Tதூய்மைப் பணியில் புதுக்கோட்டை!

public

புதுக்கோட்டை நகரைத் தூய்மையான நகரமாக்கும் முயற்சியில் நகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அம்முயற்சிகளில் ஒன்றாக நகராட்சி நிர்வாகம், பல வருடங்களாகக் குவிந்து கிடக்கும் குப்பை மேட்டிலிருந்து தன் பணியைத் தொடங்கியுள்ளது.

இது பற்றி நகராட்சி அலுவலர்கள் கூறும் விவரங்கள் வருமாறு: புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இந்நகரில் ஒரு நாளுக்கு 70 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் பல வருடங்களாகப் புதுக்குளம் அருகே, திருக்கட்டளை சாலையில் உள்ள 13 ஏக்கர் நிலப்பரப்பில் சேமிக்கப்படுகின்றன. 65 லட்சம் கனமீட்டர் அளவுள்ள இந்தக் குப்பைக் கிடங்கில், குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக, வடமாநிலத்தைச் சேர்ந்த 14 குடும்பங்களைத் தூய்மை பணியில் அமர்த்தி, இந்தக் குப்பையிலிருந்து வாரந்தோறும் 20 மெட்ரிக் டன் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு, கழிவுகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

குப்பைகளில் உள்ள கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர் அட்டை, தேங்காய் ஓடு, இரும்பு, தகரம் ஆகியவற்றைச் சாக்குகளில் சேகரித்துவைத்து, மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்துவருகிறார்கள். இதன்மூலம், அவர்களுக்கு வாரம்தோறும் நபர் ஒருவருக்கு 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய்வரை வருமானம் கிடைத்துவருகிறது.

நகராட்சி நிர்வாகம், தூய்மைப் பணி மேற்கொள்பவர்களின் பாதுகாப்பு கருதி தலைக்கவசம், கையுறை, காலுறை ஆகியவற்றோடு இருப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவற்றையும் வழங்கியுள்ளது. இப்பணிகள் தடையில்லாமல் தொடர்ந்து நடைபெறுவதால், குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்பட்டுள்ள பழைய குப்பைகளின் விகிதம் குறைவதுடன் நிலம், நீர் மற்றும் காற்றின் மாசுபாடுகள் வெகுவாகக் குறையும் என்று நகராட்சி நிர்வாகத்தால் கணிக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், ரூ.8 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு 2015- 2016ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கியுள்ளது. மக்கும் குப்பை மற்றும் மறுசுழற்சிக் குப்பைகளைப் பிரித்தெடுக்கவும், மக்கும் குப்பைகளைச் சிறிய துகள்களாக்கவும், மக்கிய உரங்களைச் சலிக்க மிஷின்களும் கொண்டு பல்வேறு நிலைகளில் குப்பைகள் தனித்தனியாகப் பிரித்து எடுக்கப்படுகின்றன.

இதில் பிளாஸ்டிக் , பாட்டில்கள், டயர், இரும்புப் பொருள்கள், காகித வகைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் பை வகைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் மிஷின்கள் மூலம் துண்டாக்கப்பட்டு, நகராட்சியில் தார்ச்சாலைகள் அமைக்கப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மேலும், மறுசுழற்சிக் கழிவுகள் விற்பனைமூலம் வாரந்தோறும் பெறப்படும் தொகை ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்குப் பகிர்ந்து வழங்கப்படுவதால், அவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வருமானம் ஒருபுறம் இருந்தாலும், அவர்களின் சுகாதாரத்தையும் நகராட்சி நிர்வாகம் மூலம் கவனித்துவருகிறோம்” என்று நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் கூறினார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *