சாத்தான்குளம் : அன்று காவல் நிலையம்- இன்று காவலர் குடியிருப்பு!

public

கள ஆய்வும் கட்டுரையும்: ச.மோகன்

தமிழகத்தையே பதை பதைக்க வைத்த காவல் சித்ரவதையில் தந்தை-மகன் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணமடைந்து இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில், மீண்டும் சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் சித்ரவதையை அரங்கேறியிருப்பது குடிமைச் சமூகத்தினிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் சேவியர், சார்பு-ஆய்வாளர் ராஜா ஆகிய இருவரும் மீண்டும் காவல் சித்ரவதையைத் தொடர்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்குச் சான்று பகரும் விதமாக இறந்து போன பென்னிக்சின் நண்பர் மார்ட்டின் என்பவர் சித்ரவதைக்குள்ளானதை அவர் மனைவி வீடியோ மூலம் பரவலாக வெளியிட்ட சேதி தூத்துக்குடி மாவட்ட நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இலவச சட்ட உதவி மையம் மூலம் நீதித்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

**சம்பவச் சுருக்கம்**

சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் மார்ட்டின்(43) த/பெ செல்லையா. இவருக்கும் இவரது வீட்டிற்கு அருகிலுள்ள மைதீன் மீரான் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. மைதீன் மீரானின் உறவினரும், பிரண்ட்ஸ் ஆப் போலீசுமான சுல்தான் பாபு இது பற்றி மார்ட்டினிடம் பஞ்சாயத்து செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 23.8.2020 அன்று நண்பகல் சுமார் 1.30 மணிக்கு மைதீன் மீரானுக்கும், மார்ட்டினுக்கும் கைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக முற்றியது. அப்போது மைதீன் மீரானையும், சுல்தான் பாபுவையும் சேர்த்து மார்ட்டின் தரக்குறைவாகப் பேசி மிரட்டியதைக் கைபேசியில் மைதீன் மீரான் பதிவு செய்துள்ளார். இதைக் கேட்டு, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அடிப்படையில் காவல்துறையில் செல்வாக்குள்ள சுல்தான் பாபு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.

இப்புகாரின் அடிப்படையில் **காவல் ஆய்வாளர் சேவியர், சார்பு-ஆய்வாளர் ராஜா ஆகிய இருவரும் சீருடையுடன் 23.8.2020 அன்றே இரவு சுமார் ஏழு மணிக்கு மார்ட்டின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கோபாவேசத்துடன் தேடுகின்றனர். இதனைப் பார்த்து மார்ட்டினின் பத்து வயதுக் குழந்தை மதன் மிகவும் பயந்து நடுங்குகிறது.** அப்போது மார்ட்டின் வீட்டில் இல்லை என்பதால் திரும்பிச் சென்று விடுகின்றனர். உடனே மார்ட்டின் மனைவி சரோஜா (38) தன் கணவருக்குப் போன் செய்து போலீஸ் தேடி வந்த தகவலைத் தெரிவிக்கிறார். இரவு சுமார் எட்டு மணிக்கு மார்ட்டின் வீட்டிற்கு வந்து நிலைமை அறிந்து இரவில் வெளியே தங்க முடிவு செய்கிறார். வீட்டிலிருந்து ஒரு ஆட்டோவில் ஏற முயற்சிக்கிறார். அந்நேரம் **காவல் ஆய்வாளர் சேவியர், சார்பு-ஆய்வாளர் ராஜா இவர்களுடன் சுமார் நான்கு காவலர்கள் ஒரு தீவீரவாதியைச் சுற்றி வளைப்பது போல் மார்ட்டினைச் சுற்றி வளைத்து அவர் மனைவி, குழந்தைகள் கண்முன்னாலேயே அவரை அடித்துச் சித்ரவதைச் செய்து காவல் வண்டியில் (சுமோ) ஏற்றிச் சென்றுள்ளனர்.**

இதைத் தற்செயலாகப் பார்த்த மார்ட்டினின் தம்பி பொன்பாண்டி ஏதுமறியாது திகைத்து, மிகவும் பதறிப் போய்த் தனது இரு சக்கர வாகனத்தில் போலீசாரைப் பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஆனால் மார்ட்டினைக் கைது செய்த போலீசார் அவரைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லாமல் காவலர் குடியிருப்புக்குக் கொண்டு சென்றதைக் கண்ட பொன்பாண்டி பயந்து போய் அங்கிருந்து திரும்பி நேராக வக்கீல் சுரேஷ் என்பவரிடம் விவரத்தைக் கூறியுள்ளார்.

**குற்றவியல் நடுவருக்குத் தகவல்**

ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல் மரணத்திற்குப் பின் அப்பகுதியில் சட்டவிரோதக் கைது அல்லது சித்ரவதையைக் காண நேர்ந்தால் உடனே குற்றவியல் நடுவருக்குக் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்ஆப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மார்ட்டின் பற்றிய தகவல் குறுஞ்செய்தி மூலம் குற்றவியல் நடுவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு நில்லாமல் வக்கீல் சுரேஷும், பொன்பாண்டியும் இரவு சுமார் ஒன்பது மணிக்குச் சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளனர். **உடனே குற்றவியல் நடுவர் சரவணன் அவர்கள் இரவு சுமார் ஒன்பதரை மணிக்குச் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார்.** அப்போது அங்குக் காவல் ஆய்வாளர் இல்லை. காவலர் குடியிருப்பில் இருப்பதாக அங்கிருந்த காவலர் கூறினார்.

உடனே நீதிமன்ற அலுவலரை அழைத்து காவலர் குடியிருப்புக்குச் சென்று காவல் ஆய்வாளரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். நீதிமன்ற அலுவலருடன் பொன்பாண்டியும் உடன் சென்றுள்ளார். தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் அங்கிருந்து நடந்தே காவல் நிலையம் வந்துள்ளார். **குற்றவியல் நடுவர் காவல் ஆய்வாளர் சேவியரிடம், “மார்ட்டின் எங்கே?: என்று கேட்டுள்ளார். உடனே காவல் ஆய்வாளர், “ நான் மார்ட்டினைக் கைது செய்யவில்லை, அவர் மீது நிறைய வழக்குகள் உள்ளன. அவரைத் தேடி வருகிறோம்” என்று பதிலளித்துள்ளார். இதைப் புரிந்து கொண்ட குற்றவியல் நடுவர் காவல் ஆய்வாளரிடம் நாளை மார்ட்டினை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று கண்டிப்புடன் கூறிச் சென்றுவிட்டார்.**

இதனால் சற்று சுதாரித்துக்கொண்ட காவல் ஆய்வாளர் அங்கிருந்து காவலர் குடியிருப்புக்குச் சென்று அங்கிருந்த சார்பு-ஆய்வாளர், காவலர்கள் ஆகியோரிடம் மார்ட்டின் பிரச்சனைக் குற்றவியல் நடுவரிடம் சென்று விட்டது. எனவே இனிமேல் மார்ட்டினை அடிக்காதீர்கள் என்று எச்சரித்துள்ளார். கைது செய்யப்பட்ட பின் காவலர் குடியிருப்பினுள் வைத்து மார்ட்டின் எவ்வாறு காவலர்களால் சித்ரவதை செய்யப்பட்டார் என்பதை அவரே கூறினார்.

**மார்ட்டின் வாக்குமூலம்**

தற்போது 30.8.2020 முதல் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சிகிச்சை பெற்று வரும் மார்ட்டினை மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை கண்டறியும் குழு நேரில் சந்தித்த போது அவர் கூறியதாவது…

“கடந்த 23.8.2020 அன்று என்னைச் சட்ட விரோதமாகக் கைது செய்த போலீசார் சாத்தான்குளம் காவலர் குடியிருப்பில் என்னை ஒரு தீவீரவாதியைப் போல் இரும்புச் சங்கிலியால் பிணைத்துக் கட்டினர். **எஸ்.ஐ- ராஜா என்னைச் சம்மணம் போட்டு உட்காரச் சொல்லி எனது இரண்டு தொடைகளின் மீதும் பூட்ஸ் காலால் ஏறி நின்று எனது உச்சந் தலைமுடியைப் பிடித்து ஓங்கி, ஓங்கி இழுத்தார். உயிர் போகிற மாதிரி வலி ஏற்பட்டது.** தாங்க முடியாமல் அலறித் துடித்தேன். எஸ்.பி ஏட்டு சபாபதியும், இன்ஸ்பெக்டர் டிரைவர் சின்னத்துரையும் லத்திக் கம்பால் என்னை முதுகிலும், இரு தொடையிலும் ஈவிரக்கமின்றி அடித்துச் சித்ரவதைச் செய்தனர். வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தேன்.

சாத்தான்குளம் கோர்ட் மாஜிஸ்ட்ரேட் கூப்பிடுகிறார் என்று ஒருவர் இன்ஸ்பெக்டரிடம் கூறிய பின்னர் எனக்கு அடி விழவில்லை. ஆனால் அதற்குப் பின் **என்னைக் காவலர் குடியிருப்பினுள் வேறொரு இடத்திற்கு என்னை இரும்புச் சங்கிலியுடன் தரையில் போட்டு இழுத்துச் சென்றனர். அதனால் எனது இருகால்களும் தரையில் உரசியதால் முழங்கால்களில் சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது. அடிபட்ட வலி, காயத்தின் வலி ஆகியவற்றால் இரவு முழுவதும் தூங்கவில்லை.** தரையில் இரும்புச் சங்கிலியுடன் சுருண்டு படுத்துக் கிடந்தேன். மறுநாள் 24.8.2020 காலை சுமார் ஒன்பது மணிக்கு எஸ்.பி ஏட்டு சபாபதி கதவைத் திறந்து உள்ளே வரும்போது, ‘செத்துட்டானா? இல்லை உயிரோடு இருக்கிறானா?’ என்று கூறிக்கொண்டே என் வலது கால் தொடையில் மிதித்தார். என்னைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லாமல் காவலர் குடியிருப்பில் வைத்தே எல்லா பேப்பரிலும் கையெழுத்து வாங்கினார்கள்.

‘போலீஸ் அடித்ததாக டாக்டரிடமோ அல்லது மாஜிஸ்ட்ரேட்டிடமோ சொன்னால் திரும்பவும் இங்கே கூட்டிக் கொண்டு வந்து ஜெயராஜ்-பென்னிக்ஸ் ரெண்டுபேருக்கும் ஏற்பட்ட கதி தான் உனக்கு ஏற்படும், எனவே காயம் பற்றிக் கேட்டால் கீழே விழுந்து விட்டேன் என்று சொல்லவேண்டும்’ என எஸ்.ஐ ராஜா என்னை மிரட்டினார். இதற்கிடையில் என் மனைவியைக் காவலர் குடியிருப்புக்கு வரவழைத்து நான் உடல் நலத்துடன் இருப்பதாகக் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். என் உடலில் உள்ள காயங்களைப் பார்த்த என் மனைவி என் கணவரை நீங்கள் கைது செய்யும் போது இந்தக் காயங்கள் அவர் உடலில் கிடையாது. நீங்கள் ஏன் கணவரை அடித்துச் சித்ரவதைச் செய்து காயப்படுத்தியுள்ளீர்கள். நான் கையெழுத்துப் போட மாட்டேன் என்று மறுத்தார்.

இதனால் கோபமடைந்த எஸ்.ஐ ராஜா என்னைப் பார்த்து முறைத்து என் மனைவியைக் கையெழுத்து போடச் சொல்லுமாறு மிரட்டினார். **கையெழுத்துப் போடவில்லை என்றால் என்னை மீண்டும் மீண்டும் கொடூரமாகச் சித்ரவதைச் செய்வார்கள் என்று என் மனைவிடம் கெஞ்சிக் கையெழுத்துப் போடச் சொன்னேன்.** அதன் பின்னரே என் மனைவி அந்த பேப்பரில் கையெழுத்துப் போட்டார். நண்பகல் சுமார் பன்னிரெண்டரை மணிக்கு என்னைக் காவலர் குடியிருப்பில் இருந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் இல்லை. கம்பவுண்டர் மட்டும் தான் இருந்தார். டாக்டர் எங்கோ வெளியே சென்றிருப்பதாகக் கூறினார். பின்னர் என்னை டாக்டர் இருக்குமிடத்திற்குப் போலீசார் கூட்டிச் சென்றனர்.

என்னைப் பரிசோதித்த டாக்டர் காலில் என்ன காயம் என்று கேட்டார். நான் எஸ்.ஐ ராஜா சொல்லிக்கொடுத்த மாதிரியே கீழே விழுந்து விட்டேன் என்று சொன்னேன். அதை நம்ப மறுத்த டாக்டர் என்னைச் சட்டையைக் கழற்றச் சொல்லி உடல் முழுவதும் காயங்கள் இருப்பதைப் பார்த்து ஸ்கேன் எடுக்கச் சொல்லி திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்குப் போகச்சொன்னார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு மாலை சுமார் நாலு மணிக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர், ‘இது சாத்தான்குளம் கேசா? அந்த வம்பே நமக்கு வேண்டாம். நீங்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள்’ என்று எழுதிக் கொடுத்தனர். அங்கிருந்து மாலை சுமார் ஆறரை மணிக்குத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டரும் இது சாத்தான்குளம் கேசா? என்று மிரட்சியுடன் பார்த்தார். உடல் முழுவதும் இருந்த காயத்தைப் பார்த்து விட்டு உள் நோயாளியாக என்னை அனுமதித்தார். இதைக் கேட்ட போலீசாருக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.

ஒருவித பயத்துடன் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர். 24.8.2020 முதல் 28.8.2020 வரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சிகிச்சைப் பெற்றேன். 28.8.2020 அன்று மதியம் என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள். அங்கிருந்து **என்னை ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்ட்ரேட்டிடம் கொண்டு சென்றனர். “போலிசார் உன்னை அடித்தார்களா?” என்று மாஜிஸ்ட்ரேட் கேட்டார். நான் ஆம் என்று சொல்லி நடந்ததை அப்படியே அவரிடம் சொன்னேன்.** எஸ்.ஐ ராஜாவைப் பார்த்து மாஜிஸ்ட்ரேட் கேட்ட கேள்விகளுக்கு அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை. மாஜிஸ்ட்ரேட் என்னை பெயிலில் விடுவித்து ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெறுமாறு கூறினார்.”

**மார்ட்டினின் மனைவி சரோஜாவின் வீடியோ பதிவு**

தன் கண்முன்னே தன்னுடைய கணவரைக் காவலர்கள் அடித்துச் சித்திரவதை செய்து இழுத்துப் போனதை நேரில் கண்டு பயந்து போன மார்ட்டினின் மனைவி சரோஜா, தன் கணவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்ற நோக்கில் துணிச்சலாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. தூத்துக்குடி மாவட்ட நீதிபதியின் கவனத்தை எட்டியது. உடனே இதை விசாரிக்க மாவட்ட இலவச சட்டஉதவி மையத்தின் மாஜிஸ்ட்ரேட்டுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் மார்ட்டினிடம் வாக்குமூலம் பெற்றுச் சென்றார்.

**எஸ்.ஐ ராஜாவின் காவல் அதிகாரம்**

இதற்கு முன் எஸ்.ஐ ராஜா தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது ஆகும். இங்கு மக்கள் குறை தீர்க்கும் நாளில் வருவோரிடம் தேவையில்லாமல் மிகுந்த கெடுபிடியுடன் எஸ்.ஐ ராஜா நடந்து கொள்வது கண்டு சக காவலர்களே முகஞ் சுளிப்பார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பண்டாரம்பட்டி கிராம மக்கள் குரல் கொடுக்கும் போதெல்லாம் மிகுந்த கோபத்துடன் மக்களை எச்சரிப்பார் என்று அக்கிராமத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண் ஒருவர் கூறினார். எஸ்.ஐ ராஜாவிடம் ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்ட்ரேட் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலும், அவருடைய உடல் மொழியும் விரும்பத்தகாததாக இருந்தது என்று நீதிமன்ற ஊழியர்கள் பேசிக்கொண்டதை வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார். எஸ்.ஐ ராஜாவின் நடத்தை குறித்து மாஜிஸ்ட்ரேட் வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

**காவல்துறையின் மீறல்கள்:**

காவல்துறையின் கட்டுப்பாட்டில் மார்ட்டின் இருக்கும் போது குற்றவியல் நடுவரிடம் காவல் ஆய்வாளர் மார்ட்டினைத் தேடி வருகிறோம் என்று பொய்யான தகவல் கூறுகிறார். உடனே குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 97 இன் படி தேடுதல் மனு (எண்:2153/2020)ஒன்றை மார்ட்டினின் வழக்கறிஞர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னரே காவல்துறையினர் மார்ட்டினை நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். **சட்டத்தின் அதிகாரத்தில் ஒருவரைக் காவல் அதிகாரி கைது செய்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது புலன் விசாரணைச் செய்வதற்குத் தானே தவிர, அவரை அடித்துச் செய்வதற்கு அல்ல.** இத்தகைய சித்ரவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 22 இன் படி அடிப்படை மனித உரிமை மீறலாகும். மார்ட்டின் மீது குற்ற எண்:341/2020 இன் படி பிரிவு 294 (b), 506(II) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏழாண்டு சிறைத் தண்டனைக்குட்பட்ட குற்றமாகும். மேலும் அர்னேஷ் குமார் எதிர் பீகார் மாநில அரசு வழக்கில் (2 ஜூலை 2014 ) உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் ஏழாண்டு சிறைத் தண்டனைக்குட்பட்ட குற்ற வழக்கில் காவல் நிலைய பிணையில் விடலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இங்கு இத்தீர்ப்பைக் காவல் அதிகாரிகள் மீறியுள்ளனர்.

**காவல் துறையின் பொதுப்புத்தி**

சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் மரணம் அடைந்து அந்த அழு குரல் ஓயாது இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில் அதே காவல் நிலையத்தில் சித்ரவதைக் கொடூரம் தொடர்கிறது என்றால் அரசின் கண்டும் காணாத மெத்தனப் போக்கே ஆகும். பிரண்ட்ஸ் ஆப் போலீசின் ஆதிக்கமும், செல்வாக்கும் இன்னும் சாத்தன்குளம் காவல்நிலையத்தில் முன்பை விட வீரியமாய்த் தொடர்கிறது என்பதற்கு மார்ட்டினுக்கு ஏற்பட்ட காவல் சித்ரவதையே சான்று பகர்வது வெளிப்படை. மார்ட்டின் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன என்று காவல் ஆய்வாளர் மாஜிஸ்ட்ரேட்டிடம் கூறுவதும், இதைக் கேள்விப்பட்ட உயர் காவல் அதிகாரிகளும் இதையே பதிலாகக் கூறுவதும் காவல்துறையின் பொதுப்புத்தி குற்றவாளிகளைச் சித்ரவதை செய்வதை நியாயப்படுத்தும் மனநிலையை வெளிச்சமிடுகிறது.

**உடனடி நடவடிக்கைத் தேவை:**

சட்டத்திற்குப் புறம்பாகக் காவல் துறையின் கட்டுப்பாட்டில் மார்ட்டின் 23.8.2020 முதல் 28.8.2020 ஆறு நாட்கள் இருந்துள்ளார். எனவே இதற்குப் பொறுப்பான காவல் அதிகாரிகள் மீது உடனடியாகத் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பெற வேண்டும். மார்ட்டினைச் சட்ட விரோதக் காவலில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்த காவலர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். காவல் சித்ரவதையால் பாதிப்புற்று சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்ட்டினுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப் பெறல் வேண்டும். **சட்டத்தை மீறும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும், சட்டரீதியான நடவடிக்கையும் கண்டிப்புடன் எடுக்கப்படும்போது தான் இத்தகைய சித்ரவதைகள் மனித உரிமை மீறல்கள் மட்டுப்படும்.** அவை முற்றுப்பெற இன்னும் நீண்ட காலம் இவற்றோடு மனித உரிமைக் காப்பாளர்கள் பயணிக்க வேண்டியுள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *