nஆன்டி இண்டியன் தணிக்கையில் நடந்தது என்ன?

entertainment

திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன், முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம், ஆன்டி இண்டியன். இப்படம் சம்பந்தமான தணிக்கை குழு முடிவு அவருக்கு எதிராக வந்துள்ளது.

படத்தைப் பார்த்த தணிக்கை குழு, திரையரங்குகளில் திரையிடத் தகுதியான படம் இல்லை என்று ஆண்டி இண்டியன் படத்தைத் தடை செய்துள்ளது. படப்பிடிப்பு, எடிட்டிங், இசை கோர்ப்பு, அனைத்தும் நிறைவு பெற்று, கடந்த ஏப்ரல் மாதம் தணிக்கை சான்றிதழுக்காகப் படம் அனுப்பப்பட்டது.

பொதுவாக, படத்தில் ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது தணிக்கை குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து, தடை செய்துள்ளனர். அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூருவில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர். இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, ‘படம் பார்த்து முடித்த பிறகு படம் மிகவும் சிறப்பாக உள்ளதென ஒட்டுமொத்த குழுவினரும் பாராட்டினர்.

இந்தப்படம் கண்டிப்பாக வெளிவரவேண்டு மென்று விரும்புகிறோம். அதேநேரம் 38 இடங்களில் காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க அல்லது ம்யூட் செய்யவேண்டும். படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும். அப்படிச் செய்து மறு தணிக்கைக்கு உட்பட்டால் U/A சான்றிதழ் தருகிறோம்’ என்று ரிவைசிங் கமிட்டியினர் தெரிவித்தனர்’ என்றனர்

படத்தில் நீக்க/ ஒலியின்றி செய்ய வேண்டும் என தணிக்கைக் குழுவினர் கூறிய காட்சிகளில் சில…

நடிகர் கபாலி எனும் வசனம் படத்தில் அடிக்கடி வருகிறது. அப்பெயரைக் கொண்ட வசனம் வரும் காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும். கமுக, அகமுக என்று வரும் இரண்டு கட்சிகளின் பெயர்களையும் நீக்க வேண்டும். படத்தில் வரும் தேசியக்கட்சி அரசியல்வாதி கேரக்டர் ஒன்றின் பெயர் ‘ராஜா’ என்று இருக்கிறது. அந்த பெயரையும் நீக்க வேண்டும்.

ஆனால் இதை படத்தின் இயக்குனர் ஏற்கவில்லை. ஆன்டி இண்டியன் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா, “38 இடங்களில் காட்சிகளை வெட்டினால், படத்தின் மையக்கதையே மாறிவிடும்; காட்சி அமைப்புகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு ரசிகர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும்., ஆகவே கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம். அங்கே சாதகமான தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம் என்றார்.

இதற்கிடையே, படத்தில் நடிகர் கபாலி என்ற கதாபாத்திரம் நடிகர் ரஜினியையும், ராஜா என்கிற கதாபாத்திரம் ஹெச்.ராஜாவையும் குறிப்பிடுவதாகவும், கமுக, அகமுக என்ற கட்சிகளாகப் படத்தில் குறிப்பிடப்படுபவை தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகளை குறிப்பிடுவதாகவும் தணிக்கைக் குழுவினர் நினைக்கின்றனர்” என்று ஒரு தகவல் தணிக்கை குழு அலுவலக வட்டாரத்தில் கூறப்படுகிறது

இது குறித்துப் படக்குழுவினர் கூறும்போது, படத்தில் எந்தவொரு தனி நபரையோ, அமைப்புகளையோ பொய்யான குற்றச்சாட்டுகளுடன் விமர்சிக்கவில்லை. இதைப் படம் பார்ப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். நிச்சயமாக, வெட்டுகள் இன்றி, படம் வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ்ப்படத்திற்கு 38 வெட்டுகள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது

‘உட்தா பஞ்சாப்”, “பத்மாவதி” போன்ற ஹிந்தி படங்களுக்குத்தான் அதிக வெட்டுக்கள் பரிந்துரைக்கப்பட்டது. அந்த வரிசையில் ஆண்டி இன்டியன் இடம்பெற்றுள்ளது. அறிவியலுக்குப் புறம்பான உண்மைக்குப் புறம்பான காட்சிகள்,மற்றும் ஆபாச காட்சிகளை இரட்டை அர்த்த வசனங்களைப் படங்களில் அனுமதிக்கும் தணிக்கை குழுவுக்கு அரசியல் பேசும்படம் என்றால் அளவுக்கு அதிகமான பொறுப்புணர்வும், ஆர்வமும் தமிழகத்தில் மட்டும் வருவது ஏன் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்கின்றனர் திரைத்துறையினர்.

கபாலி படத்திற்கு கைக்கட்டி சேவகம் செய்த தமிழ்நாடு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழைச் சிங்கப்பூர் அரசாங்கம், ஓரமாக வைத்துவிட்டு வலிமையான வன்முறை காட்சிகளை வெட்டிவிட்டு தணிக்கை சான்றிதழ் வழங்கியதாக அப்போது கூறப்பட்டது.

தெலுங்கு,மலையாள மொழிகளில் அங்கிருக்கும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை அடையாள குறியீட்டுடன் விமர்சனம் செய்து தயாரிக்கப்படும் படங்களுக்குத் தமிழகம் போன்று இடையூறு கிடையாது காரணம் அங்கு அரசியலையும் – சினிமாவையும் தனியாகப் பார்க்கின்றனர். விமர்சனங்களை அறிவுப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக அனைத்து தரப்பும் பார்க்கின்றனர்.

தமிழகத்தில் தங்களைப் பற்றி தவறாக அல்லது விமர்சனம் செய்ய எண்ணுகிறார்கள் என்ற தகவல் கிடைத்தாலே போதும் அவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். பொருளாதார பயம் காட்டப்படும். அதை மீறி படம் வெளியானால் அந்தப் படத்தை கேபிள் டிவியில் போட்டு வசூல் குறைய வழிவகுப்பார்கள் தமிழக அரசியல்வாதிகள். இது போன்றதொரு நிலைமையை தமிழகத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான” முதல்வன்” படம் எதிர்கொண்டது

ஆனால் அரசியல் ரீதியான திரைப்படங்களை முடக்கும் விதமாகத் தணிக்கைத் துறை செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டுத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர், நாயகன்,ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை, கமல் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட ஹேராம், இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் திரைக்கதையாகக் கொண்ட காற்றுக்கென்ன வேலி, சமகால மத அரசியலைப் பகடி செய்த ஜிப்சி உள்ளிட்ட படங்கள் தணிக்கைத் துறையால் குதறப்பட்ட நெடிய வரலாறு தமிழ் சினிமாவுக்கு உண்டு.

மூன்று மதங்கள் மற்றும் சமகால அரசியலை மையமாகக் கொண்டு சமீபத்தில் வெளியாகியுள்ள ஆன்டி இண்டியன் முதல் பார்வை சகல தரப்பினரின் பாராட்டும், அதற்கு இணையாக எதிர்க்கருத்தும் கிடைத்தது. படத்தின் திரைக்கதை என்ன ஏன் இந்த கெடுபிடி என படத்தில் பணியாற்றியவர்கள், தணிக்கை குழுவுக்கான வேலைகளைச் செய்தவர்களிடம் கேட்ட போது படம் தொடக்கத்திலிருந்து இறுதிவரை இந்திய, தமிழக அரசியலைப் பகடி செய்யக்கூடியதாகக் காட்சிகள், வசனங்கள் உள்ளன படத்தின் கதாபாத்திரங்களின் பாத்திர வடிவமைப்பு அணியக்கூடிய உடைகள், அனைத்தும் தமிழகத்தின் சமகால அரசியல் வாதிகளை நினைவூட்டுவதாக இருக்கிறது. அதனால்தான் இவ்வளவு பிரச்சினை என்கின்றனர் திரைத்துறை வட்டாரத்தில்.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *