், அவர்களது மரணத்தை நடித்துக்காட்ட சொன்னதுடன் சம்பவ இடத்திற்கு வரச் சொல்லி விசாரிக்க முற்பட்டது அவருக்கு பெரும் மன உளைச்சலைத் தருவதாக அமைந்திருக்கிறது. எனவே, போலீசார் விசாரணை என்னும் பெயரில் தன்னை துன்புறுத்துவதாக நடிகர் கமல், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று(மார்ச் 17) பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், காவல்துறை விசாரணைக்காக நடிகர் கமல் ஈவிபி ஃபிலிம் சிட்டிக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று உத்தரவிட்டதுடன், விசாரணைக்குத் தேவைப்பட்டால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமல் ஆஜராகலாம் என்றும் கூறியிருக்கிறார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *