pபுதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்!

public

புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (மார்ச் 2) தொடங்கியது. அவை தொடங்கியதும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ், எழுத்தாளர் பிரபஞ்சன், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.2,703 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி அவையில் தாக்கல் செய்து பேசத் தொடங்கினார்.

அப்போது குறுக்கிட்ட அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன், ஏன் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை, 6 நாட்களாக தர்ணா நடத்தியது எதற்காக, ஆளுநருடன் பேச்சுவார்த்தையில் என்ன பேசினீர்கள் என்று கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி எழுந்து, “ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தினீர்கள்? மீண்டும் போராட்டம் நடத்துவேன் என்கிறீர்கள். இங்கு என்ன ஆட்சியா நடக்கிறது? ஆட்சி செய்யத் திறமை இல்லாவிட்டால் பதவியை விட்டு விலகுங்கள்” என்று காட்டமாக கூறினார்.

தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ், அதிமுக மற்றும் நியமன பாஜக எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்துகொண்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். சபாநாயகர் இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காததைக் கண்டித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட்டை வாசித்த முதல்வர் நாராயணசாமி, “சுமார் 1500 காலிப் பணியிடங்கள் புதுச்சேரி அரசின் பல துறைகளில் நேரடி நியமனம் மூலம் 2019 – 20 ஆம் நிதியாண்டில் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுச்சேரி அரசுக்கென அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்ய புதுச்சேரி பணியாளர் தேர்வு வாரியம் ஒன்று புதிதாக அமைக்கப்படும் . புதுச்சேரியில் வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம் துவங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் அறிவித்தார்.

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட நாராயணசாமி, “வெளிநாட்டு பயணிகளுக்கும் உள்நாட்டு பயணிகளுக்கும் புதுச்சேரி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். இந்த ஆண்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சுற்றுலா தொடர்பான அனைத்து திட்டங்களும் முடிக்கப்படும் .தற்போது புதுச்சேரியில் வார இறுதியில் அதாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர் . இதனை மாற்றி அதாவது வார இறுதி சுற்றுலா என்பதற்குப் பதிலாக வாரம் முழுவதும் புதுச்சேரி சுற்றுலா என்ற இலக்குடன் சுற்றுலாத்துறை செயல்படவுள்ளது” என்று கூறினார்.

வரும் ஆகஸ்ட் வரையில் ஐந்து மாதங்களுக்கான செலவுகளுக்கு புதுச்சேரி சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் வைத்தியலிங்கம் அவையை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *