xடிஜிட்டல் திண்ணை: திடீர் டென்ஷனில் ஜெயலலிதா!

public

மாலை நேரமாகியும் கொளுத்தும் வெயில் குறையவே இல்லை. அந்த நேரத்தில்தான் ஃபேஸ்புக்கில் தயாராக இருந்தது இந்த ஸ்டேட்டஸ்.

‘‘தேர்தல் முடிவைவிட ஜெயலலிதா அதிகம் எதிர்பார்த்திருந்தது சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின் தீர்ப்பைத்தான். அது இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்துவருகிறது. கடந்த மாதம் 12ம் தேதி நடந்த விசாரணையின்போது, ஜுன் 1ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைப்பதாகவும், அனைத்துத் தரப்பினரும் அன்றே தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் சொல்லியிருந்தனர். அந்த இறுதிக்கட்ட விசாரணை இன்று நடந்தது.

இன்று காலையிலிருந்தே ஜெயலலிதா சற்று டென்ஷனாகவே இருந்தாராம். வழக்கம்போல எழுந்தவர், இன்று நீண்டநேரம் பூஜையில் உட்கார்ந்திருந்தாராம்.

டெல்லியில் இருந்த படியே வழக்கறிஞர்கள் கார்டனில் இருக்கும் பூங்குன்றனுக்கு வழக்கு பற்றிய தகவல்களைச் சொல்ல அதை உடனுக்குடன் ஜெயலலிதாவிடம் இண்டர்காம் மூலமாக சொல்லிக்கொண்டே இருந்தாராம் .. பூங்குன்றனின் போனில் சொன்ன தகவல்களுக்கு ஜெயலலிதா எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் இருந்தாராம்.

காலை 11 மணியளவில் மதுரையில் உள்ள கோயில் ஒன்றிலிருந்து பிரசாதம் கார்டனுக்கு வந்திருக்கிறது. அதை பூங்குன்றன்தான் வாங்கிக்கொண்டாராம். முதல்வருக்கும், பிரசாதம்வந்த தகவலைச் சொல்லியிருக்கிறார். உடனே, பிரசாதத்தை மட்டும் அனுப்பச் சொல்லியிருக்கிறார் முதல்வர்.

சசிகலாவும், இளவரசியும் மட்டும் ஜெயலலிதாவுக்கு அருகிலேயே இருந்தார்களாம். அப்போது ஜெயலலிதா சில விஷயங்களை மனம்விட்டுப் பேசியதாகச் சொல்கிறார்கள். ‘இந்த விசாரணையில் என்ன வேணும்னாலும் தீர்ப்பு வரலாம். எது வந்தாலும் அதைச் சமாளிக்க நாம தயாராக இருக்கணும்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். அதற்கு சசிகலா, ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காதுக்கா… நல்லதுதான் நடக்கும்’ என்று பேசினாராம். ஆனாலும், ஜெயலலிதா எதையோ யோசித்தபடியே இருந்தாராம்.

கடந்தமுறை, ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றார். முதல்வர் பதவியும் இழந்தார். அது ஜெயலலிதா எதிர்பார்க்காத நிகழ்வு. கோர்ட்டுக்குப் போய்விட்டு மாலையில் சென்னை திரும்பிவிடலாம் என நினைத்து பெங்களூருவுக்குப் போனவரை அங்கேயே கைதுசெய்து உட்காரவைத்துவிட்டார்கள். அதனால், அப்போது வேறுவழியில்லாமல் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆக்கப்பட்டார். ஆனால், பன்னீர்மீது அண்மைக்காலமாக ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஒருவேளை தீர்ப்பு பாதகமாக வந்தால், மீண்டும் பன்னீர் என்பதில் ஜெயலலிதாவுக்கு விருப்பம் இல்லை. பன்னீருக்கு மாற்று யார்? என்பதே ஜெயலலிதாவின் யோசனையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இன்னொரு தகவலும் கார்டனில் இருந்து கசிய ஆரம்பித்திருக்கிறது. முன்பெல்லாம் எந்தத் தகவலாக இருந்தாலும் பூங்குன்றன், சசிகலா அதன்பிறகே ஜெயலலிதாவின் கவனத்துக்கு வந்துசேரும் என்பதே நிலைமை. பத்திரிகைகளில் வரும் பல செய்திகள்கூட அவரது கவனத்துக்குப் போகாமல் மறைக்கப்பட்டது உண்டு. அத்துடன், கட்சி நிர்வாகிகள் அனுப்பும் புகார்களும் ஜெயலலிதா பார்வைக்குப் போகாமல் மறைத்துவந்தார்கள். ஆனால், இப்போது காலையில் செய்தித்தாள்களை கேட்டு வாங்கிப் படிக்க ஆரம்பித்திருக்கிறாராம் ஜெயலலிதா. அத்துடன், அதிகாரிகள் தரப்பில் இருந்து சொல்லப்படும் தகவல்கள் எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் என் கவனத்துக்கு வரவேண்டும் என்றும் பூங்குன்றனுக்கு உத்தரவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். நல்ல மாற்றமாக இருந்தால் வரவேற்க வேண்டியதுதானே!’’ என்ற ஸ்டேட்டஸ் போஸ்ட் ஆனதும், நிறைய லைக்ஸும், ஷேர்ஸும் பறந்தது.

அந்த நேரத்தில்தான் வாட்ஸ் அப்பும் ஆன்லைனில் வந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுக்கு லைக்கை போட்டுவிட்டு, ஏதோ டைப்பிங் செய்ய ஆரம்பித்திருந்தது. “நடந்துமுடிந்த தேர்தலையே புரட்டிப்போட்டதில் கரூர் அன்புநாதனுக்கு நிறையப் பங்குண்டு. அரவக்குறிச்சி தேர்தல் இன்றுவரை நடக்காமல் இருக்க மிக முக்கியக் காரணம் அன்புநாதன். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் நெருக்கமான நண்பர் இவர். கருர் அருகே உள்ள தோட்டக்குறிச்சியில் இருக்கும் அன்புநாதன் வீட்டில் இருந்துதான் ஏராளமான பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அதில், அன்புநாதன்மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஜாமீனில் இருக்கும் அன்புநாதன், கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். இந்தச் சூழ்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேறு ஒரு நபரின் காரில் திண்டுக்கல் போனதாகச் சொல்கிறார்கள். திண்டுக்கல்லில் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பங்களா வீட்டுக்குள் அந்தக் கார் போயிருக்கிறது. அதன்பிறகு சரியாக அரைமணி நேரத்துக்குப்பிறகு இன்னொரு கார் அதே வீட்டுக்குள் வந்திருக்கிறது. அந்தக் காரில் வந்தவர் நத்தம் விஸ்வநாதன் என்று சொல்கிறார்கள். சர்ச்சைக்குப்பிறகு அன்புநாதனைச் சந்திக்காமல் இருந்த நத்தம் விஸ்வநாதன் அன்றுதான் அவரைப் பார்த்திருக்கிறார். அப்போது நிறைய விஷயங்களை இருவரும் பேசியதாகச் சொல்கிறார்கள். திருப்பரங்குன்றம் தொகுதியில் வரப்போகும் இடைத்தேர்தலில் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நத்தம் விஸ்வநாதன். அப்படி வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் எப்படி தேர்தலை எதிர்கொள்வது என்றுதான் அன்புநாதனுடன் டிஸ்கசன் போனதாகத் தகவல். ஒரு மணி நேரத்துக்குப்பிறகு இரண்டு கார்களும் அடுத்தடுத்து அங்கிருந்து கிளம்பியதாம்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் ஒருவேளை, நத்தம் விஸ்வநாதன் வேட்பாளரானால் திருமங்கலம் ஃபார்முலாவை எல்லாம் மிஞ்சிவிடும் என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு இப்போதே ஆளுங்கட்சி தயாராகிவிட்டது” என்ற தகவலுக்கு செண்ட் கொடுத்தது.

‘‘இதெல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரிந்து நடக்கிறதா… தெரியாமல் நடக்கிறதா?” என்று ஃபேஸ்புக் கேட்ட கேள்விக்கு, ஸ்மைலி ஒன்றை மட்டும் பதிலாகப்போட்டு ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *