மருத்துவர்கள் வராததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

Published On:

| By admin

மருத்துவ முகாமுக்கு மருத்துவர்கள் வராததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் நடத்தப்படும். அதன்படி நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்கள் குடும்பத்தினர், குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
காலை 8 மணியில் இருந்து மருத்துவப் பரிசோதனைக்காக அவர்கள் காத்திருந்தனர். வழக்கமாக காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு மருத்துவக் குழுவினர் வருகை தருவார்கள். ஆனால் நேற்று மதியம் 12.45 மணி வரை மருத்துவக் குழுவினர் வரவில்லை.
இதனால் கொளுத்தும் வெயிலில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவக் குழுவினர் வராததை அறிந்ததும் ஆத்திரமடைந்தனர்.
பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர்களை அலைக்கழிப்பு செய்வதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளிடம், “விரைவில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அடுத்த முறை காத்திருக்க வேண்டியது இருக்காது” என்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.

**- ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share