முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் சென்னை அணி முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
சென்னையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது.
முன்னதாக அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் சென்னையில் நடந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் 17 மைதானங்களில் கடந்த ஒருமாத காலமாக விறுவிறுப்பாக ஹாக்கி கால்பந்து, கைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் தொடரின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி 61 தங்கம், 32 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் என மொத்தம் 112 பதக்கத்துடன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து 17 தங்கம், 17 வெள்ளி மற்றும் 18 வெண்கலம் என மொத்தம் 52 பதக்கத்துடன் செங்கல்பட்டு அணி 2வது இடமும், 15 தங்கம், 13 வெள்ளி மற்றும் 24 வெண்கலம் என மொத்தம் 52 பதக்கத்துடன் கோயம்புத்தூர் அணி 3வது இடமும் பிடித்துள்ளன.
திருவள்ளூர்(32), ஈரோடு(24), திருநெல்வேலி(29), திருச்சி(29), வேலூர்(22), மதுரை(35), மயிலாடுதுறை(16) உள்ளிட்ட அணிகள் முறையே முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன.
இந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பலரும் போட்டியை மிகச் சிறப்பாக நடத்திய முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ISSF உலக சாம்பியன்ஷிப்: 2வது இடம்பிடித்த இந்தியா!
காவல்நிலையங்களில் ரூ.10 கோடியில் சிறப்பு வசதிகள்!