நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் திருநங்கைகளுக்கான நல்வாழ்வு வாரியம் அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்தது. அதில்,” திருநங்கைகள் சமூக, கலாசார ரீதியாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க சட்டம் இயற்றினாலும், கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் இன்னும் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. போலீசாரும் திருநங்கைகளை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் திருநங்கைகள் நல வாரியத்தை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். திருநங்கைகள் மற்றவர்களைப் போலவே கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று(ஏப்ரல் 12) தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயாசுகின், இது ஒரு முக்கியமான விஷயம். திருநங்கைகளின் சமூக நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண திருநங்கைகளுக்கான நல்வாழ்வு வாரியம் தேவை என்று வாதாடினார்.
”மேலும், 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 4.87 லட்சம் திருநங்கைகள் உள்ளனர். அதில், 57.06 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.
திருநங்கைகள் பெரும்பாலும் பள்ளி ,வேலை, மற்றும் அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் கடுமையான பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். அவர்களின் பாலின அடையாளத்தின்படி வாழவும் மரியாதைக்குரியவர்களாக நடத்தப்பட வேண்டும். திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டாலும், அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. திருநங்கைகள் சமூகத்தில் களங்கம் மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்வது மட்டுமில்லாமல், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான வாய்ப்புகளே அவர்களுக்கு உள்ளது.
திருநங்கைகளின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. பெரும்பாலோனார் வாடகை இடங்களில்தான் வசிக்கின்றனர். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2017 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 79 சதவீத திருநங்கைகள் வாடகை இடங்களில் வசிக்கிறார்கள் அல்லது மற்றவர்களுடன் தங்குமிடங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 52.61 சதவீதம் பேர் ரூபாய் 10,000க்கும் குறைவான மாத வருமானத்தைக் கொண்டவர்கள்” என தெரிவித்தார்.
இதையடுத்து, திருநங்கைகளுக்கான நல்வாழ்வு வாரியம் அமைப்பது குறித்தும், அவர்களுக்கு எதிராக போலீசார் நடத்தும் வன்முறைகளை தடுக்க ஒரு குழுவை நியமிப்பது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
**வினிதா**
�,