xடாப் ஸ்லிப் 3: ஆனைமலையின் மரங்கள் வீழ்ந்த கதை!

public

எஸ்.எஸ்.மணி

பிரிட்டிஷ் அரசு இந்த மரங்களின் உறுதித் தன்மையை அறிய ஒரு குழுவை அனுப்பியது. ஆய்வுகள் தொடங்கின. ஐரோப்பிய நாடுகளிலிருந்த ஓக் மரங்களைப் போலவே உயரமும் வலிமையும் கொண்டிருந்ததால், ஆனைமலைக் காடுகளிலிருந்த தேக்கு மரங்களை “இண்டியன் ஓக்” என்று குறிப்பிட்டு பிரிட்டிஷ் அரசிக்கு அறிக்கை கொடுத்தனர்.

உடனடியாக ஆனைமலையிலிருந்த இண்டியன் ஓக் மரங்களை வெட்டும் வேலையைத் துவக்கியது பிரிட்டிஷ் அரசு. இதற்காக, பொள்ளாச்சியிலிருந்து மலையின் அடிவாரம் வரை தெற்காகவும் மேற்காகவும் சாலைகள் அமைத்தனர். பின்னர், மலை மீது மக்களை ஏற்றி அங்கே உயர்ந்தோங்கி வளர்ந்திருந்த மரங்களையெல்லாம் வெட்ட உத்தரவிட்டனர்.

மரம் வெட்டிக்கொண்டிருக்கும்போதே தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு போன்ற பயிர்களை நட்டு வளர்ப்பதற்கு ஏற்ற இயற்கையான சூழல் இம்மலைப்பகுதியில் இருப்பதை கிழக்கிந்திய கம்பெனியின் பெரும் முதலாளிகள் உணர்ந்தனர்.

வணிகர்களுக்கே உரித்தான பண்ட மாற்று முறையில் தங்களுக்குத் தேவையான சில சலுகைகளைப் பெற இங்கிலாந்து அரசியுடன் ஒப்பந்தம் போட்டனர்.

அதன்படி, இம்மலைப்பகுதியிலிருந்த காடுகளை அழித்து, மரங்களை வெட்டி, அரசிக்குப் பரிசாகக் கொடுத்தனர். அதே வேளையில், மரங்கள் வெட்டப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் நிலங்களைச் சீர்படுத்தித் தேயிலைத் தோட்டம் அமைக்க அந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமையை ஆங்கிலேய அரசிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனியினர் பெற்றனர்.

இப்படியாக ஆண்டாண்டு காலமாகத் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக இருந்த மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்த மரங்கள் பலவும் வெட்டி அழிக்கப்பட்டு, அங்கிருந்த பெரும் நிலங்களெல்லாம் பிரிட்டிஷ் முதலாளிகளின் கைவசமாயின.

வால்பாறை பகுதிகளிலும், அதன் பின்புறத்தில் கொடைக்கானல் மற்றும் மூணாறு மலைச்சரிவிலும் இப்போது உள்ள தேயிலைத் தோட்டங்கள் அனைத்துமே அந்தக் காலகட்டத்தில் இயற்கையான காடுகளை அழித்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட “எஸ்டேட்” எனப்படும் பசும் பாலைவனங்கள்.

தற்போது பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களின் தேநீர் குடிக்கும் பழக்கம் அதிகரித்துக்கொண்டே வருவதன் விளைவாக, இந்த மலைப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் வளர்ச்சியும் காடுகள் அழிக்கப்படுவதும் அதிகரித்துவருகின்றன. இதனால்தான் நாளுக்கு நாள் மழைப்பொழிவும் குறைந்துவருகிறது.

மலைமேலிருந்த நிலங்களெல்லாம் ஆங்கிலேயர்களின் சொத்தானதைப் போலவே, மலையின் கீழேயிருந்த காடுகளிலிருந்த மரங்கள் வெட்டப்பட்டு அந்த நிலங்கள் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த இந்திய ஒப்பந்த (ஜாமீன்) தாரர்களின் கைக்குப் போனது.

ஆனைமலைக்கு மேற்கிலுள்ள மலை, மக்கள் நேராக ஏற முடியாத அளவுக்குச் செங்குத்தாக இருந்ததால், சுற்றி வளைத்து சேத்துமடை வழியாக மக்கள் ஏற்றப்பட்டனர்.

பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவிலிருந்த காடுகளில் உயர்ந்தோங்கிய தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு மலை உச்சியிலிருந்த ஒரு சமதளத்தில் கொண்டுவந்து அடுக்கப்பட்டன.

சாலை வசதியில்லாத மலைப்பகுதியில், 2000 அடி உயரத்திலிருந்த அந்த மரங்களைக் கீழே கொண்டுவர ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் தான் “ஆப்ரேஷன் டாப் ஸ்லிப்”.

ஆபரேஷன் டாப் ஸ்லிப் நடவடிக்கையின்படி மலை உச்சியிலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் ஒரு பள்ளத்தின் வழியாக மரத்துண்டுகளை ஒன்றின் மீது ஒன்றாகக் கீழே தூக்கிப் போட்டனர்.

இப்படிப் பள்ளத்தாக்கில் போடப்பட்ட ஆயிரக்கணக்கான மரத்துண்டுகள் ஒன்றோடு ஒன்று மோதி, முட்டி, சரிந்து கீழே நிலத்தில் வந்து விழுந்தன.

இப்படி மலை முகட்டிலிருந்து மரங்களைக் கீழே தள்ளப்பட்ட இடத்திற்கு “டாப் ஸ்லிப்” (Top Slip) என்று பெயர் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் முகாமிட்டுத் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் தங்களின் வெளியுலகத் தொடர்பு வசதிக்காக முதன் முதலாக இங்கே துவங்கிய ஒரு அஞ்சலகத்திற்குத் தான் “டாப் ஸ்லிப்” என்ற பெயர் அதிகாரபூர்வமாகச் சூட்டப்பட்டது.

இப்போதுள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்குப் பக்கத்திலுள்ள பள்ளம்தான் அந்த காலகட்டத்தில் மரங்களைக் கீழே தள்ளிவிடும் வழியாக இருந்துள்ளது.

ஒன்றின் மீது ஒன்றாகப் போடப்பட்ட அந்த மரங்கள் சர்க்கார் பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகிலிருந்த ஒருபள்ளத்தில் சரிந்து வந்து விழுந்துள்ளது.

அங்கிருந்து இந்த மரங்களை எடுத்து மாட்டு வண்டியின் மூலமாக அங்கிருந்து சுப்பேகவுண்டன்புதூருக்குக் கொண்டுவரப்பட்டு ஓரிடத்தில் சேமித்து வைக்கப்பட்டன.

பின்னர் அங்கிருந்து புகைவண்டி மூலமாக கொச்சின், எர்ணாகுளம் துறைமுகத்துக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காகவே ஆனைமலை ரோடு ரயில் நிலையம் துவங்கப்பட்டது.

பாறை இடுக்குகளில் சிக்கும் நூற்றுக்கணக்கான மரங்கள், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் உப்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்போது தண்ணீரில் மிதந்து வரும்.

அம்பராம்பாளையம் அருகிலுள்ள ஆற்றின் வளைவொன்றில் ஆட்களை நிறுத்தி வைத்து, தண்ணீரில் வந்து கரையொதுங்கும் மரங்களையெல்லாம் அங்கே சேகரித்து வைத்து பின்னர் ரயில் மூலம் வெளியே அனுப்பியுள்ளனர்.

ஆனைமலைக் காடுகளில் வெட்டவெட்டக் குறையாமலிருந்த மரங்களை வெட்டி வெளியே கொண்டுவர முடியாத நிலையில், 1850ஆம் ஆண்டு, கேப்டன் மைக்கேல் என்பவரால், டாப் ஸ்லிப்பிலிருந்து வால்பாறைக்குச் செல்லும் வழியிலுள்ள சிச்சுழி என்ற இடம் வரை 11 கி.மீ. நீளத்திற்கு ஒரு பாதை அமைக்கப்பட்டது.

1856இல், கேப்டன் கோஷ்லிங் என்பவரால், இப்போதுள்ள பரம்பிக்குளம் செல்லும் வழியிலும் ஒரு புதிய பாதை அமைத்துள்ளார்.

இந்த வழியில், யானைகளால் கட்டியிழுக்கப்பட்ட தண்டவாளத்தில் செல்லும் ஒருவகை ரயில் பெட்டிகள் மூலம் மரங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

இதற்காகவே பல காட்டு யானைகளைப் பிடித்து, காடர் இன மக்களைக் கொண்டு அவற்றுக்குப் பயிற்சி கொடுத்து வளர்த்துள்ளனர். இப்போதுள்ள, கோழிகமுக்கி, வரகளியாறு என்ற இரு இடங்களில் தமிழ்நாடு வனத்துறையால் பராமரிக்கப்படும் யானைகள் வளர்ப்பிடமும் ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்டது.

1856இல் ஏற்பட்ட சிப்பாய் கலகத்தைத் தொடர்ந்து, கிழக்கிந்திய கம்பெனியின் வசமிருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அதிகாரமும் நிர்வாகமும் பிரிட்டிஷ் அரசின் கைக்குப் போயின.

இந்த நேரத்தில், கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிட்டிஷ் அரசின் நாடு பிடிக்கும் எண்ணம் மாறி தாங்கள் ஏற்கனவே கைப்பற்றிய நிலப்பகுதிகளில் ஆட்சி அதிகாரத்தை நிர்வாகிக்கும் பொறுப்புக்கு வந்தனர்.

அவர்களின் நிர்வாக வசதிக்காக இத்தியா முழுவதும் ரயில் பாதை அமைக்கவும், ராணுவத்தின் தேவைக்குத் தொலைபேசி தொடர்புகளை ஏற்படுத்தவும் வேண்டிய அவசியம் ஆங்கில அரசுக்கு ஏற்பட்டது.

ரயில் தண்டவாளத்தில் போடும் ஸ்லீப்பர் கட்டைகளுக்காகவும், இரயில் பாதை ஓரங்களில் நடப்படும் தந்தி கம்பங்களுக்காகவும் நெடிய, பலமான மரங்களும், மரத் துண்டுகளும் மீண்டும் இந்திய – பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்பட்டது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு என்று சொல்லப்பட்ட போதிலும், இங்கிலாந்தின் மறைமுகத் தேவைக்காக ஆனைமலையில் மீதமிருந்த கொஞ்சம் மரங்களும் ஆங்கிலேயர்களின் கோடாலிக்குப் பலியானயின.

[டாப் ஸ்லிப்: மீண்ட சொர்க்கம்](https://www.minnambalam.com/k/2019/04/26/20)

[டாப் ஸ்லிப்: நாடு வீழ்ந்ததால் காடும் அழிந்தது!](https://www.minnambalam.com/k/2019/04/27/25)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *