pநிதி நெருக்கடியில் உள்ளாட்சி அமைப்புகள்!

public

தமிழக அரசு வரும் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இல்லையெனில் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், இதனால் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு, பாதாள சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துள்ளன என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டிவருகின்றன. இந்நிலையில், உள்ளாட்சி தனி அலுவலர்களுக்கு மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்யும் சட்டத் திருத்த மசோதா ஜூன் 28 ஆம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் வரும் டிசம்பர் மாதம் வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த தமிழக அரசு தவறியதால் கடந்த ஓராண்டில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூ.3558.21 கோடி நிதி வழங்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக வர வேண்டிய நிதிகளைப் பட்டியலிட்டுள்ள ராமதாஸ், கடந்த நிதியாண்டின் இரண்டாம் பாதி, நடப்பு நிதியாண்டின் முதல் பாதி என ஓராண்டில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3558.21 நிதி மறுக்கப்பட்டிருப்பதால் உள்ளாட்சிகள் மிகக்கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன” என்றும் கூறியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தால் ஜனநாயகத்தின் ஆணி வேராக கருதப்படும் உள்ளாட்சி அமைப்புகள் கருகி விடும் வாய்ப்புள்ளது என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சிகளுக்கான நிதி வழங்கப்படாததின் பாதிப்புகள் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிவிட்டன என்று கூறியுள்ள ராமதாஸ், ”திருச்சி, வேலூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளும், மற்ற நகர, ஊரக உள்ளாட்சி அமைப்புகளும் மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.

”தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்குத் தமிழக அரசு தான் காரணம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் தான் இந்த நிதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு பலமுறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, மத்திய அரசு நிதியை பெற வேண்டும் என்று கடந்த மார்ச் 23 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். தமிழக அரசு நினைத்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி மத்திய அரசு நிதியை வாங்கியிருக்க முடியும். ஆனால், ஊழல் செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டும் அரசு, தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததே சிக்கலுக்கு காரணமாகும்” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

”தமிழகத்தில் அடுத்த இரு வாரங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு தேர்தலை நடத்த எந்தத் தடையும் இல்லை. எனவே, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, நிதியைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடத்த முடியாவிட்டால் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று கூறியுள்ள ராமதாஸ், அதேநேரத்தில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டிற்கான நிலுவைத் தொகை ரூ.1950 கோடியையாவது மத்திய அரசு உடனே ஒதுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *