இரண்டாண்டுகளுக்குப் பிறகு கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவில் பங்கேற்க திருநங்கைகள் அதிக அளவில் கூவாகம் வந்துள்ளனர்.
முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் இருந்த நிலையில் மாவட்டம் பிரிவினையின்போது இந்தக் கிராமம் விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது.
கூவாகம் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமை வாய்ந்ததுமான கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் திருநங்கைகள் லட்சக்கணக்கில் கலந்துகொள்வார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் கடந்த இரண்டாண்டுகளாக கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா நடத்தப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கூவாகம் திருவிழா நடைபெறுகிறது.
இந்த சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாளை (ஏப்ரல் 19) சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் திருநங்கைகள் தங்களை மணப்பெண்கள்போல் அலங்கரித்துக்கொண்டு கோயில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். மறுநாள் (ஏப்ரல் 20 – புதன்கிழமை) சித்திரை தேரோட்டம் நடக்கிறது.
இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். இவர்கள் சாலைகளில் ஒய்யாரமாக வலம் வருகின்றனர்.
இவர்களை பார்ப்பதற்காக ஏராளமான இளைஞர்கள் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் முன்பு உலா வருகின்றனர். இதனால் கூவாகம் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.
**-ராஜ்**
.