மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

சென்னை: புதிய சினிமா அனுபவத்துக்குத் தயாரா?

சென்னை: புதிய சினிமா அனுபவத்துக்குத் தயாரா?

திரையரங்கில் படம் பார்ப்பது என்றாலே ரசிகர்களின் விசில், கைதட்டல் போன்ற சத்தங்கள் நிரம்பியிருக்கும். நம்மில் பலரை அந்தச் சத்தங்கள் படங்களை முழுமையாக ரசித்துப் பார்க்கவிடாமல் தடுக்கும். தற்போது திரைப்பட பிரியர்களுக்காக DND (Disturabance-free Shows) என்ற புதுவிதமான காட்சி ஒன்றை சென்னை சத்யம் சினிமாஸ் செப்டம்பர் மாத இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தக் காட்சிகளை பார்க்க வரும் ரசிகர்களுக்கு சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதில்,

* அரங்கினுள் செல்போன் உபயோகப்படுத்தக் கூடாது.

* படத்தின்போது கைதட்டவோ, விசில் அடிக்கவோ, பேசவோ கூடாது.

* சிற்றுண்டிகளைப் படம் ஆரம்பிக்கும் முன்பே வாங்கிவிட வேண்டும்; படத்தின் நடுவில் செல்லக் கூடாது.

* DND காட்சியைப் பார்க்க 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி.

* ரசிகர்கள் முன்பு இருக்கும் இருக்கையைத் தள்ளவோ, உதைக்கவோ கூடாது.

* இடைவேளை கிடையாது.

* குழந்தைகள் அனுமதி இல்லை.

* தாமதமாக வருபவர்களுக்கு அனுமதியில்லை; கதவுகளும் மூடப்படும். அவர்களின் பணம் திருப்பித் தரப்படும்.

* திரையரங்கின் அதிகாரிகள் உங்களைக் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.

* காட்சியின்போது செல்போன் உபயோகப்படுத்தினால் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.

இது போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.

இது சம்பந்தமாக சத்யம் சினிமாஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, “அந்தத் தகவல் உண்மைதான். ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மாலைக் காட்சியாக DND காட்சி திரையிடப்படும். இதனை முதலில் சத்யம் சினிமாஸில் இருந்து ஆரம்பித்து, பின்பு எல்லா எஸ்.பி.ஐ. சினிமாவிலும் திரையிட இருக்கிறோம். இந்தக் காட்சி விதிமுறைகள் சற்று குதர்க்கமாக இருக்கலாம். ஆனால், படத்தை எந்த விதமான தொந்தரவுகளோ, சத்தங்களோ இல்லாமல் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களுக்குத்தான் DND காட்சி” என்றனர்.

“பெரிய ஹீரோக்கள் படங்களை வெளியிடுவீர்களா?” என்றபோது “இல்லை” என்றனர். “அப்புறம் எந்த மாதிரி படங்களை திரையிட உள்ளீர்கள்?” எனக் கேட்க, “ஹாரர், த்ரில்லர் படங்களை அமைதியாகப் பார்த்தால்தான் அதன் தன்மையை முழுமையாக ரசிகர்கள் அடைய முடியும். ஹாரர் படங்களின் முக்கியக் காட்சிகளில் சத்தம் போட்டு கூச்சலிட்டால், அதன் தன்மையை ரசிக்க முடியாது. அதனால் பெரிய மாஸ் ஹீரோக்கள் படங்களை (DND காட்சியில்) நாங்கள் திரையிடப் போவதில்லை. ஹாரர் த்ரில்லர் படங்கள் மட்டுமே திரையிட திட்டமிட்டுள்ளோம். இடைவெளி இல்லாத படங்களை நிம்மதியாகவும், முழு தன்மையுடனும் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இம்மாதிரியான DND காட்சிகள் நல்ல வாய்ப்பாக அமையும்” எனத் தெரிவித்தார்கள்.

உலகிலுள்ள பல திரையரங்குகளில் இம்மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon