Sபத்ம விருது: ஸ்டாலின் வாழ்த்து!

public

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பத்ம விருது பெற்றவர்களுக்கும், தேசிய விருதுபெற்ற தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி அவர்களுக்கும் சிறந்த தொலைக்காட்சிகான விருதைப் பெற்ற தந்தி டி.வி. குழும நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: பல துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய குடியியல் விருதுகளான ‘பத்ம விருதுகள்’ பட்டியலில் சரத் பவார், கே.ஜே.யேசுதாஸ் அவர்களுக்கு இரண்டாவது உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ விருது அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அதோடு தமிழகத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு ஆன்மீகப் பணிகளுக்காக ‘பத்மவிபூஷண்’ விருதும், பிரபல ‘துக்ளக்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ‘சோ’ ராமசாமி அவர்களின் மறைவுக்குப் பிறகு ‘பத்மபூஷண்’ விருதும் வழங்கியிருப்பது தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பதாகும்.

கடந்த ஆண்டு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டியில், உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவை கௌரவப்படுத்தும்வகையில் ‘பத்மஸ்ரீ’ விருது அறிவித்திருப்பது பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. சாதனைகளால் உயரம் தொட்டு வரும் இவருக்கு இன்னும் பல உயர்ந்த விருதுகள் தொடர்ந்து வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அதுபோலவே, இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கான சிகிச்சையும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பணிகளையும் தன் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டு மறைந்த மருத்துவர் சுனிதி சாலமன் அவர்களுக்கும், இசைக் கலைஞர் டி.கே.மூர்த்தி, இலக்கியத் துறையைச் சேர்ந்த மைக்கேல் டேனினோ, சமூக சேவைக்காக நிவேதிதா ரகுநாத் ஆகியோருக்கும் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்குப் பெருமைசேர்க்கும்விதத்தில் விருது பெற்றுள்ளவர்களுக்கும், இந்திய அளவில் பத்ம விருதுகள் பெற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் இதழியல் துறையில் எளிய மக்களின் நண்பனாக விளங்குவது தினத்தந்தி நிறுவனம். பெருமைமிக்க அந்த நிறுவனத்தின் தொலைக்காட்சி ஊடகமான தந்தி டி.வி. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர்களுக்கு சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக குடியரசு தின விழாவில் விருதுபெற்றுள்ளமைக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தலைநகர் புதுடெல்லியில் இந்த விருதை மேதகு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வழங்கிட, தந்தி டி.வி. குழும நிர்வாக இயக்குநர் திரு.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார். சென்னை போன்ற இடங்களில், கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ள நிலையில், தந்தி டி.வி-யின் பணி இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஊடகத்துறையில் தந்தி குழுமம் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி, பல விருதுகளைப் பெறவும், மக்கள் நலனில் அக்கறைகொண்ட செய்திகளை தொடர்ந்து வெளியிடவும் வாழ்த்துகிறேன்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை வன்முறையின்றி நடத்தியதற்காக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.ராஜேஷ் லக்கானி அவர்களுக்கு மேதகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் விருது வழங்கியுள்ளார். திரு.ராஜேஷ் லக்கானி அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வன்முறையற்ற தேர்தல் என்பது தமிழகத்தின் பண்பாட்டு அடையாளம். இனிவரும் காலங்களில் ஆளுங்கட்சியின் முறைகேடான தேர்தல் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த இத்தகைய விருதுகள் ஊக்கம் தருவதாக அமையட்டும்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *