rபொய்ச் செய்திக்கு 10 ஆண்டுகள் சிறை: மலேசியா!

public

பொய்ச் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதா மலேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பொய்ச் செய்திகள் என்பது பரவலாக அதிகரித்துள்ளன. சமூக வலைதளங்களில் பரவும் பொய்ச் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயாமல் பலரும் பகிர்வதால் சில நேரங்களில் அசௌகரியமான நிலையும் ஏற்படுகின்றது.

பல்வேறு நாடுகளும் பொய்ச் செய்திகளைக் கட்டுப்படுத்த முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், மலேசியா பொய்ச் செய்திக்கு எதிரான மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. கடந்த திங்களன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் “பொய்ச் செய்தி எதிர்ப்பு மசோதா” தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொய்ச் செய்திகளை வெளியிடுவோருக்கு இந்திய மதிப்பில் 83 லட்சம் அபராதம் அல்லது 10 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்க வாய்ப்புள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம் பொய்ச் செய்திகளின் பெருக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்றும் செய்திகள் மற்றும் தகவல்களைப் பகிர்வதில் பொதுமக்களுக்குப் பொறுப்பை உண்டாக்க முடியும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி பொய்யான செய்தி என்பது செய்தி, தகவல், அறிக்கை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது வீடியோ மற்றும் ஆடியோவாக இருக்கலாம்.

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். அவர்கள் வெளியிடும் செய்தி மலேசியர்களைப் பாதிக்கும் எனில் அவர்களும் இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர். குறிப்பாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தும் எனக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டம் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது என எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் மலேசியாவில் தேர்தல் வரவுள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் அரசுக்கு எதிராக எழுதாதபடி இருக்க அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த மசோதா அமைந்துள்ளது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *