Nகலெக்டருக்கு எதிராக வாரன்ட்!

Published On:

| By Balaji

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையனுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 24) வாரன்ட் பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் திட்டத்தின் கீழ் சிப்காட் வளாகம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கு ஒரு சென்ட்டுக்கு 5,500 ரூபாய் வழங்க காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தாரர் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஒரு சென்ட்டுக்கு 10,325 ரூபாய் வழங்க 2012இல் உத்தரவிடப்பட்டது. இவ்வாறு உயர்த்தப்பட்ட தொகையின் அடிப்படையில் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நில உரிமையாளரான ஆனந்த் குமார் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தார். தாமதமாக விண்ணப்பித்ததாக இவரது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் நிராகரித்துள்ளார்.

இதை எதிர்த்து ஆனந்த் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதும் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஆனந்த் குமார் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். ஆனால் நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share