இன்று பும்ரா தலைமையில் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்!

விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 1 – இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி, இங்கிலாந்து சென்றது. அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடியபோது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஹோட்டல் அறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோனையில் கொரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை என்பது கண்டறியப்பட்டது.

இதனால் தொடர்ந்து தனிமையில் உள்ள அவர் முக்கியமான இந்த டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது. துணை கேப்டன் லோகேஷ் ராகுல் காயத்தால் ஏற்கனவே விலகி விட்டார். எனவே ரோஹித் சர்மாவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றுவார் என்று கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

28 வயதான பும்ரா இதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை. மேலும் 1987ஆம் ஆண்டு கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

இந்திய அணி இந்த ஐந்தாவது போட்டியை டிரா செய்தால்கூடப் போதும். தொடரை வென்றுவிடலாம். அதேநேரத்தில், இங்கிலாந்து இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும். வென்றால் மட்டுமே தொடரை டிராவாவது செய்ய முடியும்.

-ராஜ்

+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *