8கேஜிஎஃப் 2: விமர்சனம்!

entertainment

இந்தியாவில் தங்கம் வெட்டி எடுக்கும் இடம் கோலார் தங்க சுரங்கம். அது கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது என்பதை பள்ளி பாடங்களில் படித்திருப்போம்.

கோலார் தங்க வயல் கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு கோலார் மாவட்டத்தின் தலைமையகத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ராபர்ட்சன்பேட்டை தாலுகாவில் இந்த சுரங்கம் உள்ளது. ஆங்கிலேயர் ஆண்டபோது தங்க வேட்டைக்காக அப்பாவி மக்கள் அங்கே அடிமைகூலிகளாக அமர்த்தப்பட்ட வரலாறு நமக்கு தெரியாது. இந்தியாவில் முதன்முறையாக முழுமையாக மின்சார வசதி பெற்ற சிறுநகரம் கோலார் தங்கசுரங்கம் அமைந்திருக்கும் பகுதி என்பதும் சுவாரஸ்யமான வரலாற்று தகவல். அப்படிப்பட்ட வரலாற்று தகவல்களை கற்பனை கலந்து திரைப்படமாக தயாரிக்கப்பட்ட படம்தான் கேஜிஎஃப்.

இதன் முதல்பாகத்தில் கோலார் தங்கச் சுரங்கத்தை ஆட்டிப் படைக்கும் கருடனைக் கொன்றதோடு முடியும் கேஜிஎஃப் முதல்பாகம்.

கருடன் இறந்ததும் கேஜிஎஃப்பின் தலைவராக அவருடைய தம்பி முயற்சி செய்ய அவரையும் கொன்று நாயகன் யஷ் (படத்தில் ராக்கி பாய்) கேஜிஎஃப்ஃபை ஆளும் பொறுப்பை எடுத்துக் கொள்வதோடு படம் தொடங்குகிறது கேஜிஎஃப் 2. நாயகன், பாட்ஷா போன்ற படங்களில் தாதாக்கள், ரௌடிகள் குறிப்பிட்ட ஏரியாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள் அப்பகுதி மாமூல் வருமானமும், அதிகாரமும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதுபோன்ற ஒருவரி கதைதான் கேஜி எஃப் திரைப்படம்.

கோலார் தங்கசுரங்கத்தில் கிடைக்கும் தங்கம் முழுவதும் தனக்கானது, அந்த எல்லைக்குள் தன் அனுமதி இல்லாமல் நுழைய கூடாது, அதிகாரம் செலுத்தக்கூடாது என்பதுதான் மைய திரைக்கதை. சாதாரண திரைக்கதையை திரைமொழியில் கொடுத்த விதத்தில் உலகம் முழுவதும் கம்பீரமாக கல்லா கட்டுகிறது.

இந்திய சினிமாவில் சிறு புள்ளியாக இருந்தது கன்னட திரையுலகம், அந்த மொழியில் தயாராகும் படங்களை கன்னட மக்களே தியேட்டருக்கு வந்து பார்ப்பதில்லை என்று மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் பல பொதுமேடைகளில் வருத்தத்துடன் பேசியது உண்டு. இன்றைக்கு உலகம் முழுவதும் கேஜிஎஃப் திரைப்படத்தின் வெற்றி மூலம் கன்னட சினிமாவுக்கு கௌரவம் சேர்த்திருக்கிறார்கள். இந்தியாவில் அதிக முதலீடுகளை கொண்டுள்ள இந்தி சினிமா, அதற்கடுத்த நிலையில் உள்ள தமிழ், தெலுங்கு,மலையாள திரைப்படங்கள் நிகழ்த்த முடியாமல் போன சாதனைகள் பலவற்றை கேஜிஎஃப் படம் நிகழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் 10,000 ம் திரையரங்குகளில் படம் வெளியானது, முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் குறுகிய நேரத்தில் 40 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது, உலகம் முழுவதும் முதல் நாள் மொத்த வசூல் 134.5 கோடி ரூபாய் அதையும் பகிரங்கமாக பொதுவெளியில் அறிவிப்பாக வெளியிட்டது என எல்லாமே இந்திய சினிமாவில் அசாத்தியமான சாதனைகளாகவே பார்க்கப்படுகிறது.

முதல் பாகத்தில் தொழிலாளர்களின் அடிமை வாழ்க்கையும், அதனையொட்டிய போராட்டங்களுமாக முடிந்த கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் இந்திய, சர்வதேச அரசியலை கலந்து கட்டி கபடி விளையாடிருக்கிறர் இயக்குநர் நீல் என்றால் மிகையல்ல. கோலார் தங்க வயலை ஆளும் பொறுப்போடு எதிர்களிடமிருந்து நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியையும் கடத்தி வந்து விடுகிறார். அவரைக் கொல்ல அதிகார பசிகொண்ட எதிரிகள் திட்டமிடுகிறார்கள். இந்திய அரசாங்கமும் அவருக்கு எதிராகக் களமிறங்குகிறது. ராக்கி பாய் என்னவானார்? கேஜிஎஃப்பின் நிலை என்ன? ஆகிவற்றுக்கு விடை சொல்கிறது கேஜிஎஃப் சாப்டர் – 2.

படம் தொடங்கியதிலிருந்தே ராக்கியின் ராஜ்ஜியம்தான். ராக்கி பேசுவதைவிட அவரைப் பற்றி அனைவரும் பேசுவது எம்ஜிஆர் படங்களை போன்று அதிகம். ராக்கி பாயாக நடித்திருக்கும் யஷ் அதற்குப் பொருத்தமாக இருக்கிறார். கம்பீர நடை, கனத்த குரலில் தமிழ் வசனங்கள்,
மிரட்டும் பார்வை எனப் படம் நெடுக ஒவ்வொரு காட்சியையும்தான் எண்ணியபடி அணுஅணுவாக ரசித்து யஷ்சை நடிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர்.

நாயகி ஸ்ரீநிதிஷெட்டிக்கு ஒரு பாடல் மற்றும் கூடுதல் காட்சிகள். தொடங்குன்னு சொல்ல அம்மா இருந்தாங்க நிறுத்துன்னு சொல்ல ஆள் இல்லை என ஈஸ்வரிராவ் சொல்ல அந்த இடத்தை இயல்பாக ஆக்கிரமித்துக்கொள்கிறார் ஸ்ரீநிதிஷெட்டி. சஞ்சய்தத் 30 வருடங்களுக்கு முன்பு கல்நாயக் இந்திப்படத்தில் அவர் ஆடிய ருத்ரதாண்டவ நடிப்பை கேஜிஎஃப் படத்தில் பார்க்க முடிகிறது. கதைப்படி கதாநாயகன் யாஷுக்குக் கடும் நெருக்கடி கொடுக்கிறார்.

பிரதமராக நடித்திருக்கும் ரவீனா டான்டன் தன் உடல்மொழியால், அதிகார தோரணையுடன் கதகளி ஆட்டம் ஆடியிருக்கிறார். முதலாளித்துவ அரசு அமைப்பில் அதிகாரத்தைத் தாண்டியது மாபியாக்களின் அதிகாரம் என ரவீணா டான்டன் உணரும் காட்சி அமைப்பு இந்திய அரசியல்வாதிகளின் கையாளாகாதத்தனத்தை அப்பட்டமாக கூறிச் சொல்லிச்செல்கிறது.

பிரகாஷ்ராஜ், மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோர் வருகிற காட்சிகள் திரைக்கதையோட்டத்தை வலிமையாக்குகிறது.

புவன் கெளடாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும்பலம். பல காட்சிகள் கண்களை விரியவைக்கின்றன.இசையமைப்பாளர் ரவி பசுரூர் கூடுதல் நேரம் வேலை செய்திருக்கிறார்.
கதாநாயகன் என்பதைத் தாண்டி காவிய நாயகனாக யஷ்சை சித்தரித்திருக்கும் இயக்குநர் பிரசாந்த்நீல், அதற்கேற்ப உடல்பலம் மட்டுமின்றி மனபலம் மற்றும் அறிவுபலம் ஆகியனவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து யஷ்ஷின் கதாபாத்திரத்தை வடிவைமைத்திருக்கிறார்.

பாராளுமன்றத்துக்குள் புகுந்து அமைச்சரைக் கொல்வது, பிரதமரின் முன்பே கால் மேல் கால் போட்டு சவால்விடுவது போன்ற காட்சிகள் தமிழ் சினிமாக்களில் கதாநாயக பிம்பத்தை முன்நிறுத்தி வைக்கப்பட்டு காமெடியாக மாறியிருக்கும். ஆனால் கேஜிஎஃப் படத்தில் இயல்பாக பொருந்திபோகிற வகையில் இடம்பெற்றிருக்கிறது. கதாநாயகன் என்றால் பறந்து பறந்து சண்டையிடுவதும், பஞ்ச் வசனங்கள் பேசிவிட்டு போவது இல்லை. கதாபாத்திரத்துக்கு ஏற்ப கடின உழைப்பையும் கொட்டவேண்டும் என்பதை யஷ் கதாபாத்திரத்தின் உழைப்பு உணர்த்துகிறது.

சினிமா என்பது இயக்குநர்களின் மீடியம் அவர்கள் சொல்வதை கேட்டு கதாநாயகர்கள் திரைக்கதைக்கு ஒப்புக்கொடுத்தால் சிறந்த நடிப்புடன் சிறந்த படத்தையும் கொடுக்க முடியும் என்பதை கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் நிருபித்திருக்கிறார். முதல் பாகத்துடன் இரண்டாம் பாகத்தை தொடர்புபடுத்தி ரசிகனை திருப்திபடுத்துவது சாதாரண முயற்சி இல்லை. முதல் இரண்டு பாகங்களிலும் பார்வையாளனை திருப்திபடுத்திய இயக்குநர்,
ராக்கி பாய்க்கு இந்திய அரசே எதிரியாகிவிட்டதால் அதன் அதிகார எல்லையைக் கடந்து தன் ராஜாங்கத்தை விரிவுபடுத்துவதாக கேஜிஎஃப் மூன்றாம் பாகத்துக்கான முன்னோட்டமாக காட்சி வைத்திருப்பது சிறந்த திட்டம்.

மன்னர்கள் பற்றிய, மக்களுக்காக திருடர்களாக மாறிய காவிய நாயகர்கள் பற்றிய புனைகதைகள் பாட்டிகளால் காலங்காலமாக சுவாரசியமாக கூறப்பட்டு வருகிறது அப்படிப்பட்ட ஒரு கதையை கற்பனை கலந்து பிரம்மாண்டமாக, பிசிறுதட்டாமல ஒரேநேரத்தில் கேட்கவும் பார்க்கவும் வைத்து ரசிகர்களை மயங்க வைத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *